சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள்

சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாட்டில் இரண்டாம் நாளான சனிக்கிழமை (மே 21) பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மாநாட்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெருமன்றத்தின் கொடியை, மூத்த வழிகாட்டிக் குழு உறுப்பினர் பேராசிரியர் தி.சு. நடராசன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பெருமன்றத்தின் நிறுவனர் ஜீவானந்தம் தொடங்கி முக்கிய ஆளுமைகள் 100 பேரின் படங்கள் மாநாட்டு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொல்லியல் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சிகளை கொ.மா. கோதண்டம், முனைவர் சேய கணேஷ்ராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

3

தற்காலத் தமிழ் அசைவுகள் என்ற பொதுத்தலைப்பில், நடைபெற்ற கருத்தரங்கின் முதல் அமர்வில், தற்காலத் தமிழ் அசைவுகள்- இலக்கியத்தில் என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ. அரசு, அரசியலில் என்ற தலைப்பில் தாமரை இதழாசிரியர் சி. மகேந்திரன், பாலின சமத்துவத்தில் என்ற தலைப்பில டாக்டர் சாந்தி, ஊடகத்தில் என்ற தலைப்பில் விமர்சகர் ந. முருகேசபாண்டியன், சுற்றுச்சூழலில் என்ற தலைப்பில் சூழலிலாளர் நக்கீரன் ஆகியோர் பேசினர். காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் புலத் தலைவர் பா. ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் சரவணன், அ.கி. அரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அமர்வுக்கு வரவேற்புக் குழுவின் செயலாளர் மருத்துவர் த. அறம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் தொடங்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் பேசினர்.

4

முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் எம்ஏசிஎஸ் ரவீந்திரன் முன்னிலை உரை நிகழ்த்தினார். முன்னாள் எம்பி வெ. அழகிரிசாமி வரவேற்றார். முடிவில் முன்னாள் எம்பி பொ. லிங்கம் நன்றி கூறினார். தொடக்க அமர்வுகளில் மாநிலத் தலைவர் சி. சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் இரா.காமராசு, பொருளாளர் ப.பா. ரமணி, துணைப பொதுச் செயலாளர் ஹாமீம் முஸ்தபா, மாநிலச் செயலாளர் கண்மணி ராசா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.மாநிலம் முழுவதும் இருந்து 400 பேராளர்கள், 50 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக பெருமன்றத்தின் கொள்கை அறிக்கை முன்வைக்கப்பட்டு, அது தொடர்பான உரையாடல் நடைபெற்றது. பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் பெ. அன்பு தலைமை வகித்தார். எஸ்.கே. கங்கா அறிக்கையை முன்வைத்துப் பேசினார். எல்லை சிவகுமார், கோ. கலியமூர்த்தி, சு. பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச. தமிழ்ச்செல்வன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் க. பாரதி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மேலும், இந்நிகழ்வில் தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

1. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலில் புதிய அரசை தமிழ் மக்கள் தேர்வு செய்தார்கள். இந்தத் தேர்வு தமிழ்நாட்டிற்கு புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்ட ஒரு புதிய அரசு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பாராட்டுகிறது.மாண்புமிகு முதல்வரின் செயல்பாடுகலுக்கு பெருமன்றம் துணையாக இருக்கும் என உறுதியளிக்கிறது.

2. தாய்மொழி வழிக்கல்வி
மொழிவழிதான் ஒரு சமூகம் உருவாகிறது. தாய்மொழி வழியில்தான் சிந்தனை எழும் என்பது அறிவியல். ஒரு சமூகம் வாழ, வளர, உயர, தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. தமிழ் படிக்காமலேயே பட்டம் பெற்றுவிடும் அவலம் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இடமில்லை. பள்ளிகளில் சில வகுப்புகளுக்கு பாடமொழியாக தமிழ் இல்லை.
பயிற்றுமொழி தமிழ் என்ற கட்டாயம் இல்லை. பாடமொழியாகவும் பயிற்றுமொழியாகவும் இருப்பதற்கான பேராற்றல் தமிழுக்கு இருக்கிறது. அந்த ஆற்றலை நடைமுறைக்குக் கொண்டு வரும் குறிக்கோள் அரசுகளுக்கு இருந்திருக்க வேண்டும். தமிழ்ப் பயிற்றுமொழி குறித்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த அரசுகள் தவறிவிட்டன. பயன்பாட்டு மொழி என்பது பயிற்று மொழி வழியேதான் அறியப்படும்.
உலகில் ஓர் அறிவியல் பாய்ச்சல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் தமிழுக்கு இருக்கிறது.
அச்சு ஊடகங்கள், கணினி முதலான மின்னியல் ஊடகங்களில் தமிழ் எளிதாகவும், அழகாகவும் கையாளப்படுவதைக் கண் திறந்து பார்க்க வேண்டும்.
எத்தனையோ படையெடுப்புகள், இடையூறுகள் இவற்றிற்கிடையே தொன்மை வாய்ந்த நம் தமிழ், அழிந்துவிடாமல் காத்து நமக்கு கையளித்துச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
அந்தத் தமிழை மேலும் செழுமைப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விரும்புகிறது.
எனவே, தொடக்கப் பள்ளித் தொடங்கி, பல்கலைக்கழகங்கள் வரை கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்திலும் பயிற்றுமொழியாகத் தமிழைக் கொண்டு வர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.

