தொல்லியல் தடயங்களின் வழியே வரலாற்றை நேசிக்கும் பேரா.முனீஸ்வரன் !
தொல்லியல் தடயங்களின் வழியே வரலாற்றை நேசிக்கும் பேரா.முனீஸ்வரன் !
தமிழர்களின் தாய்மடியாக அமைந்திருக்கிறது கீழடி. பண்டைய நாகரிகத்தின் சான்றுகளாக ஹரப்பா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் என்றெல்லாம் எங்கோ இருக்கும் இடங்கள் குறித்து வரலாற்று புத்தகங்களில் படித்த போது கிடைத்த பேரார்வம், நமக்கு மிக நெருக்கமான தமிழ் மண்ணில் நமது மொழியில் அதை உணரும் தருணம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.
கீழடி அகழாய்வை முன்னின்று நடத்திய அமர்நாத் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது பெருமைகொள்ள விசயமாக அமைந்திருக்கிறது.
சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி வைத்த திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழர் என்ற செய்தி நம்மை பெருமிதம் கொள்ள வைத்ததற்கு நிகரானது. விண்கலம் விண்ணை தொட்டபோதுதான் வீரமுத்துவேல் நம் கவனத்திற்கு வந்தார்.
கீழடியின் பெருமை வெளிஉலகம் அறிய நேர்ந்த சமயத்தில்தான் அமர்நாத் நம் கவனத்தை பெற்றார். இவர்களைப்போன்ற ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் ஓசையில்லாமல் தத்தமது பணியினை செய்து கொண்டுதான் வருகிறார்கள்.
சத்தமில்லாமல் தொல்லியல் துறைசார்ந்த பங்களிப்பை செய்துவரும் பேராசிரியர் து.முனீஸ்வரன் குறிப்பிடத்தக்கவர். தற்போது, சிவகங்கை, அரசு மகளிர் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றும் து.முனீஸ்வரன், வார நாட்களில் ஓய்வை நாடாமல் தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக களப்பணிக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இன்று நேற்றல்ல, ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இப்பணியை விடாது செய்து வருகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. மற்ற பாட ஆசிரியர்கள் ஓ.சி. வாங்கும் பீரியட் என்றால் அது பி.இ.டி. ஓய்வாக உறங்கும் பாடவேளை என்றால், வரலாறு பாடப்பிரிவாகத்தான் இருக்கும். ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே, வரலாற்று துறையை தொடரவும் முடியும். வெறும் ஆர்வம் என்பதாக மட்டுமில்லை, அதனையும் தாண்டி வரலாற்றை காதலிக்கிறார் முனீஸ்வரன் என்றேதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
சுற்றுலாவும் கலாச்சாரமும், மதுரை மாவட்ட தொல்லியல் தடயங்கள் தொகுதி -1, ஆகிய இவரது இரு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழி எழுத்துக்கள் என்ற மூன்றாவது நூல் தயாரிப்புபணிகளில் இருப்பதாக குறிப்பிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்த சமயத்தில் அவரது கரங்களால், “இளம் தொல்லியல் ஆய்வாளர்” விருதைப் பெற்றிருக்கிறார்.
இதுதவிர, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய்த்தின் சார்பில், “இளம் தொல்லியல் அறிஞர்” விருதையும், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தின் சார்பில் “இளம் சாதனையாளர் விருதை”யும் பெற்றிருக்கிறார். மிக முக்கியமாக, இந்த விருதுக்காக இவர் எங்கேயும் விண்ணப்பிக்கவில்லை.
இவரது பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக தேடி வந்தவை. இவரது தொல்லியல் தேடலில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாக மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கண்டறிந்த கற்கால குகைகள், பாறை ஓவியம் கற்படுக்கை, பாறைக் கீறல்கள்; கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் கி.பி.15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரன் சிற்பம்; திருமங்கலம் அருகே புளியங்குளம் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்குக் கழிவுகள், எலும்புத்துண்டுகள், சிறிய கற்கருவிகள் மற்றும் கல்வட்டம்; மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் பகுதியில், கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடது கையில் கேடயம் ஏந்தியவாறு, வலது கையை நீண்ட வாளை பிடித்தவாறு அமைந்த நடுகல்; வலையங்குளம் அருகே, திருமலை மெச்சினார் வம்சம், வலையங்குளம் விநாயகர் கோயிலில் திருப்பணிகள் செய்ததை குறிப்பிடும் கல்வெட்டு ஆகியவற்றை குறிப்பிடலாம்.
இவையெல்லாம், அந்தந்த பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், தன்னைப்போல் ஆர்வம் உள்ள சக தொல்லியல் ஆய்வாளர் களையும் இணைத் துக் கொண்டு ஆய்வில் கண்டறியப்பட்டவை என்கிறார்.
