எம்.பி.பி.எஸ்…வாங்கிலயோ …எம்.பி.பி.எஸ் …பட்டய கிளப்ப போகுது வியாபாரம் !
எம்.பி.பி.எஸ். வாங்கிலயோ … எம்.பி.பி.எஸ் … பட்டய கிளப்ப போகுது வியாபாரம்!
மருத்துவப் பட்டப் படிப்பிற்கான தகுதி குறித்த தேசிய மருத்துவ ஆணையத்தின் (22 .11 .2023 தேதியிட்ட) அறிவிப்பானது வணிகச் சந்தையின் நலன் சார்ந்தது என கண்டித்திருப்பதோடு, இதன் காரணமாக மருத்துவ கல்வி மட்டுமல்லாது பெண் கல்வி உள்ளிட்டு பொதுவில் இன்றைய கல்விச்சூழலில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை விரிவான அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரும் கல்வியாளருமான பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.
அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கையில், “மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இரண்டு ஆண்டுகள் நேரடியான தொடர் மேல்நிலைப் பள்ளிக் கல்விப் படிப்பில் உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல் இவற்றுடன் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் செய்முறை பயிற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. (2 years of regular / continuous / coterminous study of the subjects of Physics, Chemistry, Biology / Biotechnology, in Class 11th &12th with practical, alongwith English) தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கியுள்ள மருத்துவப் பட்டப் படிப்பு ஒழுங்கு முறைகள், 2023 (Graduate Medical Education Regulations, 2023) மேல்நிலைப் பள்ளிக் கல்வி அல்லது அதற்கு சமமான கல்வியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
தேசிய மருத்துவ ஆணையம் 22 .11 .2023 தேதியிட்ட பொது அறிவிப்பின் மூலம் இந்த விதிகளில் திருத்தம் மேற்கொண்டு, தேசியக் கல்விக் கொள்கை 2020 அனுமதிக்கும் நெகிழ்வுத்தன்மை (flexibility) அடிப்படையில், இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய படங்களை மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் படிக்காமல் வேறு பாடங்களை படித்தவர்கள், மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், “கூடுதல் பாடங்களாக” சம்மந்தப்பட்ட கல்வி வாரியத்தின் மூலம் இப்பாடங்களைப் படித்திருந்தாலும் “நீட்’ எழுதவும், மருத்துவப் படிப்பில் சேரவும் தகுதி பெற்றவர்கள் என்று அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பிற்கு முன்னர் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் இந்த புதிய விதிகள் (retrospectively) செல்லத்தக்கது என்று அறிவிக்கிறது.
சமூக நீதியின் அடிப்படையில் பள்ளிக் கல்வி முறை அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். முழுமையான கற்றல் வாய்ப்பை பள்ளிக் கல்வி உறுதிப்படுத்தும். பத்தாண்டு அடிப்படைக் கல்வியை முடித்து இரண்டு ஆண்டுகள் மேல் நிலைப் பள்ளியில் ஆர்வத்துடன் செய்முறைப் பயிற்சி உட்பட அறிவியல் பாடங்களை முறையாக படித்த மாணவர்கள் உயர் கல்வியில் அவர்கள் விரும்பும் கல்வியைத் தொடரலாம். அந்த வகையில் உயிரியல் உள்ளிட்ட அறிவியல் படங்களை படித்தவர்கள் மருத்துவப் பட்டப் படிப்பிலும் சேரலாம்.
இத்தகைய கல்வி அமைப்பு குறைந்த பட்ச சமநிலையை அனைவருக்கும் உருவாக்கித் தந்தது. தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் மாணவர்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல், அதே வேளையில் அரசு தரும் ஊக்கத் தொகையையும் பெற்று மேல்நிலைப் பள்ளிக் கல்வியை படித்து முடிக்க முடியும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாமல் படிக்க இயலும். சமூக நீதியின் அடிப்படையிலான பள்ளிக் கல்வி முறையை அழிக்கும் சூழ்ச்சிகரமான திட்டங்களைக் கொண்டதனால் தேசியக் கல்விக் கொள்கை 2020யை ஏற்க இயலாது என்ற குரல் இந்திய முழுக்க ஒலிக்கிறது. பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்கும் தொடர்பில்லாத நிலையை “நீட்” போன்ற நடைமுறைகள் உருவாக்குகிறது.
வளாகம் இல்லாத கல்வி (Education without campus) என்பதே தேசியக் கல்விக் கொள்கை 2020யின் அடிப்படைக் கோட்பாடு. அதன் வெளிப்பாடுதான் மிகவும் அதிகப்படியான திறந்தவெளி இணையவழி பாடப்பிரிவுகள் (Massive Open Online Courses). தற்போது மருத்துவப் பட்டப் படிப்பில் சேர, அடிப்படை தகுதிக்கான பாடங்களை பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், பள்ளி வகுப்பிற்கு நேரடியாக செல்லாமல் கூட படிக்கலாம், தேர்வு எழுதலாம் என்ற நிலை உருவாகிறது. இத்தகைய நடைமுறை தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும். மாணவர்கள் 18 வயதைக் கடந்தும் பள்ளிக் கல்விப் பாடங்களை படிக்க விருப்பம் தெரிவிக்கும் நிலையில், வறுமையில் உள்ளவர்களுக்கு சாத்தியப்படுமா? கல்வி மற்றும் சமூக பின்தங்கலுக்கு உள்ளானவர்கள் நிலை என்ன? பெண் கல்வியின் நிலை என்ன?
