ராஸ்கலாக வாழ்வது எப்படி?
மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் புதிய சர்ச்சை ஒன்றைத் துவக்கி இருக்கிறார். ஆன்மீகக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் பின்வரும் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘தமிழ் நாட்டில் “பகுத்தறிவாளர்கள்” என்று ஒரு குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து ராஸ்கல்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று விமர்சிக்கிறார்கள். காரணம், நாம் ஆன்மீக குருக்களை கடவுளர்களாகப் பார்க்கிறோமாம். நான் சொல்லுகிறேன்: அப்படி நம்மை விமர்சிப்பவர்கள்தான் ராஸ்கல்கள், முட்டாள்கள், மற்றும் காட்டுமிராண்டிகள்!’

இந்தக் கருத்தைப் பார்க்கும் முன்பு ஒரு திருத்தம்: இந்த ‘ஆன்மீக குரு’ எனும் சொல் ரொம்பவும் பெருமை மிகுதியாக தொனிக்கிறது. எனவே அதை நான் தவிர்த்து இந்த ஆட்களை வெறுமனே ‘சாமியார்’ என்று மட்டுமே குறிப்பிடுவோம்.
இந்த சாமியார்கள் எல்லாம் கடவுளரின் உருவகம் என்பதை நான் நம்புவதில்லை. காரணம், கடவுளையே நம்புவதில்லை! சாமியே ஒரு ஸ்பைடர்மேன்தான் எனும் போது, சாமியார் என்பவர் அந்தக் கதையின் காமெடி டிராக் மாதிரிதான்.
என்னைப் பொருத்தவரை சாமியார்கள் எனப்படுபவர்களை மூன்று வகைகளில் அடக்கலாம்:
– கல்விக் குறைபாடு கொண்டவர்கள்
– மனநல பாதிப்பில் உழல்பவர்கள்
– பொறுக்கிகள் and/or ஃப்ராடுகள்
முதல் வகை, சிறுவயதில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மத நியம பாடங்களை மீறி பெரிதாக வேறு எதையும் படித்திராதவர்கள். அந்த மத நியமங்கள் நிஜமாகவே சத்திய உண்மைதான் என்று நம்புபவர்கள். அறிவியல், மானுட வரலாறு, விண்ணியல், மானுடவியல் (Anthropology) போன்ற எது குறித்தும் துளி கூட தெளிவில்லாதவர்கள். தன் சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்பைடர்மேன் பொம்மையை ஒருவர் வளர்ந்த பின்னும் ஆஃபீசுக்கு தூக்கிக் கொண்டு போனால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்டவர்கள்தான் இந்தப் பழமைவாத சாமியார்கள்.
இவர்களிடம் நாம் காட்ட வேண்டியது மரியாதை அல்ல. பரிதாபம்.
இரண்டாம் வகை, உளவியல் குறைபாடுகள் கொண்டவர்கள். Hallucinatory disorder, narcissistic personality disorder, bipolar, narcissistic personality disorder, என்று ஏதாவது ஒன்றின் பாதிப்பில் இருப்பவர்கள். அதன் மூலம் தங்களைப் பற்றியும் தங்கள் சூழலைப் பற்றியும் ஒரு வித மாய சிந்தனையில் உழன்று கொண்டிருப்பார்கள். இவர்கள் கடவுளிடம் பேசுவார்கள், கடவுளைப் பார்ப்பார்கள், அல்லது தங்களையே கடவுளாக நம்பிக் கொண்டு விடுவார்கள்.
இவர்களுக்குத் தேவை வணக்கம் இல்லை. சிகிச்சை.
மூன்றாம் வகை, இந்து மதத்தின் ஆன்மீக பாரம்பரியத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள். அதனைத் தங்கள் முன்னேற்றத்துக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள். ஒரு வங்கியின் லாக்கர் எப்படி செயல்படுகிறது என்பதைக் கற்றறிந்து அதை உடைத்துத் திருட முயலும் கொள்ளையன் போல, மதத்தின் செயல்பாடுகளைப் புரிந்து கொண்டு அதை ஏதோ வகையில் தங்கள் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள். அந்த லாபம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்: பண வருவாய், சமூகத்தில் கிட்டும் மரியாதை, செல்வம், பெண் சுகம், அரசியல் அதிகாரம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு வெற்றிகரமான சாமியாருக்கு இந்தியாவில் இவை எல்லாமே கிட்டும். அவர் மேட்டுகுடி சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் இன்னும் விசேஷம். பிரதமரே அவர் காலடியில் கிடப்பார்.
இவர்களுக்குக் கிடைக்க வேண்டியது பக்தி அல்ல. சிறை.
அதாவது, இந்த சாமியார் கும்பல்களினால் உலகுக்கு எந்தப் பயனும் இல்லை. எந்த சாமியாரும் தனது மந்திர சக்திகளினால் வறுமை ஒழிப்புக்கு திட்டம் எதையும் கொடுத்ததில்லை. சாதி ஒழிப்புக்குப் போராடியதில்லை. கல்வி வளர்ச்சிக்கு உதவியதில்லை. உலகைப் புரட்டிய அறிவியல் சாதனைகள் எதற்கும் காரணியாக இருந்ததில்லை.
