அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசியலை இயக்குவது கருத்தியல் அல்ல ; வெற்று உணர்ச்சி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் மோசமாகத் தோற்ற பின்னர், விஜய் வருங்கால முதலமைச்சர் என பேச்சுக்கள் தொடங்கியதும், டெல்லியில் பணிபுரியும் மிகவும் மதிப்பிற்குரிய ஒரு மூத்த பத்திரிகையாளர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை உள்ளுக்குள் ஆழமாக நிலைகுலையச் செய்தது.

“யதார்த்தத்தை மீறிய மாய பிம்பங்கள் மீதான தமிழ்நாட்டின் தீராக் காதலைப் பற்றி இப்போது நாம் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” எனக் கேட்டார் அவர். அந்தச் சொற்கள் என் உள்ளத்தில் எங்கோ நின்றுவிட்டன. மூச்சு சற்றே கனத்தது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

கோபம் இல்லை. மறுப்பும் இல்லை. ஆனால் எளிதான பதில் எதுவும் என்னிடம் இல்லாததால், மனம் மட்டும் அமைதியிழந்தது.

தமிழ்நாடு … வெறும் இன்னொரு மாநிலமல்ல !

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

சென்னையிலும் கோயம்புத்தூரிலும் நான் கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். என் சொந்த ஊரான வயநாடு, நீலகிரியோடு எல்லையைப் பகிர்கிறது. யாரும் கற்றுக்கொடுக்காமல் மெதுவாகத் தமிழைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டேன். சரளமாகப் பேச முடியாததே என் ஒரே குறை.  தமிழ்நாட்டின் நீளமும் அகலமுமாக பல்லாண்டுகள் பயணித்தேன். சாதாரண மனிதர்களைச் சந்தித்தேன். தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் — எண்ணற்ற முகங்கள் என் நினைவுகளில் கலந்திருக்கின்றன. மாநிலம் முழுவதும் நட்புகள் உருவாயின.

தமிழ்நாடு எனக்கு இரண்டாவது வீடு மட்டுமல்ல. உணர்வால் இணைந்திருக்கும் அரிய இடங்களில் ஒன்றாக அது மாறியது. அதனால்தான் இந்தத் தருணம் எனக்கு இவ்வளவு கடினமாக இருக்கிறது.

ஏனெனில், தமிழ்நாடு என்பது வெறும் இன்னொரு மாநிலமல்ல. அது நவீன இந்தியாவின் மிக வலுவான அரசியல் எதிர்ப்புணர்வின் சமூக எதிர்ப்புணர்வின் நிலமாக இருந்தது. நீதிக் கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி வழிநடத்திய திராவிட எழுச்சி — இவை அனைத்தும் தமிழ்நாட்டின் சமூக அமைப்பை ஆழமாக மாற்றின. பார்ப்பன ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தின. சாதி அடுக்குகளை உடைக்க முயன்றன. பகுத்தறிவை முன்னிறுத்தின. இடஒதுக்கீட்டை பாதுகாத்தன. கல்வி, நிர்வாகம், அரசியல் ஆகிய துறைகளில் பின்தங்கிய மக்களுக்கு கதவுகளைத் திறந்தன.

தேசிய தொலைக்காட்சிகளில் “சமூகநீதி” என்ற சொல் அலங்கார வார்த்தையாக மாறுவதற்கு முன்பே, தமிழ்நாடு அதை ஆட்சிமுறையாக மாற்றியிருந்தது. பல மாநிலங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை தமிழ்நாடு புரிந்துகொண்டிருந்தது: வளர்ச்சி என்பது மனித மாண்பன்றி வேறில்லை.

