சிதிலமடைந்த வீடுகள் – தெருவில் வாழ்க்கை நடத்தும் மக்கள்
கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ் நாட்களைக் கடத்தி வரும் ஆதிதிராவிட காலனி மக்களின் அவலநிலை
பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை – வேதனையுடன் கூறும் மக்கள்
கோவில்பட்டி அருகே பரிதாபம் – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி ஊராட்சியில் உள்ள வடக்கு கோனார் கோட்டையில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 31 வீடுகள் உள்ளன. இந்த காலனியில் வசிக்கக்கூடிய மக்கள் விவசாய பணிகள் மற்றும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். தமிழக அரசினால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
வீட்டின் மேற்க்கூரை பகுதி பெயர்ந்து கம்பிகள் அனைத்தும் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி அவ்வப்போது வீட்டின் சுவர்கள் பெயர்ந்து, விழுந்து வருவதால் அச்சத்துடன் மக்கள் அந்த வீடுகளில் வசித்து வருகின்றனர். சிலர் வீடுகளை காலி செய்து இடம் பெயர்ந்து விட்டனர்.
அந்த வீடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். சமையல் செய்து தெருவில் வைத்து தான் சாப்பிடக்கூடிய சூழ்நிலை, அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் தெருக்களில் தான் மக்கள் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
தாங்கள் வேலை பார்த்து வரும் வருமானம் உணவு மற்றும் குழந்தைகளின் கல்விக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இருப்பதால் தங்கள் வீடுகளை பராமரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம், மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம், எப்போது எது நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம் தமிழக அரசு தங்களது வீடுகளை பராமரிப்பு செய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
வீடுகள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருவதால் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிட கூடாது என்பதற்காக சிலர் தங்களது குழந்தைகளை வெளியூரில் உள்ள தங்களது உறவினர்கள் வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பலமுறை கோரிக்கை வைக்கும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை, இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.