அம்மன் அருள் திரும்பவும் கிடைக்குமா? 🤔
வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் டாக்டர். ஐசரி கணேஷ், இணைத் தயாரிப்பு: குஷ்பு சுந்தர், சுஷ்மிதா கணேஷ், விக்னேஷ் சிவன். டைரக்டர்: சுந்தர் சி., ஆர்டிஸ்ட்: நயன்தாரா, ரெஜினா கஸாண்ட்ரா, துனியா விஜய், ஊர்வசி, கருடா ராம், சுனில், குஷ்பு சுந்தர், சினேகா, யோகி பாபு, சிங்கம்புலி, அபிநயா, மைனா நந்தினி, பழ.கருப்பையா, ஒளிப்பதிவு: கோபி அமர்நாத், இசை: ஹிப் ஹாப் தமிழா, எடிட்டிங்: ஃபென்னி ஆலிவர், விஎஃப்எக்ஸ்: பி.ஆர்.வெங்கடேஷ், பிஆர்ஓ: சதீஷ் & சிவா (எய்ம்)
சென்னையில் கான்ஸ்டபிளாக இருக்கிறார் சக்தி[நயன்தாரா]. இரவு 3 மணியானதும் இவரது கனவில் சில்வர் கலர் குதிரை வீரனும் குதிரைப்படையும் வந்து பயமுறுத்துகிறது. கூடவே ‘மயிலாஞ்சிக்குப் போ” என்ற குரலும் கேட்கிறது. இவரது அம்மா ஊர்வசிக்கும் அதே கனவு, அதே குரல். இதனால் வெலவெலத்துப் போன அம்மாவும் மகளும் ஒரு பெண் சாமியாரிடம் போகிறார்கள். இவர்கள் கொடுத்த எலுமிச்சைப் பழத்தைக் கையில் வாங்கிய பெண் சாமியாருக்கும் உடம்பெல்லாம் வெலவெலத்துப் போய், “உடனே மயிலாஞ்சிக்குப் போ” என உறுமுகிறார். அந்த மயிலாஞ்சி எங்கே இருக்கு? எப்படிப் போறதுன்னு தெரியாம நயன் முழிச்சிக்கிட்டிருக்கும் போது தான் நயனுக்குள் ஒரு ’பவர்’ வந்து ஒரு பெண் குழந்தையை நரபலி கொடுக்கும் சூன்யக்காரன் நிதின் சத்யாவை துவம்சம் செய்கிறார்.
இவரைப் பாராட்டும் கமிஷனரிடம் மயிலாஞ்சிக்கு டிரான்ஸ்பர் கேட்டுப் போகிறார்கள் நயனும் ஊர்வசியும். மலைவாசஸ்தலமான அந்த ஊருக்குப் போனதுமே ஒரு மரத்தடியில்[ ஆலமரமா? அரசமரமா? வேப்பமரமான்னு தெரியல] தெய்வாம்சமாக உட்கார்ந்திருக்கும் குஷ்பு சுந்தரையும்[?!} சினேகாவையும் பார்க்கிறார்கள். உடனே அவர்கள் இருவரும் “நீ உதவிக்கு அழைத்தால் ஓடோடி வருவோம்” என்கிறார்கள். அப்பவே நமக்குத் தெரிஞ்சு போச்சு மஹாசக்தி மூக்குத்தி அம்மன் நயன் தாரா தான்னு. [அதுக்கு முன்னால டிரெய்லர் பார்த்தப்பவே தெரிஞ்சு போச்சு]
அங்கே இருக்கும் பேய் மலைக்குள் போகிறார் நயன். [போலீஸ் டியூட்டியெல்லாம் பார்ப்பதே இல்லை] அதன் பிறகு தான் அண்ணன் சுந்தர் சி.யின் மூளைக்குள் இருந்து மூட நம்பிக்கைகள் டன் டன்னாக கொட்டுகிறது. வளநாட்டு அரசனின் மகன் துனியா விஜய், சூனியக்காரி ரெஜினா கஸாண்ட்ரா மீது காதல் கொண்டு அவளுடனேயே குடித்தனம் நடத்துவதால், தனது மகள்[அபிநயா]வயிற்றுப் பேரனுக்கு முடி சூட்ட நினைக்கிறார் மன்னர். இதனால் ஆத்திரமாகும் துனியா, அப்பாவைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுகிறார். தங்கையையும் அவளது குழந்ந்தையையும் வெறி கொண்டு தேடுகிறார். ஒன்பது கிரஹங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது குழந்தையைப் பலி கொடுத்தால் ராஜ்ஜியத்தை ஆளலாம் என கணக்குப் போடுகிறார். அப்போது மூக்குத்தி அம்மன் ஆக்ரோஷமாகி, துனியாவை சூலாயுதத்தால் சொருகி,குளோஸ் பண்ணிவிட்டு, குழந்தையைக் காப்பாற்றுகிறார். அப்புறம் சூனியக்காரி ரெஜினாவையும் அழிக்கிறார். அப்போது ரெஜினாவின் வயிற்றில் வளரும் சிசுவும் அழிந்ததை நினைத்து கவலைப்படும் மூக்குத்தி அம்மன், கோவிலில் இருந்து மறைந்துவிடுகிறார்.