சமீபத்தில் வெளியான இராஜஸ்தான் கோட்டா பயிற்சி மையங்கள் குறித்த ஆய்வு, இப்பயிற்சி மையங்களில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தெரிவிக்கிறது.
மேல்நிலைப் பள்ளி வாரியத் தேர்வு முடிவுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக தேர்ச்சி பெறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் ஊக்கமும், தொடர்ந்து படிக்கும் வாய்ப்பும் இருக்கும் நிலையில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் படித்து தேர்ச்சி பெறுகின்றனர். பயிற்சி மையம் என்று வருகின்றபோது பெண்கள் எண்ணிக்கை குறைகிறது. இது பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வயது வளரவளர புரிதல் திறன் அதிகரிக்கும். முதிர்ச்சி பெற்ற மாணவர்களுடன் குழந்தைப் பருவத்தில் உள்ள மாணவர்களை போட்டியில் பங்கேற்க வைப்பது எந்த வகையில் நியாயம்? பள்ளியில் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் 15 முதல் 17 வயதில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விடுகின்றனர்.
பள்ளியில் நேரடியாக முழு நேரம் தொடர்ந்து (Regular and continuous study) பயிலும் மாணவர்களும், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், தான் விரும்பும் பாடத்தை மட்டுமே தனியாக படித்து உயர் கல்விக்கு வரும் மாணவரும் சமமான வாய்ப்பு பெற்றவர்களா? மருத்துவப் படிப்பு மக்களின் உயிர்காக்கும் மருத்துவச் சேவையுடன் தொடர்புடையது. சேவை மனப்பான்மையே மருத்துவக் கல்வியின் அடிப்படைத் தகுதி. பள்ளிக் கல்வி முழுமையாக வணிகச் சந்தையின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால் கல்வி, மருத்துவம் இரண்டுமே சேவையாக நீடிக்காது.
தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டுள்ள திருத்தத்தை திரும்பப் பெற மாநில அரசுகள் வற்புறுத்த வேண்டும். கல்வி, மருத்துவம் சார்ந்த அமைப்புகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். மக்களாட்சி மாண்புகளை காக்க அரசியல் கட்சிகள் இது குறித்த ஆழமான விவாதம் நடத்தி மாணவர்கள் நலன், மக்களின் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவை திரும்பப் பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்ள இயலாது. தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாக இல்லை.
மருத்துவமனை, மருந்தகம் மாநிலப் பட்டியலில் உள்ளது. மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி அனைத்து நிலையிலும் அனைத்து வகையிலும் சமமாக கிடைக்க உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உள்ளது. பொறுப்பு மாநில அரசிற்கு, அதிகாரம் ஒன்றிய அரசிற்கு என்ற அணுகுமுறை மக்களாட்சி மாண்புகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. மருத்துவப் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கையில் விதிமுறைகளை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிற்கு உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 246 யின் கீழ் அட்டவணை 7 பட்டியல் 3 வரிசை 25 யின் கீழ் மாநில அரசிற்கு உள்ள உரிமையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய “தமிழ்நாடு மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2021” இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 254 (2) கீழ் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ஒப்புதலை ஒன்றிய அரசு இதற்கு மேலும் தாமதிக்காமல் வழங்கிட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.” என்ற கோரிக்கையையும் நிறைவாக முன்வைத்திருக்கிறார், கல்வியாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.
– அங்குசம் செய்திப் பிரிவு
வீடியோ லிங்:
இதையும் படிங்க :
2 வயது குழந்தைக்கு டயாலிசிஸ்! 16 வயதில் சிறுநீரக செயலிழப்பு!
டாக்டர்கள் தரத்தை உயர்த்த NEET எப்படி உயர்த்தும்? நல்ல மருத்துவ கல்லூரிகள் நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சொல்லிக் கொடுத்து படித்த மாணவர்கள்தான் நல்ல மருத்துவர்களாக முடியும்.பணத்திற்காக நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளினால் இது நடக்காது.இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை அல்லது ஒரே plus two syllabus இருந்தால் NEET அவசியம் இல்லை.இந்தியாவில் படித்து விட்டு மேல் படிப்புகாக
வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் டாக்டர்களுக்கு entrance test வைப்பது அவர்கள் தரத்தை அறியவே.NMC செய்வதை பார்த்தால் தனியார் கல்லூரிகள் காலி இடத்தை நிரப்ப வே உள்ளது போல் தோன்றுகிறது.இந்திய போன்ற எல்லா விதத்திலும் மாறுபட்டுள்ள ஒரே படிப்பு முறை இருந்தால் NEET சாத்தியமே.NMC செய்வது துக்ளக் ஆட்சி செய்தது போல் உள்ளது.