3. ஆட்சிமொழி அமலாக்கம்
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாட்டரசு நிறைவேற்றிய ஆட்சிமொழிச் சட்டங்களும், ஆட்சிமொழி தொடர்பான அரசாணைகளும் முழுமையாகச் செயற்படுத்தப்படவில்லைை என்பது நடைமுறை உண்மை.
தங்கள் தாய்மொழியில் அரசு நடைபெறுவது மக்களின் ஜனநாயக உரிமை. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளிவரும் அரசாணைகள் ஆங்கிலத்திலேயே தொடர்வது கவலை அளிக்கிறது.
இக்கவலையைப் போக்கும் வண்ணம் தலைமைச் செயலகம் முதல் சிற்றூராட்சி அலுவலகம் வரை எல்லா நிலைகளிலும், எவ்வித விலக்குமின்றி, தமிழை ஆட்சிமொழியாக்குமாறும் அதனைக் கண்காணிக்க அதிகாரம் பெற்ற ஆணையம் ஒன்றை அமைக்குமாறும் தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது.

4. வழக்காடு மொழியாகத் தமிழ்
ஒரு மாநிலம் ஏற்றுக் கொண்ட ஆட்சிமொழியை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அச்சட்டத்திற்கு இசைவளிக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சட்ட விதிகள் 348 பிரிவு 2இன் வழி வழங்கப்பட்டிருக்கும் உரிமை.
பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டரசு ஒருமனதாக உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை ஏற்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.
அப்போதைய ஒன்றிய அரசின் உள்துறை அச்சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு அனுப்பியது. கொலீஜியம் இச்சட்ட மசோதாவை ஏற்கவில்லை.
மேற்கு வங்கம், குஜராஜ், இந்தி பேசும் மாநிலங்களில் அம்மாநில ஆட்சிமொழி வழக்காடு மொழியாக இருக்கிறது. அரசியல் சட்டத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாக கொலீஜியம் மேற்கொண்ட முடிவை எதிர்த்து தமிழ்நாட்டரசு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் முன்வைக்கிறது.
தமிழ் மக்கள் தங்களின் மொழி ஜனநாயகத்தை வழக்காடு மன்றங்களில் இழந்துவிட்ட அவல நிலையை தமிழ்நாட்டரசிற்கு பெருமன்றம் சுட்டிக்காட்டுகிறது.

5. மாநிலக் கல்விக் கொள்கை
ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவுத் தீர்மானத்தை வெளியிட்டிருக்கிறது. இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை மறுப்பது, ஒற்றை சமய- வேதகால- கல்வி முறையைக் கொண்டு வருவது, மாநில மொழிகளை வீழ்த்தி சமற்கிருத- இந்தி மொழியை வலுப்படுத்துவது, பழைமை வாத இலக்குகளை மீட்டெடுப்பது போன்ற அறிவியலுக்கு மாறான கொள்கைகளைக் கொண்டதாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டரசு தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க அறிவாளர் குழு ஒன்றை அமைத்திருப்பதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

