துணை மருத்துவ படிப்புகள் ! காத்திருக்கும் வாய்ப்புகள் – விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

12 ஆம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு தேர்வு முடிவுகள் வந்த பின் என்ன செய்யலாம் என்று காத்திருப்பவரா நீங்கள்?

பனிரெண்டாம் வகுப்பில் பயாலஜி / உயிரியல் துறையைத் தேர்ந்தெடுத்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் ஆர்வம் இருப்பவரா நீங்கள்?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நீட் பரீட்சை எழுதாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டே படிக்கத்தகுந்த மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கானது தான் இக்கட்டுரை

நீங்கள் வேலை பெறுவது எளிது...

இந்த கட்டுரையில் மருத்துவத்துறையில் அதைச் சார்ந்துள்ள முக்கியமான 20 பி.எஸ்சி படிப்புகளைப் பற்றி விரிவாகக் காண்போம் (பாகம் 1 இல் முதல் பத்தும் பாகம் 2 இல் இரண்டாம் பத்தும் பார்ப்போம்)

3

அனைத்து படிப்புகளுக்கும் பொதுவான விசயங்கள்

4

1. அனைத்து மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி படிப்புகளும் நான்கு வருட படிப்புகள் ( ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கும்)

2. மூன்று வருடங்கள் படிப்பும் ஒரு வருடம் பயிற்சியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளன

3. அனைத்து படிப்புகளிலும் மனித உடல் அறிவியலின் அந்தந்த படிப்புகளுக்குத் தேவையான அடிப்படை உடற்கூறியல் , இயங்குவியல் , நுண்ணுயிரியியல், நோயியல், மருந்தியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

4. இத்துடன் அடிப்படை ஆங்கில கல்வி , அடிப்படை கணிணிக் கல்வி, அடிப்படை தொழில் சார்ந்த அறம் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன

கீழ்காணும் படிப்புகளை தர வரிசை அடிப்படையில் அடுக்கவில்லை எனவே அவரவர் விரும்பிய துறையை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்யலாம்

 

1. பி.எஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம் ( Bsc Accident & Emergency Care Technology)

இந்தப் படிப்பில் – அவசர சிகிச்சைப் (CASUALTY & EMERGENCY DEPARTMENTS) பிரிவில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கு உதவும் வகையிலும் சிகிச்சைக்கான அடிப்படை அனைத்தும் பயிற்றுவிக்கப்படும். அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளியை பரிசோதித்து அவருக்கு உரிய சிகிச்சையை வழங்குதல் , அவசர அறுவை சிகிச்சைகள் , அவசர சிகிச்சைப் பிரிவில் உபயோகப்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்த அறிவும் போதிக்கப்படும்.

கல்வி பயிலும் மூன்று வருடமும் வருடத்திற்கு ஆயிரம் மணிநேரங்கள் நேரடியாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் நேரடியாக கல்வி கற்குமாறு இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காவது ஆண்டு பல்வேறு துறை ( மருத்துவம் / அறுவை சிகிச்சை / விபத்து சிகிச்சை / மகப்பேறு மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை) அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயிற்சி எடுக்க வேண்டும்.

எதிர்காலம் :  இதே துறையில் எம்.எஸ்சி படிப்பு உள்ளது. அதைப் படிக்கலாம். சிறிய & பெரிய மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் விபத்து & அவசர சிகிச்சை தொழில்நுட்புனராக (BSc Accident & Emergency Care Techinician) பணிபுரியலாம்.

பின்குறிப்பு – தொடர்ந்து அவசர சிகிச்சை நோயாளிகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ரத்தம் சதை எலும்பு போன்றவற்றை அனுதினமும் பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். ரத்தம் சதை மரணங்கள் போன்றவற்றை தாங்க மாட்டேன் என்பவர்கள் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும். எனக்கு இந்த சவால்களை ஏற்று உயிரைக் காப்பாற்றுவது பிடிக்கும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு.

