மலேசியா டு அம்னீஷியா
தலைப்பைப் படிச்சதும் இது ஓ.டி.டி.யில் ரிலீசான ராதாமோகனின் படம்னு நினைச்சுப்புடாதீக. இது நிஜத்துலேயே செலக்டிவ் அம்னீஷியா வியாதி தாக்கும் அளவுக்கு கோலிவுட்ல நடந்த கொடுமை. மலேசியாவைச் சேர்ந்த ஆண்டி என்பவர், தமிழகத்தில் முஜீப் என்பவர் மூலம், கடந்த மார்ச் 1-ம் தேதி ‘பூ சாண்டி வரான்’ என்ற படத்தை ரிலீஸ் பண்ணினார்.
மிர்சி ரமணா, தினேஷ் சாரதி, லோகநாதன், ஹம்சனி பெருமாள் என அனைத்து நடிகர்களும் படத்தின் டெக்னீஷியன்களும் முழுக்க முழுக்க மலேசியாவைச் சேர்ந்த தமிழர்கள் தான். பெரிதாக குறை ஒன்றும் சொல்லாத அளவுக்கு படமும் நன்றாகத் தான் இருந்தது. மலேசியாவில் தயாரிக்கப்பட்டு, அங்கே நான்கு வாரங்களுக்கு மேல் ஓடி நல்ல வசூல் பார்த்த படம் தான் ‘பூ சாண்டி வரான்’. இங்கே தமிழகத்திலும் ரிலீஸ் பண்ணி, கோலிவுட்டில் தங்களுக்கு சின்ன அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் சென்னை வந்திறங்கியது படக்குழுவினர். ஆனால் சென்னையின் புறநகர் தியேட்டர்கள் மூன்றில் மொத்தமே மூன்று காட்சிகள், சென்னைக்கு வெளியே மதுரை (முஜீப்பிற்கு சொந்த ஊர் என்பதால் ) உட்பட சில இடங்கள் என தமிழகம் முழுக்கவே 8 தியேட்டர்களில் 8 ஷோ தான் கொடுத்தார்களாம் தியேட்டர்காரர்கள்.
அடுத்த படத்தை நேரடி தமிழ்ப்படத்தை தமிழ்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டு தயாரித்து ரிலீஸ் பண்ணலாமா என யோசிக்கிறார்களாம் ஆண்டியும் முஜீப்பும். உண்மைத் தமிழச்சியின் முக லட்சணத்துடன் இருக்கும் ஹீரோயின் ஹம்சனி பெருமாளும் கோலிவுட்டில் ’சான்ஸ்ஹண்ட்’ நடத்தலாமா என யோசிக்கிறாராம்.