அறிவியல் கல்விக்கே “நீட்” ஒரு பெரும் அச்சுறுத்தல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அறிவியல் கல்விக்கே “நீட்” ஒரு பெரும் அச்சுறுத்தல் ! மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அகில இந்திய அளவில் எழுதப்படும் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே இளநிலைப் பட்டப் படிப்பில் சேரும் தகுதியைத் தீர்மானிக்கும் என்பதை தேசியக் கல்விக் கொள்கை 2020 தெளிவாக கூறியுள்ளது.

மருத்துவத்திற்கு “நீட்”, ஐஐடி யில் சேர ஜேஇஇ (JEE), மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர கிளாட் (CLAT) போன்று, மாநில அரசு கல்லூரிகளில் கலை, அறிவியல் உள்ளிட்ட மற்ற அனைத்து இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர “கியூட்” (CUET) என்ற நடைமுறையை தேசியக் கல்விக் கொள்கை 2020 அறிவித்துள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட சில உயர் கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே “கியூட்” மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.தேசியக் கல்விக் கொள்கை 2020, பெருந்தொற்று – ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காலத்தில் 2020 ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

தேசியக் கல்விக் கொள்கை 2020 கால அட்டவணைப் படி 2030 க்குள் தற்போது உள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டமைப்பை அடியுடன் மாற்றி, கொள்கையில் முன்மொழியப்பட்ட கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் திட்டம்.
மாநில அரசுகளை பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி படிப்படியாக தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சமூகநீதியின் அடிப்படையில் மாநில அரசுகளால் உருவான கல்விக் கட்டமைப்பை சிதைப்பதுடன், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சமூகநீதி அடிப்படையில் உள்ள கட்டமைப்பையும் சேர்த்து சிதைக்கும் பெரும் அபாயம் கொண்டது என்பதை உணர்ந்தே இந்தியா முழுவதும் தேசியக் கல்விக் கொள்கை 2020யை நிராகரிக்க வேண்டும் என்று உரத்த குரல் எழுப்பப்படுகிறது.

கல்வி தொடர்பான மாநில அரசுகளின் உரிமைகளை முற்றிலுமாக ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. ஒன்றிய அரசின் கொள்கையை செயல்படுத்தும் முகவர் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன.

இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் நடக்க இருக்கும் பெரும் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் “நீட்”.
நாடாளுமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டு பிரிவு 10D சேர்க்கப்பட்டதன் விளைவாக மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு “நீட் ” நடைமுறை சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டது.

பின்னர் இயற்றப்பட்ட, இந்திய மருத்துவ ஆணையச் சட்டம் (NMC) 2019ன் பிரிவு 14ன் படி இளநிலைப் பட்டப் படிப்பிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு “நீட்” கட்டாயம், பிரிவு 15ன் படி ஐந்தாண்டு படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெற “நெக்ஸ்ட்” (NExT) கட்டாயம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

“நீட்” பள்ளிப் படிப்பை சிதைத்துவிடும், சந்தையின் இலாப வெறிக்கு மாணவர்கள் இரையாக்கப்படுவார்கள், அதன் விளைவாக அரசின் பொதுச் சுகாதாரத்துறையே சீரழியும் அபாயம் உள்ளது என்ற எச்சரிக்கையை 2016 ஆண்டு முதல் விரிவாக விவாதிக்கப்பட்டது.

2016 முதல் வெளிப்படுத்தப்பட்ட அச்சங்கள் ஒவ்வொன்றாக உண்மை என்பதை கடந்த எட்டாண்டுகளாக நடந்துவரும் “நீட்” முறைகேடுகள் நிரூபித்துள்ளது.