2. BASLP ( BSc Audiology Speech Language Pathology )
பி எஸ்சி செவிப்புலவியல் பேச்சு மொழி சார்ந்த நோயியல் தொழில் நுட்புணர். இந்த படிப்பில் மனிதர்களின் செவிப்புலன் அதில் ஏற்படும் செவித்திறன் குறைபாடு , காது கேளாமை மற்றும் அதைக் கண்டறிய செய்யப்படும் பரிசோதனைகள் , அதை செய்வது எப்படி? காது கேளாதவர்களுக்கு எத்தகைய சிகிச்சை பரிந்துரை செய்வது? பேசுவதில் ஏற்படும் பிரச்சனைகள் பேச்சு குளறுதல் அதற்குரிய சிகிச்சை பேச்சுப் பயிற்சி அளித்தல் குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி அளித்தல் இவ்வாறாக செவிப்புலன் மற்றும் பேச்சு அதை ஒட்டிய அனைத்து நோய்கள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும்.

எதிர்காலம் : இதே துறையில் எம்எஸ்சி உள்ளது. காது மூக்கு தொண்டை நிபுணர்களுக்கு உதவும் வகையில் செவிப்புலன் பிரச்சினையை கண்டறியும் நுட்புணர்களாக இருக்க முடியும். சுயமாக பேச்சுப் பயிற்சி அளிக்கும் நிபுணர்களாகவும் மாற முடியும். இவர்கள் ஆடியாலஜிஸ்ட் என்றும் ஸ்பீச் தெரபிஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

பின்குறிப்பு – காது கேளாதவர்கள் மற்றும் சரியாக பேச இயலாதவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முக்கிய பணி. இந்தப்பணிக்கு பொறுமை மிக மிக அவசியம்.

3. பிஎஸ்சி இதயம் சார்ந்த தொழில்நுட்பம் ( Bsc Cardiac Technology)

இந்தப் படிப்பில் இதயம் சார்ந்த உடற்கூறுயியல், இயங்குவியல், நோயியல் , நுண்ணுயிரியில், மருந்தியல் , மருத்துவ உபகரணங்கள் , மருத்துவ இயற்பியல் போன்றவை பயிற்றுவிக்கப்படும். இத்துடன் ஈசிஜி எடுப்பது, ட்ரெட் மில் பரிசோதனை எடுப்பது, ஹோல்டர் எனப்படும் தொடர் ஈசிஜி கண்காணிப்பு , தொடர் ரத்த அழுத்த கண்காணிப்பு , எக்கோ எடுப்பது எப்படி? என்பவை கற்றுத் தரப்படும் இத்துடன் ஆஞ்சியோ கிராம் , ஆஞ்சியோப்ளாஸ்டி , ஸ்டெண்ட் வைத்தல் போன்ற சிகிச்சைகளில் இதய மருத்துவருக்கு உதவுவது குறித்த நேரடி பயிற்சியும் வழங்கப்படும்.

இறுதி வருடம் – கேத் லேப் எனப்படும் ஆஞ்சியோ செய்யும் இடங்களில் மூன்று மாதம் எக்கோ பயிற்சி மூன்று மாதம் இதய நோய் தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று மாதம் ஹோல்டர் ஈசிஜி எடுக்கும் பயிற்சியில் மூன்று மாதம் நேரடி பயிற்சி பெற வேண்டும்

எதிர்காலம் : இதய நோய் சிறப்பு நிபுணர்களின் கேத் லேப்களில் அவர்களுக்கு உதவியாளர்களாக / தொழில் நுட்புணர்களாக பணிபுரிய முடியும். பெரிய மருத்துவமனைகளில் ஈசிஜி / எக்கோ /ட்ரெட்மில் போன்றவற்றை கையாளும் நுட்புணர்களாக பணியாற்ற முடியும்.

4. பிஎஸ்சி இதய நுரையீரல் ரத்த ஓட்ட தொழில் நுட்பம் Bsc Cardio pulmonary Perfusion Techonology

இந்த படிப்பு சார்ந்த இதயம் மற்றும் நுரையீரலுக்கான அடிப்படை மருத்துவ கல்வி புகட்டப்படும் இத்துடன் இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த அறுவை சிகிச்சைகளில் குறிப்பாக பைபாஸ் அறுவை சிகிச்சைகளில் உபயோகப்படுத்தப்படும் இதய நுரையீரல் இயந்திரத்தை கையாளுவது குறித்த நேரடி பயிற்சி வழங்கப்படும். இதயத்தில் அறுவை சிகிச்சை நடக்கும் போது இதய அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவியாக ஹார்ட் லங்க் மெஷினை கையாளும் நுட்புணராக பணி செய்ய வேண்டும். அந்த இயந்திரத்தை சுத்தம் செய்வது , தொற்று நீக்கம் செய்வது , பராமரிப்பது போன்ற விஷயங்கள் கற்றுத் தரப்படும்.

