கலைமகள் சபா : உலவும் வதந்திகளும் உண்மை நிலவரமும் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கலைமகள் சபா விவகாரத்தில் தீர்வை நோக்கி வழக்கை முன் நகர்த்தி செல்லும் முன்களப்பணியாளர்களாக இயங்கிவரும் கலைமகள் சபா உறுப்பினர்களான ரெங்கராஜ், வழக்கறிஞர் அறிவழகன், கோபால், ஈரோடு பழனியப்பன் உள்ளிட்டவர்களை அங்குசம் சார்பில் நேர்காணல் செய்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

தற்போதைய நிலையில், கலைமகள் சபாவின் நிர்வாக தரப்பில் என்ன முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகிறது? இதுவரையில் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்? என்ற அடிப்படையான விவரங்களே கலைமகள் சபாவின் உறுப்பினர்களுக்கு சென்று சேராமல் இருப்பதுதான் மையமான சிக்கலாக நீடிக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதற்கு முன்னர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டிருந்த ரிசீவர் கமிட்டியின் செயல்பாடுகளிலிருந்து, அவர்களைப்போலவே கலைமகள் சபாவின் சொத்துக்களை அரசு அதிகாரிகள் கபளீகரம் செய்துவருகிறார்கள் என்பது போன்ற ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரங்கள் வாட்சப் குழுக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மிக முக்கியமாக, கலைமகள் சபாவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெருத்த வேறுபாடு இருப்பதாக பலரும் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி வருகிறார்கள். கலைமகள் சபாவின் மேலாளர் ஜான் கைது செய்யப்பட்டபோது, 5 இலட்சத்து சொச்சமாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 இலட்சமாக உயர்ந்தது எப்படி என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

அடுத்து, தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த சர்வே எண்களில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கின்றன? இதில், கலைமகள் சபாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் பரப்பளவு என்ன? ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் என்ன? நீதிமன்ற வழக்குகளின் காரணமாக உரிமையியல் சிக்கலில் சிக்கித்தவிக்கும் நிலங்களின் கதி என்ன? என்பதுபோன்ற தகவல்கள் வெளிப்படையாக எல்லோரும் பார்வையிடும்படி கலைமகள் சபாவின் இணையதளத்தில் வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையை அவர்கள் தரப்பில் முன்வைக்கிறார்கள்.

ரெங்கராஜ்
ரெங்கராஜ்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதிலும் குறிப்பாக, கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் என்பதாக அடையாளம் காணப்பட்ட உறுப்பினர்கள் இதுவரை எவ்வளவு சந்தா செலுத்தியிருக்கிறார்கள்? என்பதிலிருந்து கலைமகள் சபாவின் துணை விதிகளின்படி, அவர்களின் தகுதிநிலை வரையறுக்கப்பட வேண்டும் என்றும்; அதனை ஆதாரமாகக்கொண்டு விகிதாச்சார அடிப்படையிலான கணக்கீட்டு முறையை கையாள வேண்டுமென்றும் கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.

மேலும், தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு கலைமகள் சபா நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட மேலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் செயல்பாடுகள் என்ன? இதுவரையில் எவ்வளவு ஆக்கிரமிப்பு சொத்துக்களை அவர்கள் மீட்டிருக்கிறார்கள்? என்ற விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும் கோருகிறார்கள். இதுபோன்ற மாவட்ட மேலாளர்கள் பொறுப்பில் கலைமகள் சபாவின் உறுப்பினர்களே இடம்பெற வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்கள்.

கெடுவாய்ப்பாக, கலைமகள் சபாவின் உறுப்பினர்களில் பலரும் தற்போது உயிருடனே இல்லாத நிலையில், அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் இத்தகைய தகவல் சென்று சேர்வதை உத்தரவாதப்படுத்தும் வகையில், அவர்களது வாரிசுரிமை சான்றுகளை சமர்ப்பித்து தங்களை தீர்வுத்திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கான வழிவகைகளையும் கலைமகள் சபா நிர்வாகம் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

அறிவழகன்
அறிவழகன்

பாதிக்கப்பட்ட கலைமகள்சபா உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரிகளுக்கு எதிரான அதிருப்தி மனநிலை ஒருபுறமிருக்க; கலைமகள் சபாவின் மேலாளராக இருந்து கலைமகள் சபாவுக்காக சொத்துக்களை வாங்கிப்போட்ட ஜான் என்பவரின் களப்பணிகளை உச்சிமோந்தும், கலைமகள் சபாவின் வளர்ச்சி பிடிக்காத சில சமூக விரோதிகளால், அரசு அதிகாரிகள் பலவந்தமாக கலைமகள் சபாவின் சொத்துக்களை கைப்பற்றிக்கொண்டார்கள் என்பதாகவும் ஒரு பொதுக்கருத்து நிலவிவருகிறது.

இந்த கருத்துக்களை தகர்க்கும் வகையில், நிதி கையாடல் உள்ளிட்ட மோசடியில் மேலாளர் ஜான் ஈடுபட்டதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன். இந்த விவகாரங்களை அடுத்த இதழில் பேசுவோம்.

தொடரும்

அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.