”அழிந்த ஊரும் அழியாத வரலாறும்” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக ஆய்வை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடும் பேரா.முனீஸ்வரன், சிட்டிசன் பட பாணியில் அரசாங்க பதிவேட்டில் ஊர் இருக்கும் ஆள் இருக்க மாட்டார்கள் அதுபோல பல ஊர்களை கண்டறிந்திருப்பதாக சொல்கிறார். மோதகம், வேலாம்பூர், வைரவி, ஈஸ்வரதேரி, புல்கட்டை, புதுப்பட்டி ஞ் என நீள்கிறது இந்த அடையாளமற்ற ஊர்களின் பட்டியல்.
சொந்த கைக்காசை போட்டுத்தான் தொல்லியல் தேடலை தொடர்கிறார் என்பது வியப்பை ஆழ்த்துகிறது. ”சோறு தண்ணி எதிர் பார்க்காமல்தான் இந்த பணியை தொடர்கிறேன். தருமபுரி பகுதியில் கள ஆய்வுக்கு சென்ற சமயம் சற்று நிதானிக்கத் தவறியிருந்தால் பாறை சரிவில் விழுந்திருப்பேன். உயிரையும் பணயம் வைத்துத்தான் மனநிறைவான இப்பணியை செய்து வருகிறேன்” என்கிறார்.
இவரது நிகழ்காலம் சுவாரஸ்யம் நிறைந்தவை எனில், கடந்த காலம் அத்தனை வலிகளும் வேதனைகளும் நிறைந்தவை. தே.கல்லுப்பட்டியை அடுத்த 8 கிமீ தொலைவிலுள்ள கவசக்கோட்டை தான் இவரது பூர்வீகம். ஊருக்கே 4 கி.மீ. நடந்துதான் போக வேண்டும்.
ஆரம்பப்பள்ளியை ஊரிலே முடித்தவர், ஆறாவது படிக்க 4 கி.மீ. நடந்துதான் போகவேண்டும். குடும்ப வறுமை, பள்ளிக்குப் போகாமல் ஒருவர் வீட்டு வேலைக்காரனாக சேர்கிறார்.
பின்னர் ஹோட்டல் வேலை, லோடுமேன் வேலை, செம்மறியாடு மேய்த்தது என இரண்டு வருடங்கள் ஓடிவிடுகிறது. அதன்பிறகே, ஆசிரியர்களின் உதவியோடு ஆறாம் வகுப்பை தொடர்கிறார். அதனை தொடர்ந்து கல்லூரி வாழ்க்கை. அங்கேயும் 450 ரூபாய் பீஸ் கட்ட முடியாமல், வார இறுதி நாட்களில் கூலி வேலைகளுக்கு சென்று எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி. வரை படித்திருக்கிறார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில், வரலாற்றுத்துறை விரிவுரையாளராக 2010 இல் பணிக்கு சேர்கிறார். அப்போது அவரது சம்பளம் மாதம் 2500. அக்கல்லூரியில் 8 ஆண்டுகளை ஓட்டிவிட்டு 2018 இல் வெளியேறியபோது அவரது சம்பளம் 7500.
அதனையடுத்து, சாத்தூர் எஸ்.என்.எம். கல்லூரியில் சில காலம், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் ஐயாயிரம் சம்பளத்தில் ஐந்தாண்டு காலம் ஓட்டிவிட்டார். கௌரவ விரிவுரையாளராக அரசு கலைகல்லூரிக்கு விண்ணப்பித்ததில், மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரியில் வாய்ப்பு கிடைத்து பணியில் சேர்ந்திருக்கிறார்.
பின்பு, சிவகங்கை அரசு மகளிர் கல்லூரிக்கு இடமாறுதல் பெற்று வந்து பணியை தொடர்ந்து வருகிறார். இப்போது, அவரது சம்பளம் மாதம் 25,000. பேராசிரியராக பணியிலிருந்தாலும், பேராசி ரியர் சாந்தலிங்கத்திடம் மாணவனாக இருந்து கல்வெட்டுகளை படியெடுக்கும் முறையை கற்றறிந் தவர், அதனை எளிமையான முறையில் பள்ளி மாணவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
பாலசுப்ரமணியன் என்ற ஆசிரியர் அடை யாளம் காட்டியதற்கு பிறகுதான் கீழடி அகழ்வாராய்ச்சி தொடங்கியது. முனீஸ்வரன் போன்றவர்கள் பல அடையாளங்களை அன்றாடம் காட்டி வருகிறார்கள். இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் இடையறாது இயங்கும் முனீஸ்வரன் போன்றவர்களை விருதுகளால் மட்டும் கௌரவித்தால் போதுமா?
-வே.தினகரன், ஷாகுல், படங்கள் – ஆனந்த்