“நீட்” என்பது மதிப்பீட்டு முறையே அல்ல, “நீட்” கற்றல் செயல்பாட்டிற்கே மிகப் பெரும் அச்சுறுத்தல் என்பதை 2024யில் நடந்த “நீட்” நிரூபித்துள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதற்கு இரண்டு எடுத்துக் காட்டுகள்:

* எந்த விதிமுறைகளும் இல்லாமல் சிலர் மட்டுமே பயனடைந்த “கருணை” மதிப்பெண் சர்ச்சை:
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், விதிகள், விவாதங்கள் எதுவும் இல்லாமல் 23 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் “நீட்” எழுதியுள்ள நிலையில் வெறும் 1563 மாணவர்கள் கோரினார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு மட்டுமே நேர இழப்பிற்கான மதிப்பெண் “கருணை”யின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

அதுவும், முறைகேடுகள் குறித்த ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு எழுந்து, நீதிமன்றத்தை நாடிய பின்னர்தான் தேசிய தேர்வு முகமை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தான் தவறு செய்ததை ஒப்புக் கொண்டு வழங்கப்பட்ட “கருணை” மதிப்பெண் திரும்பப் பெறப்பட்டு அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.

23 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் எழுதியுள்ள சூழலில் சில மையங்களில் இருந்து மட்டுமே மாணவர்கள் நேர இழப்பு குறித்து புகார் தெரிவித்துள்ளனர் என்றால், மற்ற மையங்களில் நேர இழப்பு ஏற்படவில்லையா? நேர இழப்பு எத்தகைய காரணங்களுக்காக ஏற்பட வாய்ப்பு உள்ளது? அத்தகைய சூழலில் தேர்வு மையங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தேசிய தேர்வு முகமையால் தெரிவிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு தெரிவிக்கப்படிருந்தால், அந்த நடைமுறை என்ன?

அந்த நடைமுறையை 1563 மாணவர்கள் எழுதிய மையங்கள் ஏன் பின்பற்றவில்லை? நேரம் இழப்பு குறித்து இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் ஏதாவது புகார் எழுந்துள்ளதா? நேரம் இழப்பு ஏற்ப்பட்டால், தேர்வு முடிந்த பின்னர் அது குறித்து மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் நிவாரணம் கிடைக்கும் என்று “நீட்” எழுதிய 23 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தெரியுமா?

இதுபோன்ற எந்த கேள்வியும் வழக்கில் விவாதிக்கப்படவில்லை. தவறு செய்த தேசிய தேர்வு முகமை தவறை ஒப்புக் கொண்டு, “கருணை” மதிப்பெண் திரும்பப் பெறப்பட்டு, 1563 தேர்வர்கள் மீண்டும் தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தது.

மீண்டும் நீட் எழுதுவது மன உளைச்சலுக்கு மாணவர்களை உள்ளாக்கும் என்பது குறித்தும், 23 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் “நீட்” எழுதியுள்ள நிலையில், ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தகைய வாய்ப்பு? இதனால் மற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா? என்ற கேள்விகள் விவாதிக்கப்படவே இல்லை.

* இயற்பியல் தாளில் அணு தொடர்பான ஒரு கேள்விக்கான விடையில் ஏற்பட்ட சர்ச்சை:
மேல்நிலப் பள்ளிப் (+1 & +2) பாடத்திட்டம் மாணவர்களின் வயது, அதற்கேற்ப அவர்களின் முதிர்ச்சி, அதன் விளைவாக அவர்களின் கற்றுணரும் திறன் ஆகியவற்றை கருத்தில் எடுத்துக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. கற்பித்தல் முறை, மதிப்பீடு முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியதே பாடத்திட்டம்.

மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் அணு தொடர்பான பகுதியில் மாணவர்கள் எந்த அளவு அறிவாற்றல் பெற்றிருக்க முடியும் என்பது குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல், கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு ஐஐடி – தில்லியின் துணை கொண்டு உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட விடை, அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட இந்த கேள்வியும், இந்த கேள்விக்கான விடை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவிற்கு வந்த விதமும், “நீட்” நடைமுறை நமது கல்வி முறையில் மிகப் பெரும் குறைபாட்டை உருவாக்கி உள்ளது, குறிப்பாக அறிவியல் கல்வி மற்றும் அறிவியல் அணுகுமுறை மிகப் பெரும் தாக்குதலூக்கு உள்ளாகி உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட கேள்வியானது பல விடைகளில் இருந்து ஒரு விடையை தேர்வு செய்யும் நடைமுறையில் கேட்கக்கூடாத கேள்வி என்பதையும் தாண்டி, இந்த கேள்வியும், இதற்கான பதிலாக முடிவு செய்யப்பட்ட பதிலும் அறிவியல் கற்கும் முறையையே பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.