எப்போதுதான் விடிவு ? TRB வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட் !
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2078 பேராசிரியர் பணியிடங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய தேர்வு முடிவுகள் தொடர்பாக சர்ச்சை நீடித்து வருகிறது. குறிப்பாக, தேர்வுத்தாள் 2-ல் இடம்பெற்ற பொதுக்கட்டுரைப் பிரிவில் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் தொடர்பாக தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
ஒரே கேள்விக்கு சில தேர்வர்களுக்கு 49 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில், சிலருக்கு ஒற்றை இலக்க மதிப்பெண்களும், சிலருக்கு பூஜ்ய மதிப்பெண்ணும் வழங்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சையாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மெயின் தேர்வில் நூற்றுக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கும்கூட, இரண்டாம் தாளில் ஒற்றை இலக்கங்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கும் முரண்பாட்டை சுட்டிக்காட்டுகிறார்கள்.
டி.ஆர்.பி. நடத்திய தேர்வில் மதிப்பீட்டு அளவுகோல்களை ஆய்வு செய்ய வேண்டும், விடைத்தாள்கள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும், பாட நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணையின்போது, மதிப்பீட்டு நடைமுறை தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இரு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுத்துள்ளு 53 நபர்களுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துக்கொண்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கான நியமன நடவடிக்கைகளை தொடரலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே அமர்வில் விரைந்து விசாரித்து நிறைவான தீர்வு வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தேர்வர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை, இந்த விவகாரத்தில் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதுதான் விடிவு ? TRB வழக்கின் லேட்டஸ்ட் அப்டேட் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.