அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘நூறு சாமி’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு : ’விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி. இயக்கம்: சசி, நடிகர்-நடிகைகள் : விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் தீஷன், சக்தி, காவ்யா அனில், லிஜோமோல் கருணாஸ், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, பாடினி குமார், அருள்தாஸ், முனீஷ்காந்த், பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், ஒளிப்பதிவு : எஸ்.பி.தர்ஷன், இசை : பாலாஜி ஸ்ரீராம், எடிட்டிங் : ஹரிஷ் யுவராஜ், ஆர்ட் டைரக்டர் : வி.சசிக்குமார், பாடல்கள்: மோகன்ராஜன், பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.

23 வயதிலேயே கணவனைப் பறிகொடுத்துவிட்டு தனது இரண்டு ஆண் பிள்ளைகளை வளர்த்து நன்றாகப் படிக்க வைக்கும் வைராக்கியத்துடன் கூலி வேலைக்குச் செல்கிறாள் செல்வி. தனியாக இருக்கும் செல்வி மீது ஊரில் இருக்கும் பெரிய மனுஷன் பாலாஜி சக்திவேல் உட்பட பல பொறுக்கிகளுக்கு சபலம் தட்டுகிறது. இதையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு, மகன்களின் வளர்ச்சியில் கண்ணாக இருக்கிறாள் செல்வி.  மகன்கள் இருவரும் இன்ஜியரிங் படித்து முடித்து நல்ல நிலைமைக்கு வரும் நேரத்தில், 43 வயதில்  மறுமணம் செய்து கொள்ள செல்வியின் மனதில் ஆசை  தோன்றுகிறது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Nooru sami review
இதைத் தெரிந்து கொண்ட அந்த ஊரின் வாத்தியார் அருள்தாஸ், செல்வியின்மூத்த மகன் பாஸ்கரிடம் [அஜய் தீஷன்] சொல்ல, அம்மா மீது மகனுக்கு வெறுப்பு. இதே வெறுப்பு இளையமகன் விவேக்கிற்கும் [ சக்தி] வருகிறது. இதனால் தனது மறுமண ஆசையை தூக்கி எறிகிறார் செல்வி. அம்மாவின் வாழ்க்கையைத் தீர்மானிக்க நாம் யார் என்ற முடிவுடன், மகன்கள் இருவரும் அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இதற்கு செல்வி சம்மதித்தாளா? மனசை உலுக்கும் க்ளைமாக்ஸில் விடை சொல்வது தான் சசியின் ‘நூறு சாமி’.

படம் முழுக்க நீக்கமற நிறைந்திருப்பது செல்வியாகவே வாழ்ந்த சுவாசிகா தான். அனைத்து வயது ஆண்கள்-பெண்களின் மனசையெல்லாம் தனது  நடிப்பால ஆக்கிரமித்துவிட்டார் சுவாசிகா. தன் மீது மகன்களுக்கு வெறுப்பு வந்ததும் கோபத்தையும் இயலாமையையும் அடக்கிக் கொண்டு ஒருவித ஏக்கத்துடன் இருப்பது, மறுமணத்திற்கு மகன்கள் சம்மதித்ததும் மனசுக்குள் பொங்கி வரும் ஆசையை அளவாகவும் பக்குவமாகவும் வெளிப்படுத்துவது, ஏழுமலையை [ விஜய் ஆண்டனி] சந்தித்த பிறகு மனப்பூரிப்பை முகத்தில் மகிழ்ச்சி ரேகையாக வெளிக்காட்டுவது, இரண்டு ஐஸ்களை ஒரே சமயத்தில் சாப்பிடும் சந்தோஷம்,  மறுநாள் தனக்கு கல்யாணம் என்ற நிலையில் முதல் நாள் இரவு, மகன்களுடன் சாப்பிடும் போது அவர்களின் எதிர்காலத்தை நினைத்து வெடித்து அழுவது என நடிப்பை  சுவாசித்திருக்கிறார் சுவாசிகா. இந்த நூறு சாமியில் சுவாசிகாவின் நடிப்புக்கு தேசிய விருது கொடுங்க சாமீகளா..

