தவெக ஆட்சிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்? திமுக – அதிமுகவின் திட்டம் பலிக்குமா?
தமிழ்நாட்டில் ஜேசாப் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக கூட்டணி அரசு 6 மாதங்களைக் கடந்து உள்ளது. இந்நிலையில், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ள திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அரசைக் கவிழ்க சதி செய்யப்படுகின்றது“ என்று அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு தவெக ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா? என்பதின் உண்மை நிலவரங்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் மீது எதிர்க்கட்சி அல்லது கட்சிகள் 6 மாதத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.72இன்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம். அப்படி கொண்டுவருகின்றபோது அவையில் குறைந்தபட்சம் 24 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சட்டமன்றம் கூடுவதற்கு முன்பே உறுப்பினர் ஒருவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறேன் என்பதற்கு எழுத்துப்பூர்வமாக பேரவைச் செயலாளரிடம் வழங்கவேண்டும்.
பேரவைத் தலைவர் அவையின் விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, பின்னர் அவையில் அத் தீர்மானத்தை வாசிப்பார். இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் உறுப்பினர்களை இருக்கைகளிலிருந்து எழுந்து நிற்க பேரவைத் தலைவர் கேட்டுக்கொள்வார். 24 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிப்பார். 24க்கும் குறைவான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்படுகிறது என்று பேரவைத் தலைவர் அறிவிப்பார்.
6 மாதங்களை நிறைவு செய்துள்ள தவெக கூட்டணி அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. போதைப்பொருள் நடமாட்டம் மிகுந்துவிட்டது. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாட்ஸ்-ஆப்-இல் ஆபாச செய்தி அனுப்புகிறார். காணாமல்போன சிறுமி ஒரு மாதமாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை. தீபாவளி நாளில் 9 கொலைகள் நடைபெற்றுள்ளன – என எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகள் மீது குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கினால் திமுக அல்லது அதிமுக கட்சிகள் சட்டமன்றத்தில் தவெக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வாய்ப்புகள் அதிகம். அப்படி கொண்டு வந்தால் திமுக + அதிமுக இணைந்து ஆட்சிக் கவிழ்க்கும் வாய்ப்பு உள்ளதா? என்றால் ஆட்சியைக் கவிழ்க்கும் 118 எண்ணிக்கை இந்த இருகட்சிகளிடமும் இல்லை. திமுக, அதிமுக கட்சிகள் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 50கோடி வரை பணம் கொடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க சொல்லிவருகிறார்கள் என்று தவெக தரப்பில் கூறப்படுகின்றது.
சட்டமன்றத்தில் தவெக 109, காங்கிரஸ் 5, விசிக 2, முஸ்லீம் லீக் 2, சுயேட்சை 1, இடதுசாரிகள் 4 அரசுக்கு ஆதரவாக 123 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. தற்போது சட்டமன்றத்தில் 5 இடங்கள் காலியாக உள்ளது. மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 229. இதில் பெரும்பான்மை 115 ஆகும். தவெக அரசுக்கு பெரும்பான்மையைத் தாண்டி 8 உறுப்பினர்களின் ஆதரவு கூடுதலாக உள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறும் வாய்ப்பும் அரசு கவிழும் வாய்ப்பில்லை.
எதிர்கட்சிகள் தரப்பில் 106 உறுப்பினர்கள் உள்ளனர். தவெக அஞ்சுவதுபோல் எதிர்கட்சித் தரப்பு தவெகவிலிருந்து 10 பேரை விலைக்கு வாங்கவேண்டும். தலைக்கு 50 கோடி என்றால் மொத்த செலவு 500 கோடி. அப்படி வருவதற்குத் தற்போதைக்குத் தவெகவில் யாரும் தயாராக இருக்க வாய்ப்பில்லை. கூட்டணிக் கட்சிகளும் ஆதரவைத் திரும்பபெறவும் வாய்ப்பில்லை. ஒருவேளை எதிர்கட்சிகள் 500 கோடி செலவு செய்து ஆட்சியைக் கவிழ்த்தால் தவெக மீண்டும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றும் என்பதும் எதிர்கட்சிகளுக்குத் தெரியும்.
அப்படியானால் எதிர்கட்சிகள் ஏன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேண்டும்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா…
ஆளும்கட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அந்த ஜனநாயக உரிமையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், விவாதத்தில் எதிர்கட்சிகள் சார்பில் 2 நாள் விவாதம் நடக்கும். ஒருநாள் ஆளும்கட்சி பதில் தரும். இறுதியாக எதிர்கட்சித்தலைவர் தீர்மானத்தை முன்மொழிந்து அரசின் மீதான குற்றம் குறைகளை பட்டியலிட்டு பேசுவார். இதற்குப் பதில் தரும் வகையில் அவை முன்னவர் அல்லது முதல்வர் பதில் அளித்து உரையாற்றுவார்.
பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பில் பெரும்பாலும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது என்றுதான் அறிவிக்கப்படும். அரிதினும் அரிதாகவே நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறும். அப்போது அரசு கவிழும் என்பது இயல்பான நடைமுறை. இந்த நடைமுறை தவெக அரசுக்குப் பொருந்தாது. ஆட்சி கூட்டணிக் கட்சிகளால் தவெக அரசு நிச்சயமாக…….. உறுதியாக காப்பாற்றப்படும் என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.
— ஆதவன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.