‘சிக்மா’ சினிமாவும் ஜேசன் சஞ்சய்யின் சாமர்த்தியமும்!
‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் & முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ஷிவ் பண்டிட். சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், அன்புதாசன், ஷீலா ராஜ்குமார், யோக் ஜேப்பி, மகாலட்சுமி, கமலேஷ் ஜெகன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த், இசை : தமன் எஸ்., எடிட்டிங் : கே.எல்.பிரவீன், ஆர்ட் டைரக்டர் : பெஞ்சமின், ஸ்டண்ட் : வெங்கட் & சில்வா, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

அனைவருக்கும் நல்ல முறையில் பயனளிக்கும் நூலகம் நடத்துகிறார் சந்தீப் கிஷனின் அம்மா ஷீலா ராஜ்குமார். கணவன் வாங்கிய கடனால் கந்து வட்டிக்காரனிடம் அவமானப்பட்டு உயிர் துறக்கிறார் ஷீலா ராஜ்குமார். தொடர்ந்து நூலகத்தை நடத்த முடியாமல் திண்டாடும் சந்தீப் கிஷன், ஆடியோ யூடியூப் ஒன்றை நடத்தி, அதிலும் சமாளிக்க முடியாமல், சென்னை சிட்டியில் தியேட்டர் என்ற போர்வையில் இருக்கும் சூதாட்ட க்ளப்புக்குப் போகிறார். அங்கேயும் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார். நூலகமும் கந்துவட்டிக்காரனால் கைப்பற்றப்படுகிறது. அதன் பின் துணிந்து சில காரியங்களில் இறங்கி, வில்லன் ஷிவ் பண்டிட்டின் போதை சாம்ராஜ்யத்தைக் கண்டு பிடித்து பிளாக்மெயில் பண்ணி கோடிக்கணக்கில் பணம் கேட்கிறார். ஆடுபுலி ஆட்டம் ஆரம்பமாகிறது. க்ளைமாக்ஸ் என்ன? இதான் இந்த ‘சிக்மா’.
“வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” என்ற சந்திரபாபுவின் பாடலுடன் தான் டைட்டிலை ஆரம்பித்து அதிர வைக்கிறார் ஜேசன் சஞ்சய்[ யாரைக் குறிவைத்திருக்கார்னு தமிழ்நாட்டுக்கே நல்லாத் தெரியும்] அதே போல் ‘எழுத்து-இயக்கம்’ என்ற கார்டு வரும் போது அம்மா போட்டோவுடன் [ ஷீலா ராஜ்குமார் போட்டோ தாங்க] முடிக்கிறார்.
மற்றபடி படம் முழுக்க போதை மாஃபியாக்கள், சூதாட்ட வில்லன்களான சம்பத்ராஜ், ஷிவ்பண்ட்டிட்டுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார் ஹீரோ சந்தீப் கிஷன். நடிப்பு பெர்ஃபாமென்ஸும் ஓகே. இவருக்கு அப்பப்ப வந்து ஹெல்ப் பண்ணுகிறார்கள் ஹீரோயின் ஃபரியா அப்துல்லா & ராஜு சுந்தரம்.
முதல் படம் என்ற பதட்டம் இல்லாமல் சீன்களை மெச்சூரிட்டியாகவே பண்ணி சபாஷ் வாங்கிவிட்டார் டைரக்டர் ஜேசன் சஞ்சய். சில சீன்களை குறிப்பாக க்ளைமாக்ஸை ரொம்பவே நீ……..ளமாகக் கொண்டு போனது சலிப்பாக இருக்கு. கேமராமேன் கிருஷ்ணன் வசந்தும் மியூசிக் டைரக்டர் தமனும் ஜேசனுக்கு நல்ல சப்போர்ட்டா இருக்கிறார்கள்.
நன்றாக கவனம் செலுத்தி, உழைத்து அடுத்தடுத்து இன்னும் பெஸ்டான படங்களைத் தருவார் ஜேசன் சஞ்சய் என நம்பலாம்.
‘சிக்மா’ பிரஸ் ஷோ முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டது பத்திரிகையாளர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜேசனுடன் லைக்காவின் தலைமை அதிகாரி ஜிகேஎம்.தமிழ்க்குமரன், ஹீரோயின் ஃபரியா அப்துல்லா, நடிகை மகாலட்சுமி, நடிகர் அன்புதாசன், ஆர்ட் டைரக்டர் பெஞ்சமின், வில்லன் ஷிவ் பண்டிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்பே பேசிய பி.ஆர்.ஓ.அப்துல்நாசர், “மீடியா நண்பர்கள் படம் சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டும் கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கவும்” என வேண்டுகோள் வைத்தார்.
“மூன்று நாட்களுக்கு முன்பு மீடியாவைச் சந்திக்க விரும்பினேன். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் அது நடக்கவில்லை. இதற்காக பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக மூன்று ஆண்டுகள் ஒத்துழைத்த லைக்கா சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ்க்குமரன் சாருக்கும் நன்றி. தற்போதைக்கு டைரக்ஷனில் மட்டும் தான் கவனம் இருக்கு. ஹீரோ ஆவதைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம். இந்தப் படத்தை எனது அம்மாவும் தங்கையும் பார்த்து ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தார்கள். எனது தாத்தா எஸ்.ஏ.சி. இன்னும் படம் பார்க்கவில்லை” பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு”நோ கமெண்ட்ஸ்” எனச் சொல்லாமல் எல்லாக் கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடனும் சாமர்த்தியமாகவும் தன்னடக்கத்துடனும் பதில் சொல்லி அப்பாவுக்கு பாடம் எடுத்துள்ளார் மகன் ஜேசன் சஞ்சய்.
ஆல் தி பெஸ்ட் ஜேசன் சஞ்சய்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.