எதிர்காலம் – இதயம் சார்ந்த பைபாஸ் அறுவை சிகிச்சைகள் / இதய அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்தில் இதய நோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவும் குழுவில் நுட்புணர்களாக பணி புரியலாம்.

5. பிஎஸ் சி மருத்துவ ஊட்டச்சத்தியல் தொழில்நுட்பம் Bsc Clinical Nutrition

இந்தக் கல்வியில் அடிப்படை & மேம்பட்ட ஊட்டச்சத்தியல் , அடிப்படை & மேம்பட்ட உணவியல் , உடல் இயங்குவியல் , ஊட்டச்சத்து சார்ந்த உயிர் வேதியியல் , உணவுத் துறை சார்ந்த நுண்ணியிரியியல் , உணவுத்துறை அறிவியல், சமூக ஊட்டச்சத்தியல் , உணவு சார்ந்த பரிந்துரை வழங்குதல் போன்றவை குறித்து களப்பயிற்சி வழங்கப்படும். பல்வேறு இணை நோய் கொண்ட மக்களுக்கு எவ்வாறு உணவு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது குறித்த கல்வி பயிற்றுவிக்கப்படும்

எதிர்காலம் – மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து மற்றும் உணவியல் பரிந்துரையாளராக பணிபுரியலாம். சுயமாகவும் ஊட்டச்சத்து சார்ந்த உணவுமுறை பரிந்துரை செய்யும் நிபுணராக விளங்க முடியும்.

6. பி எஸ்சி தீவிர சிகிச்சை தொழில்நுட்பம் – BSc Critical Care Technology

இந்தப் படிப்பில் அடிப்படை மருத்துவ கல்வியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (INTENSIVE CARE) நோயாளிகளை கண்காணிப்பது குறித்து அடிப்படை மற்றும் மேம்பட்ட கல்வி வழங்கப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கையாளப்படும் வெண்ட்டிலேட்டர் போன்ற கருவிகளை இயக்குவது பராமரிப்பது குறித்தும் தீவிர சிகிச்சைப் பிரிவின் நிர்வாகம், தேவையான பொருட்கள் மருந்துகள் நோயாளிகளின் சார்ந்த புள்ளியியல் பராமரிப்பு மற்றும் அறம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படும்.

இறுதி வருடம் – மருத்துவத்துறை , குழந்தைகள் நலத்துறை, இதய நலத்துறை, நுரையீரல் நலத்துறை போன்றவற்றின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்.

எதிர்காலம் : மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழுவில் உறுப்பினராக பணிபுரியலாம்.

7. பிஎஸ்சி டயாலசிஸ் டெக்னாலஜி Bsc Dialysis Technology

சிறுநீரக துறை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி கற்றுத்தரப்படும் இத்துடன் சிறுநீரக செயலிழப்பில் உயிர்காக்கும் சிகிச்சையான டயாலசிஸ் ( ரத்த சுத்தீகரிப்பு முறை) செய்ய உதவும் டயாலசிஸ் இயந்திரத்தை இயக்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி முழு நேரமாக வழங்கப்படும்.

எதிர்காலம் – டயாலசிஸ் சிகிச்சை வழங்கும் தொழில்நுட்புணர்களாக டயாலசிஸ் சிகிச்சை மையங்களில் பணிபுரியலாம்
இவர்களை “டயாலசிஸ் டெக்னீசியன்” என்று அழைக்கலாம்.

