நெருக்கடியில் லாட்டரி அதிபர் – அலரும் அரசியல்வாதிகள் !
நெருக்கடியில் லாட்டரி அதிபர் – அலரும் அரசியல்வாதிகள் !
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்ட போதிலும் கேரளா உள்பட பல இந்திய மாநிலங்களில் லாட்டரி விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2009 – 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியது.
அதனடிப்படையில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டிடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை மொத்தம் 451.07 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்தநிலையில் மீண்டும் கொச்சின் அமலாக்கத்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்கள், கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்க ளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமான கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் உள்ள மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனம் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீடு ஆகியவற்றிலும் தனித்தனியே அதிகாரிகள் காலை 11 மணி முதல் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது வீடு, அலுவலகங்களின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. மேலும் வேறு யாரும் நுழைய முடியாதபடி பாது காப்பு போடப்பட்டு சோதனை நடைபெற்றது.
பணப்பரிமாற்றம் வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், பணபரிமாற்றம் தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் உள்ள கணினி, அதில் பதிவான விவரங்கள், பண பரிமாற்றம், உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வில்லை. அமலாக்கத்துறையினரின் திடீர் சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் இருந்த காலக்கட்டம் என்பதால் இது இன்னும் அரசியல் வட்டாரங்களில் பெரிய பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்து வருகிறது. திமுக தரப்பில் இந்த சோதனையை மிகவும் கவனத்துடன் பார்த்து வருகின்றனர்.