அங்குசம் பார்வையில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் திரைவிமர்சனம் – தயாரிப்பு : ’இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்’ கமல் போரா, டி.லலிதா, பி.பிரதீப், பங்கஜ் போரா. டைரக்ஷன் & ஒளிப்பதிவு : எஸ்.டி.விஜய் மில்டன். நடிகர்—நடிகைகள்- விஜய் ஆண்டனி, சரத்குமார், மேகா ஆகாஷ், ‘டாலி தனஞ்செயா, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன். இசை : அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி உட்பட ஆறு பேர், எடிட்டிங் ; பிரவீன் கே.எல்., ஸ்டண்ட் மாஸ்டர் : ‘சுப்ரீம்’ சுந்தர். பி.ஆர்.ஓ.—சுரேஷ் சந்திரா.
ஹீரோ விஜய் ஆண்டனிக்கு மழை ஏன் பிடிக்காமல் போனது என்பதை டைட்டில் போடுவதற்கு முன்பே படக்காட்சிகளாக காண்பித்து வாய்ஸ் ஓவரும் கொடுக்கிறார் டைரக்டர் விஜய் மில்டன்.
விஜய் ஆண்டனியும் சரத்குமாரும் இந்திய ராணுவத்தின் ரகசிய ஏஜெண்டுகள். அமைச்சரின் [ ஏ.எல்.அழகப்பன் ] மகனை போட்டுத்தள்ளிவிடுகிறார் விஜய் ஆண்டனி. இதனால் ஆத்திரமான அமைச்சரின் ஆட்கள், விஜய் ஆண்டனியை குளோஸ் பண்ண, விஜய் ஆண்டனியும் அவரது காதலியும் வரும் ஜீப்பைக் கொளுத்துகிறார்கள்.
ஸ்பாட்டிலேயே காதலி குளோஸாகிறார். ஆனால் விஜய் ஆண்டனியை சரத்குமார் காப்பாற்றி அந்தமான் தீவுக்கு கொண்டு போகிறார். [ அப்படித்தான்னு நினைக்கிறோம். அவ்வளவு தான் நமக்கு புரிஞ்சது. அதுக்குப் பிறகு படம் முடியுற வரைக்கும் நமக்கு எதுவுமே புரியல, முடிஞ்ச பிறகும் புரியல ]
அந்தமானில் வில்லன் டாலி தனஞ்செயாவுடனும் அவரது ஆட்களுடனும் மோதுகிறார் விஜய் ஆண்டனி. இடையே மேகா ஆகாஷுடன் லைட் ரொமான்ஸ் பண்ணுகிறார். சரண்யா பொன்வண்ணனுடன் செண்டிமெண்டாக அட்டாச் ஆகிறார்.
க்ளைமாக்ஸில் டாலி தனஞ்செயா திருந்துகிறார். சலீம் என்ற ’2223’ என்ற விஜய் ஆண்டனியை சத்யராஜின் கட்டளைப்படி மீண்டும் போட்டுத் தள்ளுகிறார் சரத்குமார்.
என்ன மக்களே… ஏதாவது புரிஞ்சுது..? அதான் படம் முடியுற வரையும் முடிஞ்ச பிறகும் நமக்கு எதுவுமே புரியலன்னு மூணாவது பேராவிலேயே தெளிவா சொல்லிட்டோமே! இதுக்கு மேல விமர்சனம் பண்றதுக்கு என்ன இருக்கு?
இதையே தான் படம் ரிலீஸ் அன்னைக்கு, “படத்தின் ஆரம்பத்தில் நான் காட்டுனது வேற, இப்ப வந்திருக்கிறது வேற”ன்னு டைரக்டர் விஜய் மில்டனும் சோஷியல் மீடியாவுல பொங்கித் தீர்த்திருக்காரு.
ஒருவேளை இதுவும் ஒருவகையில புரமோவோ என்னவோ? அதுவும் நமக்கு விளங்கல.
-மதுரை மாறன்