இந்தியாவின் மிக வலுவான பொதுவிநியோக அமைப்புகளில் ஒன்றை தமிழ்நாடு கட்டியெழுப்பியது. மதிய உணவுத் திட்டம் பள்ளிக்கு குழந்தைகளின் வருகையையும் உடல்நலத்தையும் ஒரே நேரத்தில் அதிகரித்தது. பொது சுகாதார அமைப்புகள் விரிவடைந்தன. பெண்களின் கல்வி உயர்ந்தது. இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் தலைமுறைகள் தாண்டிய சமூக நகர்வை உருவாக்கின. நலத்திட்டங்களை முழுவதும் கைவிடாமல் தொழில்மயமாக்கலும் நடந்தது. இயற்கை வளங்களிலும் நிதி ஆதாரங்களிலும் பல மாநிலங்களை விட பின்தங்கியிருந்தாலும், கல்வி, சுகாதாரம், பெண்கள் நலம், வறுமை ஒழிப்பு போன்ற மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்தியாவின் முன்னணியில் தமிழ்நாடு நின்றது.

ஊழல், குடும்ப ஆட்சி, நாயக வழிபாடு அனைத்தும் இருந்தாலும்  தமிழ்நாட்டு அரசியலின் உள்ளே இதயமாக ஒரு கருத்தியல்  இருந்தது. இந்தியாவின் பல பகுதிகள் மதவெறி அரசியலுக்குள் சுருண்டுகொண்டிருந்தபோதும், தமிழ்நாட்டின் அரசியல் இன்னும் கூட்டாட்சி, மொழி உரிமை, சாதி-சமத்துவமின்மை, சமூக நலம், மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது. அதனால்தான் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்த பலர் அதை ஆழமாக மதித்தோம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்துத்துவ அரசியலின் மத அடையாளங்கள் நெருப்புபோல மாநிலந்தோறும் பரவிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாடு பெரும்பாலும் எதிர்த்து நின்றது. வடஇந்திய தொலைக்காட்சிகள் வெறுப்பையும் பெரும்பான்மை தேசியவாதத்தையும் தேசபக்தி என விற்றுக்கொண்டிருந்தபோதும், தமிழ்நாடு இன்னும் பகுத்தறிவு விவாதத்திற்கும் எதிர்ப்புக் குரல்களுக்கும் சமூக விமர்சனத்திற்கும் இடம் கொடுத்தது. அந்த எதிர்ப்பு முழுமையானதல்ல. சாதி வன்முறைகளும் இருந்தன. ஆணவக் கொலைகளும் இருந்தன. தலித் ஒடுக்குமுறையும் தொடர்ந்தது. ஆனால் வெளிப்படையான மதவெறியை அரசியல் பண்பாடு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அது சாதாரண விஷயமல்ல.

கேரளத்தைச் சேர்ந்த ஒருவராக, பல ஆண்டுகளாக தமிழ்நாட்டைக் கவனித்த நான், இந்தியாவில் கடைசியாகச் செயல்பாட்டில் இருக்கும் மக்கள்நல அரசியல் ஜனநாயகங்களில் ஒன்றாகவே தமிழ்நாட்டை உணர்ந்தேன். அது முரண்பாடுகளுடனும் குறைகளுடனும் இருந்தது. ஆனால் அடிப்படையில் மனிதநேயமுடையதாக இருந்தது. அதனால்தான் இப்போது இந்த மாற்றம் மனதை அமைதியிழக்கச் செய்கிறது.

கருத்தியல் அல்ல; வெற்று உணர்ச்சி !

ஏனெனில், விஜயின் எழுச்சியை வெறும் ‘நட்சத்திர அரசியல்’ என்று மட்டும் தள்ளிவிட முடியாது. தமிழ்நாட்டில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் எப்போதுமே ஆழமான உறவு இருந்திருக்கிறது. ஆனால், வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அந்த வரலாற்றை அடிக்கடி தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். எம்.ஜி. ராமச்சந்திரன் வெறும் நடிகராக அரசியலுக்குள் வந்தவர் அல்லர்; அவர் திராவிட இயக்கத்தின் கருத்தியல் உலகிலிருந்து உருவானவர். கருணாநிதி தாமே ஒரு திரைக்கதை ஆசிரியர்; சினிமா வசனங்களை சமூக மாற்றத்திற்கும் சாதி எதிர்ப்பிற்கும் அரசியல் ஆயுதமாக மாற்றியவர். தமிழ்நாட்டில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல — அது அரசியல் மொழி. ஆனால், இன்று ஏதோ மாறியிருப்பது போலத் தோன்றுகிறது.

