10,158 பிளாட்டுகள் … சதுர அடி வெறும் ரூ100 முதல் … புரோக்கர் கமிஷன் இல்லை … அரசே நடத்தும் ஏலம் !
நியோமேக்ஸ் நிலம் | 10,158 பிளாட்டுகள்… Sq.Ft ரூ.100 முதல்… NO புரோக்கர் ! அரசு ஏலம் !
தங்கம் கூட, சந்தையில் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. ஆனால், ஒருநாளும் இறக்கத்தையே சந்தித்திராத பாதுகாப்பான முதலீடு என்றால், நிலத்தில் முதலீடு செய்வதுதான். நிலத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்ற விருப்பத்தில் இருப்பவரா, நீங்கள்?
உங்களுக்கான ஜாக்பாட் செய்திதான் இது. நீங்கள் ஒரு பணிபுரிந்து கொண்டிருக்கும் அரசு ஊழியராகவோ, ஓய்வு பெற்ற அரசு ஊழியராகவோ, அல்லது சிறுதொழில் புரிபவராகவோ அல்லது ஒரு நடுத்தர வர்க்கத்தினராகவோ இருப்பீர்களேயானால், கண்டிப்பாக இது உங்களுக்கான பொன்னான வாய்ப்பு.
தமிழகத்தில் நியோமேக்ஸ் என்றொரு மோசடி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி, இலட்சக்கணக்கில் முதலீடு செய்து அந்நிறுவனத்தின் மோசமான நிர்வாக குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பரிதவித்து கிடக்கிறார்கள். இந்த மோசடி வழக்கை தமிழக பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக, இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த பின்னணியில்தான், மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டு, அவை முறையான சட்ட முன்னெடுப்புகளுக்குப் பின்னர் அரசுடமையாக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு, இதுவரையில் அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களை பொது ஏலத்திற்கு கொண்டு வந்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில், முதற்கட்டமாக தமிழகம் முழுவதிலுமுள்ள நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்கள் பொது ஏலத்திற்கு வந்திருக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு கடந்த பிப்-27 ஆம் தேதி, தினத்ந்தி, தினகரன், தினமணி, தினமலர், தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளில் வெளியாகியிருக்கிறது. இதன்படி, தேனி, தென்காசி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 29 ப்ராஜெக்டுகளில் அமைந்த 10,158 பிளாட்டுகள் பொது ஏலத்திற்கு வந்திருக்கின்றன.
இந்த ஏலத்தை, ஒன்றிய அரசின் நிறுவனமான MSTC நடத்துகிறது. இந்த பொது ஏலம் மார்ச்-17 ஆம் தேதி தொடங்கி மே-14 ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது. இந்த பொது ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்.

வழக்கில் சிக்கிய வாகனங்களை அந்தந்த மாவட்ட போலீசார் பொது ஏலத்தில் விற்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். உள்ளது உள்ளபடி நடைபெறும் அந்த ஏலத்தில் சந்தை மதிப்பைக் காட்டிலும் மிகக்குறைவான விலையில் அந்த வாகனங்களை ஏலத்தில் எடுக்கவும் நாம் முயற்சி செய்திருப்போம். அதுபோலத்தான், இந்த ஏலமும். இந்த ஏலத்தை நடத்துவது தமிழக அரசின் தனி போலீசு பிரிவான பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசும் சென்னை உயர்நீதிமன்றமும். நீதிமன்ற வழிகாட்டுதலில், அதன் மேற்பார்வையில்தான் இந்த பொது ஏலமே நடைபெறுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஏலத்தை இறுதி செய்யப்போவதே இந்த வழக்கை கையாண்டு வரும் நீதியரசர் பரதசக்ரவர்த்திதான்.
