விவேகானந்தரே வியந்த இராஜாஜி ! சாகித்திய அகாடமி பத்திரிகையாளர் மாலன் சொற்பொழிவு !
22.7.2026 அன்று திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இராஜாஜி அறக்கட்டளைச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் து. பிரசன்ன பாலாஜி தலைமையேற்று வரவேற்புரை மற்றும் தலைமையுரை வழங்கினார்.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய விவேகானந்தரே பாராட்டிய பெருமை மிக்கவர் இராஜாஜி என்பதைத் தகுந்த சான்றுகளோடு தம் தலைமையுரையில் எடுத்துரைத்தார். கல்லூரியின் செயலர் திருமிகு கா ரகுநாதன் அவர்களின் வாழ்த்துக்களோடு நடைபெற்ற இச்சிறப்புச் சொற்பொழிவில் சாகித்திய அகாடமி விருதாளரும் தமிழகத்தின் தலைசிறந்த ஊடகவியலாளருமான திருமிகு மாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விடமுண்ட கண்டன் என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.
இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமான கொள்கை வாதியாகவும் தான் கொண்ட கொள்கைகளின் காரணமாக உறுதித் தன்மை மிக்கவராகவும் இன்றளவும் அறியப்படக்கூடிய பெருமை மிக்கவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்பதை விரிவாக விளக்கினார்.
மகாத்மா காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு போன்ற இந்தியாவின் உயரிய தலைவர்களோடு நெருங்கிய தொடர்புடையவராகவும் தான் கொண்ட கொள்கைகளுக்காக அவர்களுடனே விவாதம் செய்த பெருமை மிக்கவராகவும் இராஜாஜி அறியப்படுகிறார். சேலம் மாநகராட்சியில் தலைவராக இருந்த போது அனைவரும் சமம் என்பதை நிலை நிறுத்துவதற்காக தம் தந்தையாருடனையே கருத்து முரண்பட்டவராகவும் சமூக நலனே முக்கியம் என்பதற்காக தன் கொள்கையில் உறுதியோடு நின்றவராகவும் இன்றளவும் அறியப்படக்கூடிய பெருமை இராஜாஜிக்கு உண்டு என்றும், பிற்காலத்தில் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியாருக்காக அவரது சொத்தினை வழக்கு நடத்தி பெற்று தந்த பெருமை இராஜாஜிக்கு உண்டு என்பதையும் இந்த சான்றாதாரங்களோடு விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய ஆற்றல்மிக்க சாதனையாளர்களுள் ராஜாஜி முதன்மையானவர் என்பதையும் அவர் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக யாத்திரை தொடங்கியதையும் மாணவர்கள் மனம் கவரும் வண்ணம் எளிய முன்னுதாரணங்களோடு எடுத்துரைத்தார்.
முன்னதாக இராஜாஜி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சா. நீலகண்டன் அவர்கள் இச்சிறப்பு சொற்பொழிவினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நிறைவாக நன்றியுரை நல்கினார். கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர் ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் பிற துறைகளை சார்ந்த தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கல்லூரி நூலகர் முனைவர் சுரேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.