“பிஇடி பீரியட்களை கடன் வாங்காதீங்க”: அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!
“பிஇடி பீரியட்களை கடன் வாங்காதீங்க”:
அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!
பள்ளிகளில் பிஇடி பீரியட்களை (உடற்கல்வி பயிற்சிக்கான வகுப்புகளை) கடன் வாங்காதீங்க என கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோளாக வைப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா இன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், பல எழுத்தாளர்களையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கிய தஞ்சை மண் இனி வரும் காலங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
“பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியில் ஆசிரியர்கள் பிஇடி பீரியட்களை கடன் வாங்காதீங்க. உங்கள் வகுப்புகளை வேண்டுமென்றால் கடன் வழங்கி மாணவர்களை விiளாயட அனுமதிக்க வேண்டும்.
இதை நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்,” என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
எதற்கும் தயாராக, எதற்கும் தயங்காமல் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில், தேசிய அளவில் ஆட்டக் களங்கள் காத்திருக்கின்றன என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
முன்னதாக, ‘களம் நமதே’ என்ற வீடியோ வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் கோப்பைக்கான லோகோ வெளியிடப்பட்டது.