அங்குசம் செய்தி எதிரொலி – நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக 2 இயக்குநர்கள் அதிரடியாக கைது ! வீடியோ !
நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தின் நெல்லை கிளையின் இயக்குநர்கள் சிவகங்கை தேவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சைமன் ராஜா மற்றும் கபில்தாடி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைதான நியோமேக்ஸ் இயக்குனர்கள் இருவரும் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜீலை 27ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
“5000 கோடி மெகா வசூல் – நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்” என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக கடந்த ஜூலை அங்குசம் இதழில் விரிவாக எழுதியிருந்தோம். அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் தலைமறைவாக பதுங்கிவிட்டதையும்; மதுரை உயர்நீதிமன்றக்கிளை அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதையும் பதிவு செய்திருந்தோம்.
வீடியோ லிங்
தலைமறைவானவர்களை போலீசார் தேடிவருவது ஒருபுறமிருக்க; நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நெல்லையை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுக்கமாட்டாதவர்கள் செய்யும் சதி வேலை… புரளியை நம்பாதீர்கள் …. நியோமேக்ஸ் நல்ல நிறுவனம் என்று தம் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பித்துக் கொண்டிருந்தது, நியோமேக்ஸ் நிறுவனம். இது, வழக்கம் போல, சிக்கலில் மாட்டிக்கொள்ளும் மோசடி நிதி நிறுவனங்கள் கையாளும் தந்திரங்களுள் ஒன்று.
அந்நிறுவனத்தை நம்பி பணத்தை போட்டு, திரும்ப பணம் கிடைக்காமல், பாதிக்கப்பட்டவர்கள் போலீசு நிலையங்களில் அளித்த புகார்களின் அடிப்படையில் இருந்தும்; இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு பத்திரிகைகளில் வெளியான தகவல்களிலிருந்தும்; மிக முக்கியமாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசின் தலைமையகத்தில் அதன் ஐ.ஜி.ஆசியம்மாள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்த ஆதாரப்பூர்வமான தகவல்களின் அடிப்படையில் இருந்தே விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
வீண் வதந்தி, புரளி என்று பேசிய எவரும் அடுத்த கைது செய்தி வெளியாகும் இன்றுவரையில், ஆதாரப்பூர்வமாக தங்களது மறுப்பை தெரிவிக்க முன்வரவில்லை. பதினைந்து ஆண்டுகளாக, சக்சஸ்புல்லா போய்கிட்டு இருக்க நிறுவனம் என்பவர்கள் இந்த மாத வட்டிப்பணத்தைக்கூட நான் வாங்கிவிட்டேன் என்றவர்கள் எவரும் அதற்குரிய ஆதாரங்களை நம்மிடம் வழங்கி இதையும் பிரசுரியுங்கள் என்று கோரவில்லை.
நியோமேக்ஸ் நிறுவனத்தை அணுகி, அதன் நிர்வாகியிடம் நமது செய்தியாளர் பேசும்பொழுதே, இதனை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உங்களது தரப்பு ஆவணங்களை, ஆதாரங்களை வழங்குங்கள் அவற்றை உங்களது விளக்கமாக, உள்ளது உள்ளபடி வெளியிட தயாராகவே இருக்கிறோம் என்று கோரியும் இதுவரை ஒரு துண்டுச்சீட்டைக்கூட நம் கண்ணில் காட்டவில்லை.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, மூன்று இலட்சம் தொடங்கி கோடிகணக்கில் முதலீடு செய்தவர்கள் வரையில் பலரும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். ஐ.டி. துறையில் பணிபுரியும் இளைஞர்கள், நிலத்தை விற்று முதலீடு செய்தவர்கள், இருக்கும் வீட்டை, நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து முதலீடு செய்தவர்கள் என்ற வகையில் சாமானியர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்கிறார்கள்.
வீடியோ லிங்
அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள், சிறு தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், இலக்கிய மன்றங்கள், நகைச்சுவை மன்றங்கள், எல்.ஐ.சி. , பாய்லர் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் என ஓரளவுக்கு காசு புழங்கும் ஆட்களாகப் பார்த்து வளைத்துப் போட்டிருக்கிறார்கள்.
போட்ட பணம் வருமா? என்ற கவலை ஒருபக்கம், வெளியில் சொன்னால் வெட்கம் இன்னொரு பக்கம். முதலீடு செய்த தொகையை வெளியில் சொன்னால், அதற்கு கணக்கு கேட்பார்களோ என்ற பயம் காரணமாகவும் சிலர் வெளிப்படையாக புகார் அளிக்க முன்வரவில்லை என்கிறார்கள்.
”எங்கள் மீது புகார் கொடுத்து, நாங்கள் ஜெயிலுக்கு போய்விட்டால் உங்களுக்கு எப்படி பணம் திரும்பக் கிடைக்கும்?” என்று தலைமறைவாக பதுங்கியிருக்கும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜூம் மீட்டிங்கில், லாஜிக்காக ”லாக்” செய்வதாகவும் சொல்கிறார்கள். போலீசு வட்டாரத்திலோ, அடுத்தடுத்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
– ஆதிரன் , ஷாகுல்
இது தொடர்பான வீடியோ செய்திகள்