ஊடகம் சார் பணித்திறன் – புனித சிலுவைக் கல்லூரியுடன் அங்குசம் இதழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் !
வெறுமனே ஏட்டுக்கல்வியுடன் கற்றலின் வரம்பு சுருங்கிவிடாமல், மாணவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அவற்றை செம்மைப்படுத்தும் வகையிலும் குறிப்பாக, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் துறை சார்ந்த அறிவை வேலைவாய்ப்புக்கு உகந்த வகையில் தயார்படுத்திக் கொள்வது ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாக கொண்டு, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி – தமிழாய்வுத்துறை, திருச்சி மற்றும் அங்குசம் செய்தி இதழ் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்-01 அன்று கையெழுத்தானது.
புனித சிலுவை கல்லூரியின் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி சார்பில் முதல்வர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி மற்றும் அங்குசம் இதழ் சார்பில் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஜான் டேவிட் ராஜ் (ஜெடிஆர்) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழாய்வுத்துறையின் தலைவர் முனைவர் ம.பிரேமா, உதவிப்பேராசிரியர்கள் முனைவர் ஆ.தேவதா மற்றும் முனைவர் அ.அனுடயானா அங்குசம் இதழின் பொறுப்பாசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் முதன்மை செய்தியாளர் வே.தினகரன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுதந்திர இந்தியாவுக்கு முன்பாகவே, தென்னிந்தியாவிலேயே பெண்களுக்கென தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெருமையை கொண்ட பாரம்பரியமான கல்வி நிறுவனம்தான், 1923 ஆம் ஆண்டு சாவ்னோ சிலுவை சகோதரிகளால் தொடங்கப்பட்ட புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி.
மாறும் சூழலுக்கு ஏற்பவும் காலத்தின் தேவைக்கேற்பவும் உலகளாவிய பாடத்திட்ட கட்டமைப்பு, கூட்டுருவாக்க செயல்பாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், திறன் வளர்ச்சி பயிற்சிகள் என பன்முக நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகள் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
புனித சிலுவைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் பயிற்சி பட்டறைகள், சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், தமிழிலக்கிய பேரவை சொற்பொழிவுகள் என மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணர மேற்கொள்ளப்படும் அருட்பணியின் நீட்சியாகவே, இந்த முன்னெடுப்பு.
இதழ்களின் சிறப்புகளையும், இன்றியமையாமையையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்; இதழ்களின் வழி பணி நியமனம் பெறும் திறன்களை பெறுதல்; அச்சு ஊடகத்தின் மூலம் செய்தி எழுதுவது, செம்மையாக்கம் செய்வது, பிழை திருத்தம் செய்வது போன்ற திறமைகளை வெளிக்கொணர்வது; ஒலி – ஒளி ஊடகத்திலும், பத்திரிகை நிறுவனங்களிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பணிவாய்ப்புகளை பெறுதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு மாணவர்களை பயிற்றுவிக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
“இதே கல்லூரியின் தமிழ்த்துறை மாணவி பாரதி கண்ணம்மா என்பவர் , பெண் சிசுக்கொலை குறித்து அவர் எழுதிய கவிதையின் ஆக்கம், இன்றளவும் பெண்ணியம் சார்ந்து இயங்கும் கவிஞர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்திருக்கிறது. ” என்பதை பதிவு செய்தார், அங்குசம் இதழின் பொறுப்பாசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்.
“மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்திறமைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடையே பொதிந்துள்ள திறமைகளை மிகச்சரியாக அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர செய்வது ஆசிரியர்களின் கரங்களில்தான் இருக்கிறது. இன்றைய சூழலில், மாணவர்கள் தாய் மொழி மீதான பற்றுதல் இன்றி இருக்கிறார்கள். அவர்களிடையே மொழிப்பற்றின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களின் ஆர்வத்தை தூண்டி அதன் வழியே அவர்களின் தனித்திறன்களை ஆசிரியர்கள்தான் வளர்த்தெடுக்க வேண்டும்.” என்பதாக, ஆசிரியர்களிடத்தில் அன்பு வேண்டுகோளை முன்வைத்தார் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி.
— அங்குசம் செய்திப்பிரிவு.
புனித சிலுவை கல்லூரியுடன் அங்குசம் மேற்கொண்ட ஊடகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரிதும் வரவேற்கத்தக்கது. ஊடகம் தொடர்பான பிராக்டிகல் பயிற்சிகளுக்கு இந்த ஒப்பந்தம் துணைபுரியட்டும்.