இதுதொடர்பாக கீழ்காணும் பரிந்துரைகளை கலை இலக்கியப் பெருமன்றம் முன்வைக்கிறது.
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை என்பது இம்மண்ணின் வரலாற்றையும் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஓர் ஆவணமாக கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். சாதி, மத, பாலின வேறுபாடுகளைக் களையும் சமத்துவ சமூகம் அமைப்பதற்கான சாசனமாக மாநிலக் கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் இயங்கும் கல்வி நிலையங்களில் ஆங்கிலம் போல தமிழும் கட்டாயப் பாடமாக அறிவிக்க வேண்டும்.
பயிற்று மொழியாகத் தமிழைக் கொண்டு வர வேண்டும். தற்போதைய ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும்.
தாய்மொழித் தமிழ் போல ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு மாணவன் ஆங்கிலமொழியில் தன் கருத்துகளைச் சொல்லி எழுத இயலும் வகையில் ஆங்கில மொழிப் பாடம் அமைய வேண்டும்.
ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பது அதன் புரிதலுக்கும் வளர்ச்சிக்கும் இடையூறாக இருக்கிறது. தாய்மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் கற்பித்தல் முறை எளிமையாக இருக்க வேண்டும்.
கல்வி சுமையாக இருக்கக் கூடாது. ஆர்வத்தோடும் பெருவிருப்பத்தோடும் மாணவர்கள் கல்வியைக் கற்கும் நோக்கில் தமிழ்நாட்டரசின் மாநிலக் கல்விக் கொள்கை அமைய வேண்டும்.

மாணவர்களின் கற்றல் திறனைக் கூர்மைப்படுத்தும் வகையில் மனதை இலகுவாக்கும் விளையாட்டு, கைவினைப் பொருள் தயாரிப்பு போன்ற வகுப்புகள் மீண்டும் கட்டாயமாக இணைக்க வேண்டும். படைப்பாற்றலை உருவாக்கும் வகையிலான பாடத்திட்ட முறையை வலுப்படுத்த வேண்டும்.
மனப்பாடப் பழக்கம் கடந்து புரிதலை உருவாக்கும் கற்பித்தல் திறனை ஆசிரியர்களுக்கு உருவாக்க வேண்டும்.

6. தமிழ் சாகித்திய அகாதெமி
தங்கள் மொழியில் கலை இலக்கியப் படைப்புகள் வளரவும், செழுமையுறவும் இந்திய அளவில் செயல்படும் சாகித்திய அகாதெமி போன்ற ஓர் அமைப்பை கர்நாடக, கேரள மாநிலங்கள் உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன.
அதேபோல, தமிழ்நாட்டிலும் தமிழ் சாகித்திய அகாதெமி அமைக்க உரிய நடவடிக்கைகளை மேறகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது.

7. இந்தி திணிப்புக்கு எதிராக…
இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி மொழியை ஏற்கக் கட்டாயப்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை மீறி, இந்தி மொழி, தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தேசீய மொழிகள் என அறிவிக்கப்பட்ட 22 மொழிகளையும் சமமாகக் கருதி இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என பெருமன்றம் வேண்டுகோள் வைக்கிறது.
அறிவியல் வளர்ச்சியில் மொழி மாற்றம் எளிதாக அமைந்திருக்கிறது. ஓர் அரசு போல செயல்படும் ஐரோப்பிய ஒன்றியம் பல மொழிகளைக் கையாண்டு வெற்றியுடன் செயல்படுகிறது. பல சான்றுகளில் இதுவும் ஒன்று.
மாநில மொழிகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல் இந்தியை அனைத்து நிலைகளிலும் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிச வேண்டும் என பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.

8. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு…
அவசரக் கால நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது எதேச்சாதிகாரமாக மாநிலப்பட்டிலில் இருந்த கல்வியை நடுவண் அரசுப் பட்டியலுக்கு கொண்டு சென்ற முறை மக்களுக்கு எதிரானது.
கல்வி என்பது மண் சார்ந்த பண்பாட்டில் உருவாகும் ஒன்று. பன்முகக் கலாசாரங்கள் நிலவும் இந்தியாவில் ஒற்றைக் கல்வி முறை சரியானதல்ல.
இந்தியாவின் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுமாறு இந்திய அரசை கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்துகிறது.

9. தமிழில் வழிபாடு…
தமிழர்களின் பண்பாட்டு மையங்களாக கோவில்கள் இருந்துள்ளன. இப்போதும் இருந்து வருகின்றன. தமிழர்கள் தமிழ்நாட்டில் கட்டிய கோவில்களில் தமிழ் வழிபாட்டு மொழியாக ஏற்கச் செய்ய பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
தென்னாடுடைய சிவனுக்கு செந்தமிழ் புரியாது என்ற குரலை அடக்க இயலவில்லை. தமிழிலும் வழிபடலாம் என்பதை ஏற்க இயலாது.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்கள் அனைத்திலும் இறைவனைத் தமிழ் வழியே வழிபட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.