8. பிஎஸ்சி – நரம்பியல் மின் இயங்குவியல் தொழில்நுட்பம் – Bsc Neuro Electro Physiology

இந்த படிப்பில் மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த அடிப்படை மருத்துவக் கல்வியுடன் ஈஈஜி எனப்படும் மூளை மின் இயங்குவியல் பரிசோதனை செய்வதற்கான பயிற்சி வழங்கப்படும். இதயத்துக்கு எப்படி ஈசிஜியோ அது போல மூளைக்கு ஈஈஜி எடுக்கப்படுகிறது. இதை வைத்து நரம்பியல் நோய் சிறப்பு நிபுணர் ஒருவருக்கு வலிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிவார். வலிப்பின் தன்மை – தூண்டப்பட்ட வலிப்பா? அல்லது தூண்டப்படாமல் ஏற்படும் வலிப்பா? என்பது குறித்தும் அறியப்படும் இது மட்டுமன்றி நரம்பு வழி கடத்தப்படும் உணர்வுகள் குறித்த பரிசோதனை (Nerve conduction study)
தசை வழி மின் ஓட்டப் பரிசோதனை ( Electro myography ) உறக்கத்தில் செய்யப்படும் மூளை இயங்குவியல் பயிற்சி ( Polysomnography) கபாள வழி மின் காந்த அலைகள் மூலம் மூளையைத் தூண்டி செய்யப்படும் மேம்பட்ட பரிசோதனைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.

எதிர்காலம் – நரம்பியல் சிறப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த பரிசோதனைகளை எடுக்கும் நுட்புணராக பணிபுரியலாம்.
மருத்துவமனைகளில் ஈஈஜி டெக்னிசியன் மற்றும் நியூரோ எலக்ட்ரோ ஃபிசியாலஜி டெக்னிசியனாக பணிபுரியலாம்.

9. பிஎஸ்சி மருத்துவ ஆய்வக நுட்புணர் Bsc Medical Laboratory Technology

இந்த படிப்பில் மருத்துவ சமூகவியல் (sociology) மற்றும் நோயரின் மனோதத்துவவியல் ( psychology) அடிப்படை மருத்துவ துறை சார்ந்த கல்வி ( Basic life sciences) இத்துடன் ஆய்வகம் நடத்துவதற்கு ஏதுவான நோயாளிகளிடம் இருந்து ரத்த , சிறுநீர் , மல , சளி மாதிரிகளைப் பெறுவது குறித்த பயிற்சி திசு நோயியல் ,மாதிரிகளில் இருந்து செல்களை நுண்ணோக்கிகளில் மருத்துவர்கள் பார்த்து நோய் கண்டறியும் வகையில் தயார் செய்வது, குருதி நோயியல், எதிர்ப்பு சக்தியியல் , நுண்ணுயிரியல், உயிர் வேதியியல் சார்ந்த அத்தனை ஆய்வக பரிசோதனைகள் பற்றியும் கற்றுத் தரப்படும்.

இறுதி ஆண்டில் நான்கு மாதங்கள் நோயியல் துறை ஆய்வகத்திலும் நான்கு மாதங்கள் நுண்ணியிரியல் துறை ஆய்வகத்திலும் நான்கு மாதங்கள் உயிர் வேதியியல் துறை ஆய்வகத்திலும் பயிற்சி பெற வேண்டும்

எதிர்காலம் – இந்தப் படிப்பு படித்தவர்கள் மருத்துவமனைகளின் ஆய்வகங்களில் ஆய்வக நுட்புணர்களாக பணிபுரியலாம்
சுயமாக ஆய்வகங்கள் தொடங்கி நடத்தி சேவையாற்றலாம்.

10. பிஎஸ்சி மருத்துவ சமூகவியல் BSc Medical Sociolgy

மருத்துவத் துறை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி அத்துடன் சமூகத்தின் கலாச்சார சூழல் , சமூக மற்றும் உடல் நலன் சார்ந்த மனோதத்துவவியல் , சமூக நலன், சமூகம் சார்ந்த மருத்துவம், சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகள், மனித உரிமை, மருத்துவமனை நிர்வாக அடிப்படை, பேரிடர் மேலாண்மை , சூழலியல் போன்றவற்றில் கல்வி புகட்டப்படும். இறுதி ஆண்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது ,
மருத்துவ துறை ஆவணங்களை பராமரித்தல், நோய்களுக்கு ஏற்ற சரியான குறியீடுகளை வழங்குதல், மன நல மற்றும் மனோதத்துவ கவுன்சிலிங் வழங்குதல் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படும்.

