கண்மாயில் குளிக்க சென்ற மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை – எட்டயபுரம் அருகே பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பியபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 45 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர் விடுமுறை தினங்களில் தங்களது பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்க சென்றதாக 7 மாணவர்களை அடித்தாக, மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர் அடித்ததால் தங்களது குழந்தைகளின் உடலில் தடிப்புகள் ஏற்பட்டு அவர்கள் சிரமப்பட்டு வருவதாகவும் மாணவர்களை அடித்த ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் குற்றச்சாட்டினை தொடர்ந்து கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ராதிகா கூறும் போது, பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்க சென்ற என்னுடைய குழந்தைகள் உள்பட 7 மாணவர்களை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், கடுமையாக தாக்கியுள்ளார், மேலும் குழந்தைகள் படிக்கவில்லை என்றால் செருப்பினை வைத்து மாணவர்களை அடித்துள்ளார். ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடை மாற்றம் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த பள்ளியில் நிரந்தரமாக தலைமை ஆசிரியர் இல்லை, இது குறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது ஒரு ஆசிரியராக என்னுடைய கடமையை தான் செய்தேன், என்மீது என்ன குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர் என்பது தெரியவில்லை, எனது வழக்கறிஞர் மூலமாக அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.
இதற்கிடையில் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் விடுமுறையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.