திருச்சி தூய வளனார் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக அருள்முனைவர்கள் மேத்யூ ஜே.மூலேல், சே.ச., இராசநாயகம், சே.ச., ஆ. செபஸ்தியான், ச.இலாசர், சே.ச. ஆகியோரின் பெயரிலான அறக்கட்டளைகளின் சொற்பொழிவு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. தலைமை வகித்தார்.
முனைவர் ஆ. இராஜாத்தி வரவேற்புரையாற்றினார்.
தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி வாழ்த்துரை வழங்கினார். முனைவர் ஜா.பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் அறக்கட்டளை அறிமுக உரை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் தம் தலைமையுரையில், இந்த அருள்தந்தையர்கள் தூய வளனார் கல்லூரிக்குப் பெரும் பணியாற்றி மாணவர்களுக்கு ஏணியாக இருந்து அவர்களின் வாழ்க்கை ஒளிர பணியாற்றியவர்கள். அவர்களின் பெயர்களில் அமைந்த இன்றைய நிகழ்வுக்கு சிறப்புமிக்க பேச்சாளரை தமிழ்த்துறை அழைத்து வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. இது போலக் கிடைக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி, வளர வேண்டும் என வாழ்த்தி தம் தலைமையுரையை நிறைவு செய்தார்.
“பணிவாய்ப்புத்தமிழ்” என்னும் மையப்பொருளில் எழுத்தாளர் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சௌந்தர.மகாதேவன் அவர்கள் உரையாற்றினர். அரசு தேர்வுகளும் தேர்வு முகமைகளும், பணி பொறுப்புகளும் போட்டித் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள், போட்டித் தேர்வுகளில் தமிழ் பெறும் இடம் என்கிற தலைப்புகளில் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மாணவர்கள் தட்டச்சு பழகுவதும் மென்திறனை வளர்த்துக் கொள்வதும் அவசியம் என்று கூறியதுடன் போட்டித் தேர்வுகள்,அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய தெளிவான விளக்கத்தைக் கூறினார். “நீங்கள் தமிழை நம்பினால் தமிழ் உங்களை நம்பும்” எனக்கூறித் தம் உரையை நிறைவு செய்தார்.
நிறைவில் முனைவர் ஷகிலாபானு நன்றியுரையாற்றினார். முனைவர் பட்ட ஆய்வாளர் ஞா.உமா மகேஸ்வரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், தமிழ் இலக்கிய மாணவர்கள் இச்சொற்பொழிவில் பங்கேற்று பயன் பெற்றனர்.
– பெ.ஸ்ரீநிதி , ம.சங்கமித்ரா