எதிர்காலம் – மருத்துவமனைகளில் ஆற்றுதல் படுத்துதல் மையங்களில் பணி புரியலாம். நோய் குறித்த மனம் சார்ந்த ஆற்றாமை மற்றும் அச்சங்களை போக்கும் கவுன்சிலர்களாக செயல்படலாம். உறுப்பு மாற்று கவுன்சிலராக செயல்படலாம். அரசு சார்பற்ற இயக்கங்கள் மூலம் சமூக நலனுக்காக உழைக்கலாம். அரசின் சமூக நலன் சார்ந்த இயக்கங்களில் பங்கெடுக்கலாம். மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்சன் துறையில் பணிபுரியலாம்.
மருத்துவம் சார்ந்த சுற்றுலாவை மேற்பார்வை மற்றும் நிர்வகிப்பவர்களாக பணிபுரியலாம்.

11 . பிஎஸ்சி அணுக்கதிர் மருத்துவம் – BSc Nuclear Medicine

நான்கு வருட படிப்பு இதில் எக்ஸ் ரே எடுப்பது எப்படி, எக்ஸ் ரே ஃபிலிம் இருட்டறையில் கழுவும் தொழில்நுட்பம், அடிப்படை இயற்பியல் , அணுக்கதிர் இயற்பியல் , அணுக்கதிர் மருத்துவம் அதில் உபயோகப்படுத்தப்படும் கருவிகள் , அணுக்கதிர் வேதியியல் , அணுக்கதிர் மருந்தியல் அணுக்கதிர் மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படும் மருத்துவ முறைகள், அணுக்கதிர் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள சமீப கால வளர்ச்சி , அணுக்கதிர் கொண்டு உடலியலில் ஏற்படும் மாற்றங்கள், பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு போன்றவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படும்

இறுதி ஆண்டில் புற்றுநோய் சிறப்பு மருத்துவத்தில் அணுக்கதிர் கொண்டு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் கொண்டு லீனியர் ஆக்சிலரேட்டர் கொண்டு செய்யப்படும் சிகிச்சைகள் இதய நலன் துறையில் ஈசிஜி , ட்ரெட் மில் , ஆஞ்சியோகிராம் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் அணுக்கதிர் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், நரம்பியல் துறையில் ஈஈஜி பயிற்சி, எலிசா, சி எல் ஐ ஏ போன்ற ரத்தப் பரிசோதனைகள், சைக்லோட்ரால், ஹாட் செல், சைக்லோட்ரால் மாட்யூல், ரேடியோ நியூக்ளியோடைடு தெரபி அணுக்கதிர் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்

எதிர்காலம் – புற்றுநோய் சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் ரேடியோதெரபி சிகிச்சையாளராக பணிபுரியலாம். புற்று நோய் கண்டறியும் பெட் ஸ்கேன் , எஃப் டி ஜி ஸ்கேன் போன்ற பிரத்யேக ஸ்கேன்கள் எடுக்கும் மையங்களில் நிபுணராக பணிபுரியலாம்.

12. பிஎஸ்சி அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்தியல் தொழில் நுட்பம் – Bsc Operation Theatre & Anesthesia Technology

அடிப்படை மருத்துவ கல்வியுடன் வாரத்திற்கு பனிரெண்டு மணிநேரம் காலை வேளைகளில் அறுவை அரங்கங்களில் கற்றல் நிகழும். இத்துடன் மயக்க மருந்தியலின் வழிமுறைகள் கற்றுத்தரப்படும். மயக்க மருந்து தரப்பயன்படும் கருவிகள் குறித்தும் அதை உபயோகித்தல், அவற்றை தொற்று நீக்கம் செய்தல், பராமரித்தல் குறித்தும் கற்றுத் தரப்படும்.

இறுதி ஆண்டில் அறுவை அரங்க தொற்று நீக்க அறையில் மூன்று மாதங்கள் அறுவை சிகிச்சைக்கு பின்பான கவனிப்பு அறையில் மூன்று மாதங்கள் அறுவை சிகிச்சைத் துறை தீவிர சிகிச்சை பிரிவில் மூன்று மாதங்கள் அறுவை அரங்கில் மூன்று மாதங்கள்
என்று ஒரு வருடம் பயிற்சி இருக்கும்.