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

Nooru sami review
கடைசி  40 நிமிடங்கள் தான் வருகிறார் ஏழுமலை [ விஜய் ஆண்டனி]. இதற்கு முந்தைய படங்களைவிட, இந்த நூறு சாமியில் விஜய் ஆண்டனியின் முகத்திலும் தலைமுடியிலும் லைட்டாக விழுந்த ’ஒயிட் ஹேர்’ அதற்கேற்ற  உடல் மொழி, வசன உச்சரிப்பு, அளவான நடிப்பு என அசத்திவிட்டார் மனுஷன். அதிலும் “ஆகட்டும்பா” என இரண்டு இடங்களில் வெவ்வேறு முகபாவனைகளில் சொல்வதாகட்டும், அஜய் தீஷனிடம் “எத்தனை மணிக்குன்னு என்கிட்டயாவது சொல்லுப்பா” என அப்பாவியாக கேட்பதாகட்டும் விஜய் ஆண்டனிக்கு தாராளமாக, ஏராளமாக கைதட்டலாம்.

சுவாசிகாவின் மகன்களாக அஜய் தீஷன், சக்தி இருவருமே கனகச்சிதமாக நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி வீட்டில் தட்டு மாற்றும் நேரத்தில் ட்விஸ்ட் வைத்து, அதன் பின் விஜய் ஆண்டனியை “அப்பா” என அழைத்து உருகும் சீனில் அஜய் தீஷனும் அம்மாவை “செல்வி…செல்வி” என உரிமையுடன் அழைக்கும் சீனில் சக்தியும் சபாஷ் வாங்குகிறார்கள்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

அஜய்யின் காதலியாக காவ்யா அனில், இவரின் பெற்றோர்களாக யூடியூப் கண்டெண்ட் பைத்தியங்களாக பக்ஸ், வினோதினி வைத்தியநாதன், சக்தியின் காதலியாக பாடினி குமார், சுவாசிகாவின் அண்ணன் கணேசனாக கருணாஸ்[ குடும்ப  கெளரவ வெறிக்காக தங்கச்சியையே கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சிக்கும் சீனில் சுவாசிகாவின் குடும்பமே களத்தில் இறங்குவதைக் காட்டி குலைநடுங்க வைத்துவிட்டார் டைரக்டர் சசி] ஊர்ப்பெரிய மனுஷனாக சின்னத்தனமாக நடந்து கொள்ளும் பாலாஜி சக்திவேல், இன்ஸ்பெக்டராக வரும் முனீஷ்காந்த் என எல்லா கேரக்டர்களுமே கவனம் ஈர்க்கின்றன.

கள்ளக்குறிச்சி பகுதிகளின் கரும்புத்தோட்டம், வயல்வெளி, கரிசல் பூமி , கண்மாய்க்கரை, இதையெல்லாம் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார் கேமராமேன் எஸ்.பி.தர்ஷன். சுவாசிகாவின் வீடு செட், கிரிச் கிரிச்சென ஓடும் சீலிங் ஃபேன், சசியின் கற்பனைக்கு உருவம் கொடுத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் வி.சசிக்குமார். “அம்மா…அம்மா…” மற்றும் “மாயக்கனவோ” மோகன்ராஜனின் இந்த  இரண்டு இனிய பாடல்களை வரிகளுக்கு வலிக்காமல் இசையமைத்து அசத்திவிட்டார் மியூசிக் டைரக்டர் பாலாஜி ஸ்ரீராம். அந்த இரண்டு பாடல்களிலும் சில சீன்களின் பின்னணி இசையிலும் இசைஞானியின் சாயல் தெரிந்தாலும் அதில் ஒன்றும் தப்பில்லையே.

இடைவேளைக்கு முன்பு பத்து நிமிடக் காட்சிகள், குறிப்பாக அஜய்யும் சக்தியும் மல்லுப்பாயும் காட்சி உட்பட சில காட்சிகள் ரொம்பவே நீளமாகப் போய் லைட்டா சலிப்பு தட்டத்தான் செய்யுது. அதே போல் இரண்டு மணி நேரம் அசல் கிராமத்து மண்ணில் நம்மை பயணிக்க வைத்த  நிஜமான உணர்வைத் தந்து கொண்டே வந்த சசி, கடைசி கால் மணி நேரத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாணியில் ட்ரோன்களை இறக்கியிருப்பது தேவையா?

இருந்தாலும் இந்த ‘நூறு சாமி’யைத் தந்து கலாச்சாரக் காவலர்களுக்கு ’காலணி’ அடி கொடுத்த சசிக்கு கைகள் வலிக்க கைதட்டலாம்.

அங்குசம் பார்வையில் ‘நூறு சாமி’ 70/100

—     ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.