அரசு பள்ளி வளாகமா? அரசியல் மேடையா? சர்ச்சையில் அரசு பள்ளி !
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட ஆமணக்கம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், குடும்ப விழா நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
தகவல்களின் படி, அதிமுக ஒன்றிய மீனவர் அணிச் செயலாளர் சந்தோஷ் இல்ல காதணி விழா, அரசு பள்ளி வளாகத்திலேயே கட்சி கொடிகள், ஃபிளக்ஸ் பேனர்கள், பந்தல், மேடை அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது . மேலும், கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு விழாவை நடத்தி வைத்ததாகவும், கட்சி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், “கல்வி நிலையமா? அல்லது கட்சி சார்ந்த குடும்ப விழா மையமா?” என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பள்ளி தலைமையாசிரியர் மகேஸ்வரி அனுமதியுடன் நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுவது சர்ச்சையை அதிகரித்துள்ளது.
அரசு சொத்தான பள்ளி வளாகத்தை தனிநபர் குடும்ப விழாவிற்கு யார் அனுமதி வழங்கினார்கள். கல்வி வளாகத்தில் உள்ளே அரசியல் கட்சி சின்னங்கள், கொடிகள், பள்ளி வளாகத்தில் உள்ளே பிளக்ஸ் பேனர்களில் பந்தல் மேடைகள் பள்ளி வளாகத்தில் உள்ளே ஒலிபெருக்கி பயன்பாடு ஆகியவற்றிற்கு சட்டபூர்வமான அனுமதி கொடுத்தது யார் இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் எதிர்நோக்கி ஊர் மக்கள் காத்திருக்கின்றனர்.
கல்வி வளாகத்தின் நடுநிலைத்தன்மை அரசுப் பள்ளிகள் எந்தக் கட்சிக்கும் சொந்தமல்ல; அவை மக்களுக்கும் அரசுக்கும் சொந்தமானவை. இன்று ஒரு கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டால், நாளை மற்ற கட்சிகளும் அதே உரிமையை கோரலாம். இது கல்வி வளாகங்களை அரசியல் மோதல் தளங்களாக மாற்றும் அபாயத்தை உருவாக்கும் என கல்வி ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய இடத்தில் கட்சி கொடிகள் ஏற்றப்பட்டால், அது கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் என்ற கருத்தும் வலுத்துள்ளது.
அதிகாரிகள் பதில்
இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலரை “அங்குசம்” சார்பில் தொடர்பு கொண்டபோது, நமக்கு பதிலளித்த அவரது உதவியாளர், “குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமையாசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விதிமுறை மீறல் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
மேலும், தலைமையாசிரியர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, “நான் விசாரணைக்காக வந்துள்ளேன்; விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று பதில் கூறினார்.
மக்கள் எதிர்பார்ப்பு
“அரசு பள்ளிகள் அரசியல் மேடையாக மாறக்கூடாது; கல்வி என்பது புனிதமான துறை” என்ற வலியுறுத்தலுடன், இந்த விவகாரத்தில் கல்வித் துறை மௌனம் காக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
✍🏻 பிரபஞ்சன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.