தமிழ்ப் பெண்களுக்கு மலையாள நடிகையின் பேருதவி!
‘அயலி‘ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை அனுமோல். ‘எல்லோரும் சமம்’ என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் ‘Always Choose Kindness’ என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர்.
சமீபத்தில் அவரது ரசிகர்கள் அண்மையில் அவரைச் சந்தித்தபோது, குடும்பத்தின் மேன்மைக்காகவும், சொந்தக் காலில் நின்று பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான சுய அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட பெண்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என கலந்துரையாடினர். இதற்கு அனுமோலும் உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ செல்வ லட்சுமி திருமண மண்டபத்தில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களின் குடும்பச் சூழல் குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.

நிகழ்ச்சியில் அனுமோல் பேசும் போது “பெண்கள் ஆட்டோ ஓட்டுவது என்பது எளிதானதல்ல. உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், உங்கள் மீது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும், சொந்தக் காலில் நின்று சுயமரியாதையுடனும் சுய அடையாளத்துடனும் திகழ்வதற்காகவும் நீங்கள் உழைப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
என்னைப் பொறுத்தவரை, எல்லோரும் சமம் என்றே கருதுகிறேன். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, எந்தவிதப் பாகுபாடுமின்றி மனிதநேயத்துடன் வாழ்வதும் மிகவும் அவசியம். உங்கள் லட்சியத்தில் மன உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்றார்.
பெண் ஆட்டோ ஓட்டுநர் பவானி பேசுகையில், “ எங்களின் தேவைகளை அறிந்து, இன்சுலேட்டட் வாட்டர் பாட்டில்(Insulated water bottles), தரமான நாப்கின், பவர் பேங்க், முதலுதவிப் பெட்டி ஆகியவற்றை அனுமோல் மேடம் வழங்கியதுடன், சுவையான உணவையும் அளித்து எங்களைக் கௌரவப்படுத்தியதை வாழ்க்கையில் மறக்க இயலாது. ஐ லவ் யூ மேடம்!” என மனம் நெகிழ கூறினார்.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.