சரி, விசயத்துக்கு வருவோம். முதற்கட்டமாக, இந்த ஏலத்தில் பங்கேற்கும் பிளாட்டுகள் அனைத்தையும் நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் வழிகாட்டுதலில், மதுரை டி.ஆர்.ஓ. மேற்பார்வையில் அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்ட மதிப்பீட்டுக்குழுவினர் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இந்த மதிப்பீட்டுக்குழுவில், அரசு உரிமம் பெற்ற மதிப்பீட்டாளர்கள் இரண்டு பேர், நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் இரண்டு பேர் இடம் பெற்றிருந்தார்கள். இவர்களின் இறுதி அறிக்கையின் மீதான ஆட்சேபணைகளையும் கேட்டறிந்து, அதன்பிறகே அந்தந்த பிளாட்டுகளுக்கான இறுதி மதிப்பை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
அடுத்தது, தற்போது முதற்கட்டமாக ஏலத்திற்கு வந்துள்ள இந்த பிளாட்டுகள் அனைத்தும் டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்டவை. ஆவணங்களின் எந்த வில்லங்கங்களும் இல்லாதவை என உறுதிபடுத்தப்பட்டவை. எந்த சிக்கலும் இல்லாத இந்த பிளாட்டுகளைத்தான் தற்போது முதற்கட்டமாக ஏலத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
அடுத்து, அரசே செய்த மதிப்பீடு என்பதால் நிச்சயம் சந்தையின் மதிப்பைக் காட்டிலும் ஆக மிகக்குறைவான விலைதான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பம்சம். நேரடியாக ஒரு இடைத்தரகரை அணுகி இதே இடத்தில் ஒரு பிளாட்டை வாங்க வேண்டுமென்றால், தற்போது அரசு நிர்ணயித்துள்ள மதிப்பைக் காட்டிலும் கண்டிப்பாக இன்னொரு மடங்காக விலையை சொல்வார்கள் என்பதுதான் நடைமுறை யதார்த்தம். இந்த அடிப்படையில்தான், அரசே நடத்தும் இந்த பொது ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்ற அடிப்படையில் நடைபெறும் இந்த பொது ஏலத்தில் நீங்கள் பங்கு பெற்று நிச்சயம் பலனடைய முடியும்.
நியோமேக்ஸ் தொடா்பான அனைத்து விவரங்களை அறிய
நியோமேக்ஸ் : ஏலம் தொடர்பான நீதிமன்ற அறிவிப்புகள் முழுமையாக ஒரே இடத்தில் !
இந்த பிளாட்டுகளின் விலை அவை அமைந்திருக்கும் இடங்களைப் பொறுத்து, வெறும் ரூ.100 முதல் அதிகபட்சம் 3300 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே மனை வாங்க முடியும் என்ற நிலையில் உள்ள திருச்சி மொராய்சிட்டியில் வெறும் 2500 முதல் 3300 வரைதான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மொராய்சிட்டியை தவிர்த்து சொல்வதென்றால், மற்ற மாவட்டங்களில் அமைந்துள்ள பிளாட்டுகளின் விலை அதிகபட்சம் சதுரஅடி ரூ.1446 தான்.
இன்றைய காலகட்டத்தில், டி.டி.சி.பி. அப்ரூவ்டுடன் சதுர அடி வெறும் ரூ100-க்கு பிளாட் வாங்க முடியுமா? அதுவும் அரசாங்க இடத்தை? அது இந்த ஏலத்தில் சாத்தியமாகியிருக்கிறது. தற்போது ஏலத்தில் பங்கேற்றுள்ள 10,158 பிளாட்டுகளில், பெரும்பாலான பிளாட்டுகள் ரூ100.00, ரூ.111.52, ரூ.200.00. ரூ.250.00, ரூ350.00 என்ற விலையில் ஆயிரக்கணக்கான பிளாட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன. வெறும் 1.5 இலட்சத்தில் ஒரு பிளாட்டை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.
இதே நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீட்டை போட்டு, அதற்காக வாங்கிய கடனுக்காக வட்டியை கட்ட முடியாமல் தவிக்கும் நியோமேக்ஸால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களால், இந்த பொது ஏலத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தும் பணம் கட்டி பிளாட்டை வாங்க முடியாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பிளாட்டுகள் எல்லாம் விற்பணை ஆனால்தான், அவர்கள் இழந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாவது நிவாரணமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
அந்த வகையில், நீங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்பதன் வழியாக குறைந்தவிலையில் பிளாட்டுகளை உரிமையாக்கிக் கொள்வதோடு மட்டுமின்றி; பணத்தையும் நிம்மதியையும் இழந்து தீர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு செய்த புண்ணியமாகவும் அமையும்.
இந்த ஏலத்தில் எப்படி பங்கேற்பது? இந்த ஏலத்தில் பங்கு பெற்றுள்ள பிளாட்டுகளின் ஆவணங்கள் மற்றும் அந்த பிளாட்டுகள் அமைந்துள்ள இடங்களை எப்படி சரிபார்ப்பது? என்பது உள்ளிட்டு முழுமையான தகவல்கள் அனைத்தும் கீழே இடம்பெற்றுள்ள இந்த பதிவில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு இணையதளம், ஏலத்தை நடத்தும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்தின் இணையதளத்தை பார்வையிடலாம். நமது அங்குசம் இணையதளம் மற்றும் அங்குசம் அறம் யூடியூப் சேனலிலும் வழிகாட்டுதல் வீடியோக்கள் இடம்பெற்றிருக்கின்றன. வாய்ப்பும், விருப்பமும், பிளாட் வாங்கும் அளவுக்கு வசதியும் உள்ளவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நியோமேக்ஸ் நிலம் ஏலம் | MSTC இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி ?
– அங்குசம் புலனாய்வுக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.