பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கை நிறைவேற குரல் எழுப்பக் களமான தேசியக்கருத்தரங்கு
பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கை நிறைவேற குரல் எழுப்பக் களமான தேசியக்கருத்தரங்கு
பழங்காலம் முதலே உயிர் வாழ்வதற்குரிய பொருள்களை உற்பத்தி செய்த தமிழர்கள் தொழில் அடிப்படையில் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இந்த உண்மையையே கீழடி அகழ்வாராய்ச்சிகளும், ஆதிச்சநல்லூர் கல்வெட்டுக்களும் நமக்குத் தெரிவிக்கின்றன. காலப்போக்கில் அதிகார மையங்களும், அவற்றைச் சார்ந்த கருத்தியல்களும் தொழில்களிடையேயும் அவற்றை செய்த தொழிலாளர்களிடையேயும் பாகுபாடுகளை உருவாக்கின. அப்படி ஏற்பட்ட பாகுபாடுகளால் தொழிலாளர்கள் சமூகத்தில் பல இன்னல்களை எதிர்கொள்ளத் தொடங்கினர்.
தொழிலாளர்களின் உணர்வுகளைத் தம் படைப் புகளில் பந்தி பரிமாற்றம் செய்த படைப்பாளர்களின் படைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை ஆய்வுசெய்து, “தொழிலாளர்கள் குறித்த தமிழிலக்கியப் பதிவுகள்” என்கிற மையப்பொருளில் திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கிய சாமி சேவியர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேசியக்கருத்தரங்கில் 37 ஆய்வாளர்கள் தம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கச் செயலர்முனைவர் ஆ.தனபால் நன்றியுரை வழங்கினார். தொடக்க விழாவிலும், நிறைவு விழாவிலும் பங்கேற்ற முதன்மை விருந்தினர் களும், சிறப்பு விருந்தினர்களும் இந்த தேசியக் கருத்தரங்கு வாயிலாக முன்வைத்த கருத்துக்கள் இதோ..
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் : 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிலாளர்களுக்கான குரல்களே அவர்களும் ‘சக மனிதர்கள்’ என்ற உணர்வை சனநாயகப்படுத்தியது. எண்ணற்ற உழைப்பாளர்களின் தியாகம் அவர்களின் உரிமையைப் பெற காரணமாக அமைந்தது. உழைப்பாளர்களின் கரங்கள் பலப்பட இந்த தேசியக்கருத்தரங்கமும் இங்கு வெளியிடப்பட்ட ஆய்வுக் கோவையும் துணை நிற்கும். அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வலியை, வேதனையை, துயரத்தை, அர்ப்பணிப்பைக் கொண்டு செல்லும்.
கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் : உழைப்பை மூலதனமாகக் கொண்டு, தம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட சிக்கல்களைச் சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதே தமது கடமை என்பதை உணர்ந்த படைப்பாளர்கள் தொழிலாளர்களின் மன உணர்வுகளை இலக்கிய வடிவக் களங்களாக்கி, அவற்றின் வழியாகப் அவர்களை படம் பிடிக்கத் தொடங்கினர். பஞ்சும் பசியும், தோல், செந்நெல், தகனம், கல்மரம் உள்ளிட்ட எண்ணற்ற படைப்புகள் வெளிவந்தன. அத்தகைய இலக்கியங்களை வாசிப்பது, தேடுவது, அதன் வழியாக அவர்களுக்காக அணிசேர்வது என்பது நமது கடமை. உழைப்பவர்களுக்கான நியாயமான உரிமைகள் கிடைத்திட, சரியான அங்கீகாரத்தைச் சமூகம் வழங்கிட இளைஞர்கள் துணை நிற்க வேண்டும்.
மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் : தமிழிலே இருக்கக்கூடிய லகரம், ளகரம், ழகரம் எனும் மூன்று எழுத்துக்களும் இருக்கிற ஒரு சொல் ‘தொழிலாளர்கள்’ எனும் சொல். தமிழன் தம் உணவு, உடை, இரை என எல்லாமுமே அவன் வாழ்ந்து வந்த நிலப்பரப்பைச் சார்ந்தே அமைத்திருக்கிறான் என்பதையே சங்க இலக்கியம் குறிஞ்சி, முல்லை உள்ளிட்ட நிலமாக்கி நமக்கு அடையாளம் காட்டுகிறது.
சங்க இலக்கியங்களில் உழவர், ஆயர், வேட்டுவர், பரதர், கள்வர் என அவர்களின் வாழ்வியலாக, வாழ்வியல் சார்ந்த தொழிலாக இருந்தது. சமய இலக்கிய காலத்தில் தொழிலாளர்கள் அடியாராக மாறினர். ஆனால் அது பெருமைக்குரியதாக இருந்தது. பிறகு, பேரரசர்கள் உருவாகிறார்கள். பல படையெடுப்புகள் ஏற்படுகின்றனர். ஆதிக்கத்தை நிலைநாட்டிய அயலகப் படையெடுப்புகள் தமிழகத்திற்குள்ளும் ஊடுருவின. நாகப்பட்டிணம் கடற்கரை காரைக்கால் கடற்கரை தரங்கம்பாடி கடற்கரை என அடுத்தடுத்த மூன்று கடற்கரை நகரங்கள் வெவ்வேறு அயலக ஆதிக்கவாதிகளின் தரைநகராக இருந்திருக்கிறது என்பதே வரலாறு.
தலைநகரம் அவர்களுடையது என்றாலும் அங்கு உழைத்தவர்கள் யார் என வினா எழுப்பினால் சங்ககால இலக்கியம், மீன்பிடித் தொழில் செய்தவர்கள் எனக் குறிப்பிடும் பரதவர்களே அங்கு தொழிலாளர்களாக இருந்துள்ளனர் என்கிற விடை நமக்குக் கிடைக்கிறது. அதாவது எந்த நிலத்தில் கால் ஊன்றி தம் சொந்த நிலமாக உரிமை கொண்டாடினார்களோ அதே நிலத்தில் நின்று, கப்பலில் இருந்து பொருளை ஏற்றவும், இறக்கவும் செய்யக் கூடிய கூலித் தொழிலாளர்களாக மாறிப் போயினர் என்பதே வரலாற்று உண்மை.
பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் தொழிலாளர்கள் குறித்த பல இலக்கியங்களை மக்கள் மையப்படுத்தினர். தொழிலாளர் போராட்டங்களை சிறு சிறு பிரதிகளாக வெளியிட்டனர். இலக்கியம் மக்களுக்கானது என மையப்படுத்தினர். எண்ணற்ற படைப்பாளர்களின் நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள் தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் உயர்த்தியது.
விவசாயம் தோன்றுவதற்கு முன்பு கைகொண்டதை இன்னமும் கைகொண்டு வேட்டைச் சமூகமாகவே பழங்குடிச் சமூகம் இருக்கின்றன. மீன்களை வேட்டையாடி வாழும் பழங்குடி மீனவர்கள் மீன்களை ஏற்றுமதி செய்து தொழில் செய்பவர்கள் அல்லர். அந்த மீனவர்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலிலே சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கை மாநில
அரசால் ஒன்றிய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கை நிறைவேற இது போன்ற தேசியக் கருத்தரங்கம் வாய்ப்பாக அமைந்துள்ளது.
-இரா.முரளிகிருட்டிணன்