பறிக்கப்பட்ட பதவி முதல் தவிர்க்கப்பட்ட பெயர் வரை-உள்ளடி வேலையில் திமுக அரசியல்!
காரம், சாரம், வாதம் என்று அனைத்தும் கலந்த கலவையாக இன்று அரசியல் பரபர, சரசர, சுறுசுறுவென இன்று அரசியல் நகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தொடர்ந்து பணியாற்றுவது மட்டும் போதாது உள்ளடி வேலையும் ஆங்காங்கே செய்தால் தான் அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று அரசியல் நகர்வுகளை செய்து வருகின்றனர் அரசியல்வாதிகள்…… எதற்கு சுத்தி வளைத்து சொல்லவேண்டும், நேரா மேட்டருக்கு வருகிறோம்.
இந்தச் செய்தி தமிழ்நாடு அரசியலை பற்றியது அல்ல, இது தமிழ்நாடு அரசியலைத் தீர்மானிக்க கூடிய திருச்சியின் அரசியல்வாதிகளைப் பற்றியது.
நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு-வின் மிகத் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் தனது மகனுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ஒரு திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினார். இந்த திருமணத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரின் மகனான அருண் நேரு முன்னின்று நடத்தி வைத்தார். அன்று சென்னையில் இருப்பதால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது என்றும், மேலும் திருச்சி வந்த பிறகு வீட்டுக்கு வந்து சந்திப்பதாகவும் முன்னரே சொல்லி இருக்கிறார் அமைச்சர். அதேநேரம் இந்த திருமண நிகழ்ச்சிக்கு திருச்சியை சேர்ந்த மற்றொரு அமைச்சரான பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் திடீர் விசிட், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
கல்யாண பத்திரிக்கையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் பெயர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆதரவாளர்கள் திருமணத்திற்கு ஏன் அவர் வந்தார் என்று கல்யாண வீட்டாரிடம் கேள்வி எழுப்ப. “எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறிவிட்டாராம் கல்யாண வீட்டுக்காரர். அதேசமயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தரப்போ பத்திரிக்கை வந்ததால் தான் வந்தோம் என்று பத்திரிக்கையை பொதுவெளியில் வெளியிட்டு விட்டுவிட்டதாம். அதில் மாண்புமிகு அமைச்சர் என்று தெளிவாக எழுதி இருந்ததாம்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார். விழாவுக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அனைவருமே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான இனிகோ இருதயராஜ் மட்டுமே விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். “அமைச்சர் கே.என்.நேரு ஊரில் இல்லாததால், இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை”. நேரு கலந்துகொள்ளாத கூட்டத்தில் நாம் கலந்து கொள்ள வேண்டாம் என்று மற்ற ஆறு எம்.எல்.ஏ-க்களும் விருது வழங்கும் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 19. 2021 அன்று முசிறியில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயர் இடம்பெறவில்லை. மேலும் மற்ற எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களின் பெயர் இடம் பெற்றிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
இது போதாதென்று இன்று செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட திமுகவில் நடத்தப்பட்டது. இதில் மத்திய மாவட்டமும், வடக்கு மாவட்டமும் இணைந்து செயல்பட, மகேஷ் பொய்யாமொழியின் தெற்கு மாவட்டம் தனியாக நிகழ்ச்சிகளை நடத்தியது.
இவைகள் ஒரு புறமிருக்க, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக மட்டுமல்லாது திமுகவினுடைய முதன்மைச் செயலாளராக உள்ளவர் கே என் நேரு. 30 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர். திருச்சியில் திமுகவை வளர்த்தவர்களில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. இந்த நிலையில் தற்போது அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் உள்ளவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் நேருவிடம் பேசுபவர்கள், நெருங்கி பழகுபவர்கள், நெருக்கமானவர்கள், போஸ்டர்களில் நேருவின் படத்தை பயன்படுத்துபவர்கள் என்று நேரு உடன் பேசினாலே பதவி பறிப்பு என்று செயல்பட்டு வருகிறாராம். இதற்கு ரிவேஞ்சாகவே நேரு தரப்பினர் தற்போது செயல்பட தொடங்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி திமுகவின் மூத்த உடன் பிறப்பு ஒருவரிடம் கேட்கும்போது, திருச்சியின் மூத்தவர் கட்டிய திமுகவின் கோட்டையை இடிக்க முயற்சிக்கிறார் இளையவர். இதுதான் இந்த சிக்கலுக்கு அடித்தளமாக இருக்கிறது. கோட்டையை தனக்கு சாதகமாக மாற்றி மாற்றியமைக்க முயற்சிக்காமல் இடித்துவிட்டு புதிதாக கோட்டை கட்ட முயற்சிப்பது சரி அல்ல.மேலும் கட்சியின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் உடன் இருந்து, கட்டியவர்களையும், கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும்….. இளையவர்கள் அனுபவம் இல்லாமல் செய்யும் செயல் கோபப்படுத்த தானே செய்யும்.
அதேசமயம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அரசியல் நாகரீகத்தை தலைமை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. பிற கட்சிகளுடனான இணக்கம், எதிர்க்கட்சிகளுடன் அனுசரிப்பு என்று எல்லா விஷயங்களிலும் முன்னுதாரணமாக திமுக உள்ளது. ஆனால் திமுகவிற்குள்ளோ அரசியல் நாகரீகமற்ற நிலை ஏற்படுவதை ஏற்கமுடியாது. இது போன்ற செயல்கள் திமுகவை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்த வந்த, என்னை போன்றவர்களை வருத்தம் அடையச் செய்திருக்கிறது என்று கூறினார்.