10. நுழைவுத் தேர்வுகள்…
சமூக நீதியைக் காக்கும் வகையிலும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைப் பேணும் வகையில், நீட் தேர்வு நடத்துவதில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டரசின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு இசைவளிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.
நீட்டைத் தொடர்ந்து கலை அறிவியல் உள்ளிட்ட எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு முறையைக் கொண்டு வருவது தமிழ் மாணவர்களை உயர்கல்வி ஆசையில் இருந்து, முயற்சியில் இருந்து அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையாகத் தெரிகிறது. கல்வி கற்பதற்கே நுழைவுத் தேர்வு என்ற முறை, மக்களுக்கு கல்வியூட்டும் அரசின் அடிப்படைக் கடமையில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கை என கலை இலக்கியப் பெருமன்றம் கருதுகிறது. எல்லாத் தரப்பு மக்களும் விரும்பும் அத்தனைப் படிப்புகளையும் படிப்பதற்கான கட்டமைப்புகளை தாராளமாக உருவாக்க வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.

11. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், திரைப்பட நடிகர் சங்கத்தின் ஒரு கிளை அமைப்பாகச் செயல்படுவதாக பொதுக் கருத்து இருக்கிறது. கலை, இலக்கியம், ஓவியம், கூத்து முதலான துறைகளில் தமிழர்கள் பெரும்பங்காற்றி வருகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இயல் இசை நாடக மன்றம் செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அந்த அமைப்பைச் செம்மைப்படுத்துமாறு தமிழ்நாட்டரசை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.

12. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான…
தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கொலைகாரர்களைத் தப்பிக்க விடாமல் தண்டிக்கச் செய்யவும், சாதி, மத மறுப்புத் திருமணங்களை செய்து கொள்வோரைப் பாதுகாக்கவும் சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கைவிடுக்கிறது.

13. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிறுவனரும் விடுதலைப் போராட்ட வீரரும், ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து போராடியவருமான இலக்கியப் பேராசான் ப. ஜீவானந்தம் பெயரில் இலக்கிய விருதுகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது.

14. தமிழ்நாடு அரசு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்தவும், மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி, அவர்களுக்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கி, அனைத்து வகையான சலுகைகளும் கடைக்கோடி கிராமங்களிலுள்ள கலைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். கலைஞர்களுக்கான பயிற்சிக் கூடங்கள் அமைக்கவும், நலிவுற்ற கலைஞர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் தீட்டவும் வேண்டும் என மாநில அரசை கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.

15. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத் துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்காக தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதேநேரத்தில், இந்த வாரியத்திலும் மாநிலம் முழுவதும் உள்ள வட்டார பத்திரிகையாளர் வரை அனைவரையும் இணைக்கவும், நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்று சேரும் வகையிலான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.

16. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமையான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்களுக்கு சாத்தூர் நகரில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது.

17. பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்ட முத்துலட்சுமி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு கோருகிறது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெற்ற மக்கள் கலை விழாவுக்கு சாத்தூர் நகர்மன்றத் தலைவர் எஸ். குருசாமி தலைமை வகித்தார். வரவேற்புக்குழுவின் சார்பில் வ. நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். பாரதியாரின் படத்தை கிருங்கை சேதுபதி, வ.உ. சிதம்பரனாரின் படத்தை ரெங்கையா முருகன், தனுஷ்கோடி ராமசாமியின் படத்தை கவிஞர் ரவீந்திரபாரதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பத்ம சிறீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், மக்கள் கவிஞர் பரிணாமன், வழக்குரைஞர் ப.பா. மோகன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வந்தனம் கலைக்குழு, கோவை மாற்றுக்களம், அதிர்வு தமிழிசையகம், திருச்சி பாரதி கலைக்குழு, பெரம்பலூர் ஜீவா அம்பேத்கர்நாட்டுப்புறக் கலைக்குழு உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மக்கள் பாடகர்கள் அறந்தை பாவா, ஆதிராமன், ஆரல் விக்டர், ராஜாமுகம்மது உள்ளிட்டோர் பாடல்களைப் பாடினர். சு. வேணுகோபால், நாணற்காடன் ஆகியோர் கதை சொன்னார்கள். கலைமாமணி தஞ்சை சின்னப்பொண்ணு கலந்து கொண்டு பாடல் பாடினார். திருக்குறள் முத்துகுமாரசாமி நன்றி கூறினார்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.