”எனது நிஜ கேரக்டர் தான் படத்திலும்” – ரோஜா செல்வமணி!
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ யுவராஜ் கணேசன், ‘நியோ கேஸ்ட்ல் கிரியேஷன்ஸ்’ சத்யா கரிகாலன், ‘இரா எண்டெர்டெய்ன்மெண்ட்’ இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்து, வரும் 17-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘அன்பே டயானா’. ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் டைரக்ட் பண்ணி ஹீரோவாகவும் நடித்துள்ளார். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன், சுதர்ஷன் காந்தி, ‘பரிதாபங்கள்’ கோபி உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஷெல்லி காலிஸ்ட், எடிட்டிங் : பார்த்தா, இசை :பரத் சங்கர், பி.ஆர்.ஓ: யுவராஜ்.
17-ஆம் தேதி ரிலீசாவதால், ‘அன்பே டயானா’வின் டிரெய்லர் & பாடல் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.11-ஆம் தேதி இரவு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார், தினகரன் சிவலிங்கம் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசியவர்கள்….
பரிதாபங்கள் கோபி, எடிட்டர் பார்த்தா, ரம்யா ரங்கநாதன் , சேத்தன் உட்பட அனைவருமே வழக்கம் போல் டைரக்டருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொன்னார்கள். படம் சூப்பரா வந்திருப்பதாகவும் தியேட்டருக்குப் போய் பார்த்து ஆதரவு கொடுக்கும்படியும் வேண்டினார்கள்.
இசையமைப்பாளர் பரத் சங்கர், “நான் சென்னைப் பையன் தான், பெரம்பூருக்கு பஸ்ல போயிருக்கேன். ஆனா டைரக்டர் பாரி இளவழகன் பெரம்பூரை மையமாக வைத்து கதை சொன்னதும், அந்த இடங்களைப் பார்ப்பதற்கு மீண்டும் பெரம்பூர் போனேன். இந்தப் படம் ரிலீசான பிறகு நிறைய சென்னைவாசிகள், அந்த ஏரியாவைப் பார்க்கப் போவார்கள்”
சத்யா கரிகாலன், “இது குடும்பப் படம் மட்டுமல்ல, நல்ல மெசேஜும் உள்ள படம்”.

ரோஜா செல்வமணி, “ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்து செட்டிலான நடுத்தரக் குடும்பத் தலைவியாக, ரொம்ப கண்டிப்பான பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கேன். நிஜத்திலும் நான் அப்படித்தான். வீட்டில் எனது கணவர் செல்வமணி, மகன், மகள் இருந்தாலும் நான் தான் டாமினேட் பண்ணுவேன். அந்த டாமினேட் கூட அன்பாகத் தான் இருக்கும்”.
தினகரன் சிவலிங்கம், “இயக்குனர் பாரிக்கு சினிமா மீது இருக்கும் காதலும் விடாமுயற்சியும் தான் இந்த மேடைக்கு அவரைக் கொண்டு வந்திருக்கிறது”.

இரா.சரவணன், “இந்தப் படத்தில் எனது பணம் எதுவும் இல்லை. ஆனாலும் என்னையும் தயாரிப்பாளர்களில் ஒருவராக்கிய யுவராஜ் கணேசனுக்கு நன்றி”.
சமுத்திரக்கனி, “இளம் இயக்குனர்கள் தான் புதிய கதைகளை, புதுப் பார்வையுடன் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் இயக்குனர் பாரி இளவழகனும் புது சிந்தனையுடன் வந்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய உயரங்களைத் தொட வேண்டும்”.
சசிகுமார், “எனது நண்பர் இரா.சரவணன் அழைப்பின் பேரில் இந்த விழாவுக்கு வந்திருக்கேன். பணம் போடாத தயாரிப்பாளர்னு சரவணன் சொன்னார். ஆனால் உழைப்பைப் போட்டிருக்கிறார். அதனால் அவருக்குரிய பங்கை மற்றவர்கள் கொடுப்பார்கள்னு நினைக்கிறேன்”

யுவராஜ் கணேசன், “நான் தனிமரமாகிவிட்டதாக சிலபேர் சொன்ன போது எனக்குத் துணை நின்றவர் சரவணன். அதே போல் என்னுடன் இப்போது பலர் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களால் தான் நான் மீண்டெழுந்தேன்”.
பாரி இளவழகன் பேசும் போது கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு நன்றி சொன்னார். இசைஞானியின் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொன்னதுடன், அவரின் ‘ஜானி’ பட பாடல் ஒன்றை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பதையும் சொன்னார்.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.