எதிர்காலம் – மருத்துவமனைகளின் அறுவை அரங்கங்களில் அறுவை சிகிச்சை தொழில்நுட்புணர்களாகவும் மயக்கவியல் துறை தொழில் நுட்புணர்களாகவும் பணி புரியலாம்.

13.பிஎஸ்சி கண் பார்வை அளவையியல் – Bsc Optometry

இந்தப் படிப்பில் கண் சார்ந்த மருத்துவ அடிப்படை கல்வி கண் உடற்கூறியியல், கண் இயங்குவியல் இத்துடன் கண் பார்வை அளவையியலின் அடிப்படை தத்துவங்கள், கண் நோய்கள், கண் பார்வை குறைபாடுகள் , அவற்றை கண்டறியும் முறைகள், பார்வைக் குறைபாடுகளைக் களைய பரிந்துரைக்க வேண்டிய கண்ணாடிகள், க்ளாகோமா , காண்டேக்ட் லென்ஸ், போன்றவை குறித்த கல்வி புகட்டப்படும்.

ஒரு வருட பயிற்சி காலத்தில் கண் பார்வை குறைபாடு கண்டறிதல் மற்றும் அவற்றை நீக்கும் கண்ணாடிகளைப் பரிந்துரைத்தல் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்

எதிர்காலம் – கண் நோய் சிறப்பு மருத்துவமனைகளில் கண் பார்வை & கண் அழுத்த அளவு பரிசோதகர், கண் பார்வைக் குறைபாடு களையும் தொழில் நுட்புணர், காண்டாக்ட் லென்ஸ் பரிந்துரைப்பாளர் பணிகள் உள்ளன.
சுயமாகவும் பார்வை குறைபாடு களையும் கண்ணாடி கடைகள் நடத்தி சேவையாற்றலாம்.

14. பிஎஸ்சி மருத்துவ உதவியாளர் – Bsc Physician Assistant

மருத்துவத்துறையின் அடிப்படை கல்வி உடற்கூறியியல், இயங்குவியல், உயிர்வேதியியல், மருந்தியல் அறுவை சிகிச்சை, மயக்க மருந்தியல் அதில் பயன்படும் உபகரணங்கள் கணிணி அறிவியல் மருத்துவ தொழில் சார்ந்த எழுத்தறிவு பேச்சு ஆங்கிலம் ஆய்வுப்பயிற்சி மருத்துவமனை வார்டுகளில் பயிற்சி மருத்துவத்துறையில் அனைத்து துறைகளிலும் சென்று பணிபுரிந்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பு

எதிர்காலம் – மருத்துவமனைகளில் துறை சார் வல்லுனர்களின் கீழ் குழுவாக இயங்கும் போது மருத்துவர்களுக்கு உதவியாளராக பணிபுரிந்து அவர் கூறும் பரிந்துரைகளை எழுதுவது , அவர் கூறும் மருத்துவ ரீதியான கட்டளைகளை நிறைவேற்றுவது , வார்டுகளை நிர்வகிப்பது, மேற்பார்வை செய்வது போன்ற பணிகளில் ஈடுபட முடியும்.

15. பிஎஸ்சி செயற்கை உறுப்புகள் & மாற்றுத்திறனாளிகள் உதவிக் கருவி தொழில்நுட்பம் – Bsc Prosthesis & Orthotics

இந்த கல்வியில் – உடல் இயந்திரவியல் மற்றும் அதன் உபயோகம் பொறியியல் வரைகலை செயற்கை உறுப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கருவிகள் உருவாக்குதல் மற்றும் அதைப் பொருத்துதல் , எலும்பியல் துறையில் கை கால் நீக்க அறுவை சிகிச்சை குறித்தும் அதற்குப் பின்பாக வழங்க வேண்டிய இயன்முறை மருத்துவம் மற்றும் புனரமைப்பு குறித்த கல்வி மாற்றுத்திறனாளிகள் எளிதாக அவர்களது பணிகளைச் செய்ய ஏதுவான கருவிகள் குறித்த கல்வி இந்த கருவிகளின் பயன்பாடு இதை மக்கள் நலம் பெறும் வண்ணம் உபயோகித்தல் குறித்த கல்வி போதிக்கப்படும்

எதிர்காலம் – எலும்பியல் சிறப்பு மருத்துவமனைகள் , ப்ளாஸ்டிக் சர்ஜரி சிறப்பு மருத்துவமனைகள் , மாற்றுத் திறனாளிகள் புனரமைப்பு மையங்களில் இத்துறை நுட்புணர்கள் பணி புரியலாம்.

