“எனக்கு புது வாழ்க்கை கொடுத்தவர் லைக்கா சுபாஷ்கரன்” –‘சந்திரமுகி–2’ விழாவில் வைகைப்புயல் வடிவேலு உருக்கம்!
“எனக்கு புது வாழ்க்கை கொடுத்தவர் லைக்கா சுபாஷ்கரன்” –‘சந்திரமுகி–2’ விழாவில் வைகைப்புயல் வடிவேலு உருக்கம்!
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.
இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி பேசுகையில், ” இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள் தான்.
இந்த திரைப்படத்தை முதல் முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை.. படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.
சந்திரமுகி படத்தின் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார்? என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்தத் திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்தது. பொதுவாக பின்னணி இசையை ஒரே ஒரு தொழில்நுட்பக் கலைஞரை மட்டும் பிரதானமாக வைத்து பணியாற்றுவோம். ஆனால் இந்த படத்திற்காக ஏழு திறமையான புரோகிராமர்களை வரவழைத்து இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தோம். தரம் குறையாமலும் விரைவாகவும் உருவாக்கி இருக்கும் பின்னணி இசை எப்படி இருக்கிறது? என்று ரசிகர்களாகிய நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.
சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல்… ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா.” என்றார்.
‘வைகைப்புயல்’ வடிவேல் பேசுகையில், ” ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.
இதற்கு முதல் படம் மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படம். அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த ரெண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற..
முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.
மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு.
என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன்லி லைனை மட்டும்தான் சொல்வார்.
இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன்.
அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2.
சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.
இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன் ” என்றார்.