தமிழகத்தில் முதல்முறையாக திருச்சியில் புதிய டால்பி எல்.ஏ. சினிமா !
என்னதான் ஆன்ட்ராய்டு போனிலேயே அனைத்து வசதிகளும் கிடைத்தாலும், தியேட்டருக்கு சென்று சினிமா அனுபவத்தை ரசிப்பது என்பது எப்போதும் தனி பரவசத்தை தரக்கூடியது. அதுவும் தியேட்டரில், முன்னால் அமர்ந்திருப்பவர்களின் தலை திரையை மறைக்காமல், அண்ணாந்து பார்க்கும்படி இல்லாமல், நடு வரிசையில் நினைத்த மாதிரி சீட் பிடித்து பார்ப்பது என்பது அதில் நாம் எதிர்கொள்ளும் சவால். இந்த சிரமங்கள் எதுவுமே இல்லாமல், தியேட்டரின் எந்த தொலைவில் இருந்து, எந்த மூலையில் அமர்ந்தபடி பார்த்தாலும் ஒரே காட்சித்திரையிடல் அனுபவத்தை, ஒரே ஒலி அனுபவத்தோடு 4K புரோஜெக்ஷன் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் அதிநவீன சினிமாவை கண்டு களிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
தமிழகத்திலேயே முதல்முறையாக அதுவும் நம்ம திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த புதிய டால்பி சினிமா திரையரங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது, எல்.ஏ.சினிமா. திருச்சி – திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே எல்.ஏ. சினிமா குழுமம் சார்பில் நிறுவப்பட்டிருக்கும் 6 திரையரங்குகள் கொண்ட புதிய டால்பி சினிமா தியேட்டரை, உலகநாயகன் கமலஹாசன் திறந்து வைத்திருக்கிறார்.
திருச்சியின் என்றும் மறவாத அடையாளமாகிப் போனவர்களுள் தவிர்க்கவியலாதவர் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எல்.அடைக்கலராஜ். அவரது புதல்வர்கள் ஜோசப் லூயிஸ், ஜோசப் பிரான்சிஸ் மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர்களின் நிறுவனம்தான் எல்.ஏ.சினிமாஸ். இதன் தற்போதைய நிர்வாக இயக்குநராக, ஜோசப் பிரான்சிஸ் அடைக்கலராஜ் இருந்து வருகிறார்.
”இந்தத் திரையரங்கம் சாதாரண திரையரங்குகளை விட இரண்டு மடங்கு பிரகாசமும், மூன்று மடங்கு வண்ணச் சமநிலையும் கொண்டது என்றார். திரையின் எந்த மூலையில் அமர்ந்து பார்த்தாலும் ஒரே மாதிரியான காட்சியை ரசிக்கும் வகையில் திரை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும்; இயற்கையான ஒலி அமைப்பை இதில் அனுபவிக்க முடியும் என்றும்; மொத்தமாக ஆறு திரைகளிலும் சேர்த்து 1,500-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும்” தெரிவித்தார், டால்பி நிறுவனத்தின் இந்திய இயக்குனர் சமீர் சேட்.
முதல் டால்பி சினிமாவை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்ததை நினைவு கூர்ந்தவர், தனது கலை தளத்தில் மற்றுமொரு அற்புதமான படைப்பாக இத்திரையரங்கை அமைப்பது துணிச்சலான முடிவு மற்றும் இதற்கு அனுபவம், இளமை மற்றும் அறிவும் தேவை என்று எல்.ஏ. சினிமாவின் முயற்சியை பாராட்டினார். இவர்களோடு தனக்கு பத்தாண்டு கால பந்தம் என்பதையும் பெருமையோடு பதிவு செய்யத்தவறவில்லை. ”பக்கத்து சீட்ல உட்கார்ந்து இருக்கிறவன், என்ன அட்ரஸ், என்ன சாதின்னு கேட்காத அற்புதமான கோவில் சினிமா என்று நான் நம்புகிறேன்.” என்று தனக்கே உரிய பாணியில் பதிவு செய்தார் நடிகர் கமலஹாசன்.
பங்கேற்ற பிரபலங்கள் !
இந்நிகழ்வில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், டால்பி நிறுவனத்தின் சவுத் இந்தியா தலைமை மேலாளர் வெங்கட், ஆல் இந்தியா சவுண்ட் மற்றும் புரொடக்சன் இன்சார்ஜ் ஷான், தமிழ்நாடு டிஸ்ட்ரிபியூஷன் அசோசியேசன் தலைவர் அருள்பதி, முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட், ஜென்னீஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் சித்தார்த்தன் ஆண்டனி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு; திரைத்துறைச் சார்ந்த பிரமுகர்களான ரெட் ஜெயண்ட் மூவிஸ் எம். செண்பகமூர்த்தி, ஜி.டி. பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தியாகராஜன், டாக்டர் விக்னேஷ்வர பாலாஜி, மேலாளர் குமரப்பன், கரூர் அஜந்தா எல்லோரா டாக்கீஸ் மீனாட்சிசுந்தரம், வையாபுரி, கார்த்திகேயன், மதன் சுந்தரம், கோவை ராஜமன்னார் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்; திருச்சி தஞ்சை திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவர் கணேஷ்குமார், எம்.ஏ.வி. சிட் பிரைவேட் லிமிடெட் அருணாச்சலம், வினோத் கண் மருத்துவமனை டாக்டர் எம்.ஏ. வினோத், வேலூர் எஸ்.பிக்சர் ஜி.சீனிவாசன் மற்றும் தென்காசி பி.எஸ்.எஸ். மல்ட்டி பிளக்ஸ் பி.ஜே. பிரதாப்ராஜா உள்ளிட்ட ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் இந்தத் திறப்பு விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.