இப்ப ரெண்டாயிரம் வருஷம் கழிச்சு, ரெஜினாவும் துனியாவும் மறு பிறப்பு எடுக்கிறார்கள். ஒன்பது கிரஹங்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வும் நடக்கப்போகிறது. மாஜி மூக்குத்தி அம்மனாக இருக்கும் நயன் தாராவை குளோஸ் பண்ணுவதற்கு இதான் கரெக்டான நேரம் என கணக்குப் போட்டு, கேடி சாமியார்களான சுனிலையும் கருடா ராமையும் களம் இறக்குகிறார்கள்.
‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் கடவுள் நம்பிக்கை குறித்து சொல்லியிருந்தாலும் மூடநம்பிக்கைகளையும் போலிச் சாமியார் பயலுகளையும் பொளந்து கட்டியிருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும் அதில் கதையும் வலுவாக இருந்தது.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் கடவுள் நம்பிக்கையாளர்களே, குறிப்பாக அம்மனை வழிபடுபவர்களே வெறுக்கும் அளவுக்கு மூடநம்பிக்கைகளை மூட்டை மூட்டையாக கொட்டியிருக்கிறார் அண்ணன் சுந்தர் சி. அரசியல்வாதியாக வரும் டைரக்டர் நவீன், தனக்கு டெண்டர் ஆர்டர் போடாத கலெக்டரைக் கொல்ல சூன்யக்காரான் கருடா ராமின் உதவி கேட்பது, அவரும் இங்கே உட்கார்ந்திக்கிட்டு, இரண்டு கைகளையும் சேர்த்து ஆட்டியபடியே எங்கோ ரோட்டில் நடந்து போகும் கலெக்டரைக் கார் ஏற்றிக் கொல்கிறார். அண்ணே சுந்தரண்ணே ஏன்ணே இப்படி?
இதைவிடக் கொடுமை… நல்ல சாமியார் ஒருவரை[ காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி கெட்டப்பில் ஒய்.ஜி.மகேந்திரன்] போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குப் போகிறார் இன்னொரு சூனியக்காரச் சாமியாரான சுனில். ஒன்பது கிரஹங்களும் நேர்கோட்டில் சந்திக்கப் போகும் நேரம், மூக்குத்தி அம்மன் இருக்கும் இடம், ஜெயிலுக்குள் இருக்கும் துனியாவின் கேரம்போர்டை தூரத்திலிருந்தே ப்ளே பண்ணும் வல்லமை, ஜெயிலரின் கையில் இருக்கும் பேப்பரை தீப்பிடிக்க வைக்கும் பேராற்றல் இதெல்லாம் இருந்தும், சட்டப்படி ஜாமீன் வாங்க வக்கத்துப் போய், துனியாவிடம் போய், “எனக்கு மூணு நாள் ஜாமீன் வாங்கிக் கொடுங்க, எல்லாத்தையும் முடிச்சுக்காட்டுறேன்” என சவால் விடுகிறார் சுனில். எப்பேர்ப்பட்ட பவர்ஃபுல் சாமியார் பய பாருங்க மக்களே. இதாவது பரவாயில்ல, சாமியார் பயலுக பூரா ஃபிராடுக்காரனுக தான். ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால வரும் ஃப்ளாஷ்பேக்கில் மூக்குத்தி அம்மனுக்கு தனது உயிரை அபிநயா பலி கொடுத்த பிறகு தான் அவரின் குழந்தையைக் காப்பாற்றுகிறாள் மூக்குத்தி அம்மன்.

நயன் வழக்கம் போல நயமாக நடிச்சிருக்கார். ஒரு பாறையின் மேல் உட்கார்ந்திருக்கும் போது மழை பெய்து, அந்தப் பாறை சிங்கமாக மாறி, அதன் மீது அம்மன் தோரணையில் நயன் அமர்ந்திருப்பது அற்புதம். இந்த அற்புதத்திற்கு ஆதாரம் வி.எஃப்.எக்ஸ் பி.ஆர்.வெங்கடேஷ். யோகிபாபு காமெடி டோட்டல் வேஸ்ட்.
நயனைவிட அதிகம் கவர்வது ஆக்ரோஷ சூனியக்காரி மாயாவாக வரும் ரெஜினா கஸாண்ட்ரா தான். ரொம்பவே கொஞ்சூண்டு காஸ்ட்யூம் போட்டுவிட்டிருக்கிறார்கள். மற்றபடி துனியா விஜயகுமார், இவரின் அப்பா பழ.கருப்பையா, மயிலாஞ்சி ஸ்டேஷன் கான்ஸ்டபிள்களாக சிங்கம்புலி, மைனா நந்தினி, இனியா என ஒரு கூட்டமே இருக்கு. வழக்கம்போல் க்ளைமாக்ஸில் பெண்களை சாமியாட வைக்கும் சுந்தர் சி.பிராண்ட் ஆக்ரோஷப் பாடலும் இருக்கு. ஆனால் இந்தப் பாட்டுக்கு பெண்களிடம் எந்த சலனுமும் இல்லாமல் போனது பெரும்துயரம்.
அண்ணன் சுந்தர் சி.யின் படங்களிலேயே ரொம்பவும் சுமாரான படம் இது.
–ஆண்டவர்
அங்குசம் பார்வையில் ‘மூக்குத்தி அம்மன் -2 மஹாசக்தி’ 40/100






Comments are closed, but trackbacks and pingbacks are open.