உண்மையாகவே நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் இந்த உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள்:
– உலகைப் புரட்டிப் போட்ட அறிவியல் தியரிகளைக் கொடுத்த டார்வின், ஐன்ஸ்டைன், நீல்ஸ் போர், ரிச்சர்ட் ஃபெயின்மேன், ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்றோர்…
– மானுட வரலாற்றை மாற்றி அமைத்த போராட்டங்களை முன்னெடுத்த காந்தி, மண்டேலா, மார்ட்டின் லூதர் ஜூனியர் போன்றோர்…
– தொழில் நுட்பத்தில் உலகை மாற்றி அமைத்த பில் கேட்ஸ், டிம் பர்ன்ஸ் லீ, ஜெஃப் பேசோஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர்…
– புரட்சிகர சிந்தனாவாதங்களை முன்வைத்து இந்த உலகை நவீனமயமாக்க உதவிய கார்ல் மார்க்ஸ், ஃபிரான்ஸிஸ் பேக்கன், வோல்டேர், ரூசோ, அம்பேத்கர் போன்றோர்…
– கடினமான சூழலில் தேசங்களைத் தலைமை தாங்கி அவற்றை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முயன்ற, நேரு, லிங்கன், லீக்வான் யூ போன்ற தலைவர்கள்…
– அறிவியல்பூர்வ சிந்தனைகளைத் தொடர்ந்து பரப்பிய கார்ல் சேகன், நீல் டிக்ராஸ் டைசன், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற அறிவியலாளர்கள்…
இவர்கள் செய்திட்ட சாதனைகளில் ஒரே ஒரு சதவிகிதம் கூட எந்த சாமியாரும் செய்ததாகத் தகவல் இல்லை.
நமக்குத் தெரிந்த சாமியார்கள் செய்யும் சாதனைகள் என்ன தெரியுமா:
– பழமைவாதம் பேசி சாதிப் பெருமையை முன்னெடுத்த மகா பெரியவா எனும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி…
– கோவணத்துடன் மலை மேல் ஒதுங்கி, ‘நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்ததைத்தவிர வேறு எதையும் செய்திராத ரமண மகரிஷி…
– ஏழை மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் அபேஸ் செய்து அவர்கள் செத்ததும் ஓடிப் போன போலே பாபா எனும் சாகார்-ஹரி…
– மேஜிக் டிரிக்குகள் செய்து காட்டி ஏமாற்றி, அதன் மூலமே ஆயிரக்கணக்கான கோடிகள் புரட்டிய புட்டபர்த்தி சாய் பாபா…
– ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்தி ஆயுர்வேதம் என்ற போர்வையில் தரக்குறைவான copycat பொருட்களை விற்றுக் கல்லா கட்டும் பாபா ராம்தேவ்…
– Pseudo-Science எனப்படும் அறிவீன அறிவியல் பேசிக் கொண்டு, இந்துத்துவ brand ambassadorஆக மாறி, கோடிகளில் புரளும் ஜக்கி வாசுதேவ்…
– கோடிகளிலும் புரண்டு கூடவே பொம்பளைப் பொறுக்கிகளாக இயங்கிய ஆசாராம் பாபு, ராம் ரஹீம் இன்சான், நித்தியானந்தா, etc.
– சாமியார்கள் என்று சொல்லிக் கொண்டு ge**cide, இ*ன ஒ*ழி*ப்பு வன்முறைகளைப் பேசும் யதி நரசிங்கானந்தா, சாகர் சிந்துராஜ், ஆனந்த ஸ்வரூப், etc.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏதாவது ஒரே ஒரு சாமியார் பற்றி உருப்படியாக சொல்வதற்கு இருக்கிறதா? பண்டைய வேதங்களில், உபநிடதங்களில், புராணங்களில் இல்லாத, வேறு எந்த நவீன சமூகவியல் நூலும் பேசாத ஒரே ஒரு ஆச்சரிய சிந்தனையை இந்த சாமியார் சொல்லி இருக்கிறார் என்று ஒற்றைக் கருத்தை முன்வைக்க இயலுமா?
அப்படிப்பட்ட கும்பலை மதிக்காதவர்களைத்தான் ‘ராஸ்கல்ஸ்’ என்று ஜி ஆர் சுவாமிநாதன் இகழுகிறார்.
நான் மதிக்கிறேன். சாமியார்களை அல்ல. நவீன உலகின் நிஜ ஹீரோக்களை: கார்ல் சேகன், மார்க்ஸ், அம்பேத்கர், காந்தி, வோல்டேர், ரிச்சர்ட் ஃபெயின்மேன், ஐன்ஸ்டைன், டார்வின், நேரு, நீல் டிக்ராஸ் டைசன், இத்யாதி, இத்யாதி…
இவர்கள் என் அறிவை விரிவுபடுத்துகிறார்கள். என் சிந்தனையை செம்மைப்படுத்துகிறார்கள். என் குணத்தை மென்மைப்படுத்துகிறார்கள். என் சாதி, மதம், நாடு, சமூகம் போன்றவை எனக்குள் போட்டு வைத்த குப்பைகளை அகற்றுகிறார்கள். இவர்கள்தான் என் மதிப்புக்குரியவர்கள். அறிவீனர்களும், ஃப்ராடுகளும், பொறுக்கிகளும் அல்ல.
அப்படி இவர்களை மதிக்காமல் வாழ்வதற்காக ‘ராஸ்கல்’ எனும் பட்டக் கிடைக்குமெனில் அதனைப் பெருமையாக சுமக்கத் தயாராக இருக்கிறேன்.
— ‘ராஸ்கல்’ ஸ்ரீதர் சுப்ரமணியம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.