16. பிஎஸ்சி ஊடுகதிரியல் & ஊடுகதிர் படமெடுக்கும் தொழில்நுட்பம் – Bsc Radiography & Imaging

எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை உயகோப்படுத்தி செய்யப்படும் படங்கள், எக்ஸ்ரே கருவிகள் , சிடி ஸ்கேன் கருவிகளை பராமரித்தல், அதன் மூலம் எடுக்கப்படும் படங்களை இருட்டறையில் கழுவுதல் , சிடி ஸ்கேன் எடுத்தல் ஊடுகதிர் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுதல் போன்றவை குறித்து கற்றுத் தரப்படும். ஒரு வருட பயிற்சியில் ஊடுகதிர் வைத்து செய்யப்படும் அத்தனை பரிசோதனைகள் குறித்தும் நேரடி களப்பயிற்சி வழங்கப்படும்

எதிர்காலம் – மருத்துவமனைகளில் எக்ஸ்ரே டெக்னீசியன்களாகவும் சிடி ஸ்கேன் டெக்னீசியன்களாகவும் எம்ஆர்ஐ இயக்குபவர்களாகவும் பணி புரிய முடியும். தனியாக எக்ஸ்ரே மையங்கள் தொடங்கி நடத்த முடியும்

17. பிஎஸ்சி ஊடுகதிர் சிகிச்சை தொழில்நுட்பம் – BSc Radiotherapy Technology

எக்ஸ் ரே எனும் ஊடுகதிரை பயன்படுத்தி புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கல்வி புகட்டப்படும். ஊடுகதிர் சிகிச்சை அளிக்க உதவும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் அதை பராமரித்தல் , சரியாக பயன்படுத்துதல் குறித்தும் கல்வி புகட்டப்படும். ஊடுகதிர் கருவிகளின் தரக்கட்டுப்பாடு மற்றும் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த அறிவும் புகட்டப்படும்.

இறுதி ஆண்டில் நான்கு மாதங்கள் – புற்று நோய் ஊடுகதிர் சிகிச்சையிலும், நான்கு மாதங்கள் – அணுக்கதிர் மருத்துவத் துறையிலும், நான்கு மாதங்கள் – கதிரியக்கவியல் நோய் கண்டறிதல் துறையிலும் பயிற்சி அளிக்கப்படும்

எதிர்காலம் – ரேடியோதெரபி எனும் புற்று நோய்க்கு ஊடுகதிர் சிகிச்சை வழங்கும் நுட்புணர்களாக புற்று நோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகளில் பணி புரியலாம்.

18. பிஎஸ்சி மருத்துவ ஆவண அறிவியல் – Bsc Medical Record Science

இந்தத் துறையில் மருத்துவ அடிப்படை கல்வி அனைத்தும் புகட்டப்படும். அத்துடன் மருத்துவ ரீதியான ஆவணங்களை பராமரிக்கும் கலை பயிற்றுவிக்கப்படும். மருத்துவ புள்ளியியல், மருத்துவமனை புள்ளியில் கணக்குகள், தகவல் தொழில்நுட்பத்தை உபயோகித்தல், மருத்துவமனை தகவல் தொழில்நுட்பத்தை நிர்வகித்தல், சர்வதேச நோய் வகைப்படுத்துதல் , அறுவை சிகிச்சைகள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஒழுங்கு, அறம் , மருத்துவமனை கணக்கு வழக்கு, மருத்துவ காப்பீடு போன்றவை குறித்தும் கற்றுத் தரப்படும்

எதிர்காலம் – மருத்துவமனைகளில் மருத்துவ ஆவண காப்பாளராகவும் மருத்துவமனை கணக்கியல் நிபுணராகவும் நிர்வாக மேற்பார்வையாளராகவும் பணிபுரிய முடியும்.