இன்று அரசியலை இயக்குவது கருத்தியல் அல்ல; வெற்று உணர்ச்சி போலத் தெரிகிறது. சமூகநீதியின் பலன்களை இளம் தலைமுறையினர் பெற்றிருக்கலாம். ஆனால் அந்தப் பலன்களின் பின்னால் இருந்த உணர்ச்சிகரமான வரலாற்றுப் போராட்டங்களை அவர்கள் அறிந்ததில்லை; அனுபவித்ததில்லை. திராவிட அரசியல் உத்வேகம் தரும் ஒன்றிலிருந்து மாறி ஆட்சி நிர்வாகமாக மாறியிருக்கலாம். மக்கள் நலத்திட்டங்கள் கருத்தியல் மாற்றமாக இல்லாமல், வெறும் அரசாங்க சேவையாக மாறியிருக்கலாம்.  நெடுங்கால ஊழல் சோர்வை தந்திருக்கலாம். குடும்ப அரசியல் சிலருக்கு மனவிலக்கத்தை அளித்திருக்கலாம். சமூகநீதியின் மொழி மட்டும் மீதமிருந்து அதன் உயிர்த்துடிப்பு மங்கியிருக்கலாம்.

ஒருவேளை மக்கள் இப்போது கருத்தியல் தெளிவைத் தேடுவதை விட்டுவிட்டு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள் போலும். அந்த சாத்தியம்தான் என்னை பயமுறுத்துகிறது.

உள்ளத்தின் மிக ஆழத்தில்  ஓர் அச்சம் !

ஏனெனில் இப்போது நிகழ்ந்திருக்கும் மாற்றம் உண்மையில் கருத்தியல் மாற்றமெனில், பழைய கருத்தியலில் இருந்து மாறி இப்போது வந்திருக்கும் கருத்தியல் என்ன? மிகைக் கவர்ச்சியுடைய அரசியல் எப்போதுமே உற்சாகத்தையும், ஓர் அடையாளத்தையும், உணர்வால் இணைந்த கூட்டத்தையும் உருவாக்கும். ஆனால் அது அரசியலமைப்புச் சீரியல்புகளை அதே உறுதியுடன் காக்குமா? தேசிய அழுத்தங்கள் வரும் நேரத்தில் இடஒதுக்கீட்டை பாதுகாக்குமா? சாதி ஆதிக்கத்தையும் மதவெறி அரசியலையும் கருத்தியல் நம்பிக்கையுடன் எதிர்க்குமா? பல தசாப்தங்களாக உருவான அறிவுசார் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு மாற்றாக சினிமா உணர்ச்சிவாதம் நிற்குமா? எனக்குத் தெரியவில்லை.

… உள்ளத்தின் மிக ஆழத்தில்  ஓர் அச்சம் இருக்கிறது. அரசியல் மெதுவாக கருத்தியல் நம்பிக்கையிலிருந்து உணர்ச்சிக் காட்சியாக மாறும்போது, ஒழுங்கமைந்த சமூக இயக்கங்களிலிருந்து தனிநபர் மையப்படுத்தப்பட்ட பிம்பங்களாக நகரும்போது, சமூகம் தந்னையறியாமல் உணராமல் பலவீனமடையத் தொடங்குகிறது என்ற அச்சம்.

… தமிழ்நாடு இன்னும் அப்படியே இருக்கிறது என்று நான் நம்ப விரும்புகிறேன். அதனால்தான் இன்னும் என்னால் எளிமையான பதில் ஒன்றைச் சொல்ல முடியவில்லை.

—   கே.ஏ.ஷாஜி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.