நியோமேக்ஸ் : கம்பெனியிடமே கொடு ! ஆறுமாசம் கெடு ! அதிர வைத்த தீர்மானம் !
நியோமேக்ஸ் விவகாரத்தில், அதிரடி திருப்பமாக, “ஏல நிகழ்வுகளை நிறுத்தி விட்டு, உயர்நீதிமன்ற கண்காணிப்பில், மீதமிருக்கும் கம்பெனி சொத்துக்களை, கம்பெனியே ஆறு மாத கெடுவுக்குள் விற்று பணமாக்கி, உண்மையான முதலீட்டாளர்களுக்கு முழு முதலீட்டையும் தர உத்திரவிட வேண்டும்.” என்பதாக, நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
மானாமதுரை நியோமேக்ஸ் குழும நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில், செப்-26 அன்று மதுரை ராணி மஹாலில் நடைபெற்ற பொதுக்குழுவில்தான் இத்தகைய அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலர் கணேசன், மற்றும் மதுரை பொறுப்பு மேயர் டி.நாகராஜன், வழக்கறிஞர் தாளை முத்தரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
இந்தக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராமச்சந்திரன் தலைமையிலான அஸ்ட்ரோனியா சங்கம்; அசோக் தலைமையிலான ராமநாதபுரம் நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம்; சிவகாசி ரோஷன்கான் தலைமையிலான சவுத் சைடு அசோசியேஷன்; நெய்வேலி அன்புநாயகம் தலைமையிலான நியோ டெபாசிட்டர்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்; மயிலாடுதுறை மஞ்சரி தலைமையிலான காவேரி தாய் அசோசியேஷன்; கும்பகோணம் ஸ்ரீனிவாசன் தலைமையிலான வெல்ஃபேர் அசோசியேஷன்; திருச்சி அய்னன் தலைமையிலான வாட்சப் குழு மற்றும் திருநெல்வேலி, தென்காசி வாட்சப் குழுவை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைத்து 7 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஒரு தரப்பில், இந்த முடிவு சரியானது என்று ஆதரவளிப்பதோடு, இதற்கு நீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். மற்றொரு தரப்பில், திருடன் கையிலேயே சாவியை கொடுப்பதா? என்ற கேள்வி எழுப்பி இந்த முடிவை எதிர்க்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, மானாமதுரை சங்கத்தை சேர்ந்த கனேஷ் ஆதித்திடம் அங்குசம் சார்பில் பேசியபோது, “தற்போதைய ஏல நடைமுறை நீதிமன்றம் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. வெளிநபர்கள் ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. அவ்வாறு வந்த 2 கோடி ரூபாயும்கூட, இதுவரையிலான விளம்பர செலவுக்கே சரியாகிவிட்டது. இந்நிலையில், பணமாக தீர்வு வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு நீதிமன்றம் எப்படி தீர்வைத் தரப்போகிறது?

இன்னொருபுறம், தங்களது முதலீட்டு தொகைக்கு நிகரான மதிப்பில் இடங்களை தேர்வு செய்துவிட்டு, அதற்காக எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கு சேவை கட்டணத்தையும் கட்டிவிட்டு, தீர்வுக்காக காத்திருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் முதல்கட்டமாக 30% தான் தீர்வு தர முடியும் என்று நீதிமன்றம் அறிவித்தால், அவர்களெல்லாம் எஞ்சிய 70% தொகையை திருப்பி செலுத்த வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லை.
இது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பத்தை மட்டுமல்ல; அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான், பணமாக தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களுக்கு நீதிமன்றம் உரிய மாற்று வழிமுறையை கையாள வேண்டும். முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். அதற்காக, பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறோம்.” என்பதாக தெரிவிக்கிறார், அவர்.
நிறுவனத்திடமே, பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமா? இல்லையா? என்பதெல்லாம் நீதிமன்றத்தின் சட்ட விவகாரம். ஆனால், பணமாக தீர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களுக்கு நீதிமன்றத்தின் பதில் என்ன என்பதுதான், இப்போதைக்கு முன் எழுந்திருக்கும் பிரதான கேள்வியாக அமைந்திருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.