போலிஸ் கஸ்டடி முடிந்த நியோமேக்ஸ் நிர்வாகி 3 பேருக்கு மட்டும் ஜாமீன் !
போலிஸ் கஸ்டடி முடிந்த நியோமேக்ஸ் நிர்வாகி 3 பேருக்கு ஜாமீன்
மதுரையை தலைமை இடமாக கொண்டு நியோமேக்ஸ் நிலநிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தி கூறியுள்ளனர். இதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி தரவில்லை என புகார் எழுந்தது. இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நியோமேக்ஸ் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி, பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தினமும் காலை 10 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தலா ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் போலிஸ் கஸ்டடி முடிந்த இந்த 3 பேருக்கு மட்டுமே ஜாமீன் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தலைமறைவாக உள்ள நியோமேக்ஸ் நிர்வாகிகளுக்கு இது பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிர்வாகிகளுக்கு நெருக்கடி அதிகமாகி வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து விட வேண்டும் என்று அரசு தரப்பை சரிக்கட்டும் வேலையில் இறங்கி உள்ளனர்.