19. பிஎஸ்சி நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் – Bsc Respiratory Therapy

இந்த படிப்பில் நுரையீரல் சிகிச்சை சார்ந்த அடிப்படை மருத்துவ கல்வி புகட்டப்படும். இத்துடன் நுரையீரலை தாக்கும் நோய்கள் இதயத்தை தாக்கும் நோய்கள் அவற்றை கண்டறியும் பரிசோதனைகள், நுரையீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கருவிகள் , வெண்ட்டிலேட்டர்கள் குறித்த அறிவு அதை இயக்கும் வழிமுறை , பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகான இதய மற்றும் நுரையீரல் புணரமைப்பு போன்றவற்றில் கல்வி அளிக்கப்படும்.

இறுதியாண்டில் நுரையீரல் நோய் தீவிர சிகிச்சை பிரிவிலும் நுரையீரல் இயக்க பரிசோதனை ஆய்வகத்திலும் ப்ரான்கோஸ் கோபி பரிசோதனை, உறங்கும் போது நுரையீரலின் இயக்கத்தை பரிசோதிக்கும் ஆய்வகம், நுரையீரல் புனரமைப்பு வார்டுகள் , புறநோயாளிகள் பிரிவு ஆகியவற்றில் நேரடி பயிற்சி வழங்கப்படும்.

20. பிஎஸ்சி மருத்துவ ஆய்வு பரிசோதனை & ஆய்வுத் தகவல்கள் மேலாண்மை தொழில்நுட்பம் – Bsc Clinical Trial & Clinical Data Management

மருத்துவத் துறையில் மருந்துகள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம். மருத்துவ ஆய்வின் அடிப்படைகள் ,
மருத்துவ ஆய்வுகளின் வகைகள், புள்ளியியல் , மருத்துவ ஆய்வுத் தகவல்களை மேலாண்மை செய்தல், ஆய்வுக்கு உதவும் மென்பொருள்களை கையாளுதல், பேச்சு ஆங்கிலப் பயிற்சி, மருத்துவ ஆராய்ச்சியில் கடைபிடிக்க வேண்டிய அறம், மருந்தியல் துறை , புதிய மருந்துகள் கண்டறிதல், மருத்துவ ஆராய்ச்சி குறித்த சட்டங்கள் வழிமுறைகள், தகவல் பாதுகாப்பு, மருத்துவ ஆராய்ச்சியில் பங்கெடுத்தல், மேற்பார்வை செய்தல் , நிர்வகித்தல் அனைத்து குறித்தும் விரிவான கல்வி வழங்கப்படும்.

எதிர்காலம் – மருத்துவத் துறை சார்ந்த ஆய்வுகளில் பங்கெடுத்து ஆய்வு குறித்த தகவல்கள் சேகரிப்பவராகவும் மேலாண்மை செய்பவராகவும் விளங்கலாம் இதற்கடுத்து இந்தத் துறையில் பிஎச்டி படித்து இன்னும் துறை சார்ந்த முன்னேற்றம் காணலாம்.

மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரியலாம். இந்தப் பதிவின் மூலம் மருத்துவத் துறை சார்ந்த இருபது பிஎஸ்சி படிப்புகள் குறித்து கண்டோம்.

மாணவ மாணவிகள் என்ன படிக்கப்போகிறோம்? அந்தப் படிப்பில் என்ன போதிக்கப்படும்? அந்த துறையில் படிப்பதன் மூலம் எதிர்காலத்தில் என்ன விதமான பணிகள் செய்யலாம்? என்பது குறித்து இந்தப் பதிவு சிந்தனை செய்ய உதவியிருக்கும் என்று நம்புகிறேன்

இந்தப் பதிவில் நான் இதை தேர்ந்தெடுங்கள் இதை வேண்டாம் என்று அறிவுரை கூறவில்லை. இதைப்படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது குறித்தும் பேசவில்லை. மாறாக மருத்துவ துறை சார்ந்த பட்டப்படிப்புகள் நீட் இல்லாமல் படிக்க முடிந்த 20 படிப்புகள் குறித்து தகவல்கள் தெரிவித்திருக்கிறேன்

இதில் அவரவர்க்கு உகந்ததை இன்னும் மேலதிகமாக ஆராய்ந்து விருப்பத்திற்கேற்ற படிப்பை படிக்கலாம்.

-Dr. Farook Abdulla

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.