அன்புள்ள கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு, வணக்கம்.
கால்நூற்றாண்டு கடந்து தமிழ் இலக்கியத்திற்கான தாங்கள் ஆற்றிய பணிக்காக 2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது தங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி. விருதோடு ரூ.11இலட்சம் பணமுடிப்பு, சரஸ்வதி தேவியின் வெண்கலச் சிலை, பாராட்டுப் பத்திரம் – சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. தமிழில் நாவலாசிரியர் அகிலன் (1975), எழுத்தாளர் ஜெயகாந்தன் (2002) வரிசையில் தற்போது நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்கள். 45 ஆண்டு காலத் தங்களின் இலக்கியப் பணிக்கான வாழ்நாள் சாதனையாளர் என்ற முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதின் மூலம் தமிழ் பெருமை பெற்றுள்ளது. மனம் நிறைந்த வாழ்த்துகள்!
இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில இதழான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தின் உரிமையாளர் சாகு ஜெயின் குடும்பத்தினால் 1944இல் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீடம் (Bharatiya Jnanpith) என்ற பண்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும், ”ஞானபீட விருது” இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகின்றது. இதன் நடுவர் குழுவில் நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

“இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனிப் புதிய பாய்ச்சலுடன் என் இலக்கியப் பணி தொடரும்”என்பதாக பூரிப்படைந்து பேசியிருக்கிறீர்.
இந்நிலையில், தங்களுக்கு எதிராக பெண் பாடகி ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டையும், ஆண்டாள் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களையும் தற்போது தூசு தட்டி எடுத்து வைத்துக் கொண்டு, உங்களுக்கு எதிரான கருத்துகளை பொதுவெளியில் சிலர் பரப்பி வருகிறார்கள். தங்கள் மீதான வெறுப்பின் உச்சமாக, இலக்கிய பிதாமகன் ஜெயமோகன், “ஞானபீட விருது மதிப்பை இழந்துவிட்டது என்றும்; அதற்கு மாற்றாக தாங்களே இனி உயரிய இலக்கிய விருதை வழங்கப்போவதாகவும்” அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுவரை தாங்கள் ஏழு முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றிருக்கின்றீர்கள். ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளீர்கள். 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நீங்கள் எழுதிய நாவல்கள் :
கள்ளிக்காட்டு இதிகாசம்: 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு.
கருவாச்சி காவியம்: கிராமத்துப் பெண்களின் வாழ்வைச் சொல்லும் மிகச்சிறந்த நாவல்.
தண்ணீர் தேசம்: கடல் மற்றும் மாலுமிகளின் வாழ்வியலைப் பேசும் அறிவியல் கலந்த நாவல்.
மூன்றாம் உலகப் போர்: புவி வெப்பமயமாதல் மற்றும் உலகமயமாதலை மையமாகக் கொண்ட நாவல்.
வில்லோடு வா நிலவே: சேரர் காலத்து வரலாற்று பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.
சிகரங்களை நோக்கி: கவிஞரின் முதல் அறிவியல் நாவல்.
கவிதைத் தொகுப்பு
வைகறை மேகங்கள்: 1972-இல் வெளியான அவரது முதல் கவிதைத் தொகுப்பு.
இன்னொரு தேசியக் கீதம்: இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற கவிதைகள்.
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல: சமூகச் சிந்தனைகள் கொண்ட தொகுப்பு.
பெய்யெனப் பெய்யும் மழை: கவிப்பேரரசு பட்டம் வழங்கப்பட்டபோது வெளியான தொகுப்பு.
மகா கவிதை: பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களைப் பாடும் நவீன காவியம்.
கவிராஜன் கதை: மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதை வடிவில் சொல்லும் நூல்.
தமிழுக்கு நிறமுண்டு, கொஞ்சம் தேநீர் நிறைய வானம், சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.
கட்டுரைகள் மற்றும் ஆய்வு நூல்கள் :
தமிழாற்றுப்படை: மூவாயிரம் ஆண்டு காலத் தமிழ் ஆளுமைகளை (தொல்காப்பியர் முதல் நவீன எழுத்தாளர்கள் வரை) அறிமுகப்படுத்தும் ஆய்வு நூல்.
வடுகபட்டி முதல் வால்கா வரை: அவரது பயணங்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பு.
இதனால் சகலமானவர்களுக்கும்: சமூகம் மற்றும் இலக்கியம் குறித்த கட்டுரைகள்.
கேள்விகளால் ஒரு வேள்வி, பாற்கடல் (வாசகர் கேள்வி-பதில் தொகுப்பு)
பிற படைப்புகள்
வைரமுத்து சிறுகதைகள்: 40 சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு.
ஆயிரம் பாடல்கள்: அவர் எழுதிய ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களில் இருந்து அவரே தேர்ந்தெடுத்த 1000 பாடல்களின் தொகுப்பு.
வள்ளுவர் மறை வைரமுத்து உரை: திருக்குறளுக்கு அவர் எழுதிய விளக்கவுரை.
இதுவரை நான்: கவிஞரின் சுயசரிதை நூல். (30 வயதில் தன் வரலாறு எழுதப்பட்டது) – வரையில் எழுதியிருக்கிறீர்கள்.
ஞானபீட விருது தனிமனிதரான வைரமுத்து ஆகிய உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், உங்களின் தமிழ்ப் பணிக்காகவே வாழ்நாள் சாதனையாளர் என்று பெருமைப்படுத்தியே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதில் தமிழ் பெருமைப்பட்டுள்ளதே உண்மை. தமிழ்ப் பணியைத் தொடருங்கள். தமிழ் உங்களால் தலைநிமிரட்டும். வாழ்த்துகள்.
— ஆதவன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.