நடுக்குவாதத்துக்கான உணவுமுறைகள்..
நடுக்குவாத நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள், அதாவது அதிகம் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
எந்தெந்த உணவுகளை உட்கொண்டால் பயன் கிடைக்கும்?
நடுக்குவாத நோயை எதிர்த்து போராட உதவும் 7 வகையான உணவுகள் பிளம்ஸ், காஃபி, கொட்டைகள், அவுரி நெல்லி, குருதி நெல்லி (strawberry, blackberry) மீன் (சால்மன்), குடைமிளகாய், ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1.பிளம்ஸ் : வைட்டமின் ‘ஈ’ அதிகமாக பெற்றுள்ள பிளம்ஸ் ஆக்ஸிஜனேற்ற சேதாரத்திலிருந்து அணுக்களை பாதுகாக்க உதவுகின்றது. பிளம்ஸ் அவற்றின் மலமிளக்கி பண்புகளுக்காகவும், மலச்சிக்கலை தடுத்தும் மலம் வெளியேற்றும் மற்ற கூறுகளுக்காகவும் பெயர் பெற்றவை. நடுக்குவாத நோயாளிகளுக்கு தினமும் மலம் கழிப்பதில் சிரமம் இருக்கும், இதைத் தடுக்க தினமும் முடிந்தளவு பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2.காஃபி : மனரீதியான விழிப்புணர்வை மேம்படுத்த கெஃபைன் உதவுவதால், நீங்கள் ஒரு நாளைக்கு 1 முதல் 2 கோப்பை காஃபி அருந்தினால் மூளைத் தூண்டப்படும்.
3.கொட்டைகள் : வாதுமைக் கொட்டைகள், பாதாம், முந்திரி மற்றும் வேர்க்கடலை போன்றவற்றில் அதிக அளவிலான புரதங்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், இவை மூளையின் செல்களைத் தூண்டி அதிகமான டோபமினை உருவாக்கும்படி செய்கின்றன.
4.அவுரி நெல்லி, குருதி நெல்லி (Strawberry, Blackberry) : உண்மையில் “மருத்துவ பழம்” என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி மற்றும் குருதிநெல்லி அதிகமான எதிர்ப்பு சக்தி, அணுக்கள் சேதமாவதைத் தடுக்கும் சக்தி மற்றும் அழற்ஜி எதிர்ப்பு தன்மைகளை கொண்டுள்ளன. இவை மூளையின் செல்களின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கின்றன.
5.மீன் (சால்மன்) : ஓமேகா-3 உட்பொருளை அதிகமாக கொண்டுள்ள மீன். இந்த மீனில் சில அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. நடுக்குவாத நோய் நாளுக்கு நாள் மோசமாகும் வாய்ப்புடைய நோய். இதற்கு நிரந்தர தீர்வு என்பது இல்லை.
மோசமாகும் காலஅளவை தள்ளிப் போடுவதற்காகவே சில சிகிச்சைமுறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த ஒமேகா. –
6.குடைமிளகாய் : இதில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது மற்றும் நடுக்குவாத நோய் அறிகுறிகளை குறைப்பதற்கான பல பயனுள்ள சத்துக்கள் இதில் உள்ளது.
7.ஆரஞ்சு பழம் : ஆரஞ்சில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது. அதனால் ஆக்ஸிஜனேற்ற சேதாரத்திலிருந்து அணுக்களை பாதுகாக்கிறது. எனவே இவை நடுக்குவாத நோயினால் வரும் பிரச்சினைகளைக் குறைக்கிறது.
எந்தெந்த உணவுகளைத் தவிர்த்தால் பயன் கிடைக்கும்?
சிவப்பு இறைச்சி, முட்டை, கல்லீரல், பால், பாலாடைக்கட்டி(சீஸ்), வெண்ணெய், முட்டைக்கோஸ், கோதுமை, ஓட்டுமீன்(இறால், நண்டு), அகலமான அவரைக்காய், இனிப்புகள், நொறுக்குத் திண்பண்டங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மூளையின் ‘செல்கள்’ சுருங்கி டோபமின் என்னும் நொதியின் செயல் திறன் குறைவதால் வருவதே நடுக்குவாத நோய். அதனாலேயே கை, கால்கள் வேலை செய்யும் திறனை இழந்து, மெதுவாக வேலை செய்கிறது. நாம் உடற்பயிற்சி செய்வதனால் காபா(GABA), செரடோனின், என்டார்ஃபின் ஆகிய நொதிகள் சுரந்து நாம் சுறுசுறுப்புடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இதே போன்றே, நாம் சில பயிற்சிகள் செய்து மூளையை தூண்டும் பட்சத்தில் நோயின் வீரியத்தன்மையைச் சிறிது காலத்திற்கு தள்ளிப் போடலாம்.
நடுக்குவாதத்திற்கான உடற்பயிற்சி மற்றும் இயற்பியல் பயிற்சி பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.