ஆக்டோபஸ் ஜீஸ்கொயரும் அருவெறுக்கதக்க பிளாக்மெயிலும்
ஆக்டோபஸ் ஜீஸ்கொயரும் அருவெறுக்கதக்க பிளாக்மெயிலும்
முதல்வர் மருமகன் செல்வாக்கில் ஜீ ஸ்கொயர் நிறுவனம் ஆக்டோபஸாக விஸ்வரூபம்! கட்டுமானத் துறையே கதிகலங்கி நிற்கிறது! அதைக் கொண்டு ஜீனியர் விகடன் பிளாக் மெயில் செய்ததான புகார்! எப்.ஐ.ஆர் பதிவாகிறது! பாரம்பரிய நிறுவனமும், பத்திரிகை சுதந்திரமும் பேசு பொருளாகிறது! சந்தடி சாக்கில் குற்றவாளிகள் தப்பிக்கலாமா?
ஜீ ஸ்கொயர் நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எடுத்த எடுப்பிலேயே அவசர கதியில் ஜீனியர் விகடன் உரிமையாளர் சீனிவாசன் மீதும், அவர் மனைவி மீதும் சம்பந்தமே இல்லாத யூடியுபர்கள் சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் மீதும் எப்.ஐ.ஆர் பதிவானது. இதன் விளைவாக பத்திரிகையாளர் அமைப்புகள் போராட்டம் செய்தன! இது கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டது. ஆகவே, நானும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஜீ ஸ்கொயர் – ஜூனியர் விகடன் விவகாரம் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பான விவாத பொருளாகிவிட்டது!
எப்போதுமே ஒரு விவகாரம் பெரும் விவாதமாகும் போது, களப்பலியாவது உண்மைகளே! கண்மூடித்தனமாக பதியப் பட்ட எப்.ஐ.ஆர்! யாரை வேண்டுமானாலும் ஆதார மில்லாமல் வழக்கில் சேர்க்கும் அவசரம்! இதற்கு பின்னணியில் இருந்து ஆட்டு வித்த அதிகார பலம் ஆகியவை காரணமாக பத்திரிகையாளர் அமைப்புகள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தின என்பதால், இந்த விவகாரத்தின் அடிநாதமான பிளாக்மெயில் ஜர்னலிசத்தை நியாயப்படுத்திவிட முடியாது.
அதிமுக ஆட்சியில் ஜெய லலிதாவும் , சசிகலாவும் சேர்ந்து கண்ணில்பட்ட கட்டிடங் களையும், நில புலன்களையும் வாங்கி குவித்த வரலாறுகளையெல்லாம் மிஞ்சும் வகையில், தற்போது சட்டபூர்வமான ஒரு தொழில் மூலம் அதிகாரம் தரும் சர்வ பலத்துடன் சாகஸமாக கட்டுமானத் தொழில் துறையில் பல கபளீகரங்கள் நடத்தப்படுகின்றன என சக கட்டுமான நிறுவனங்களே புலம்புகின்றன!
இது தொடர்பாக ஜீனியர் விகடன் வெளியிட்ட செய்திகள் பொய்யோ, புனைவோ என அலட்சியபடுத்த முடியவில்லை. அதன் சிறு பகுதியை கீழே தருகிறேன்.
ஜீ ஸ்கொயர் பாலாவால் பாதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் நம்மிடம், ‘‘தமிழகம் முழுவதும் பாலாவின் நிறுவனம் இடங்களை வாங்கிக் குவித்துவருகிறது. அதற்கான பத்திரப்பதிவின்போது, ‘முதல்வரின் மருமகன் சபரீசனின் நிறுவனத்துக்காக வாங்குகிறோம்’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள். பல இடங்களில் நிலத்தின் உரிமையாளருக்குப் பணத்தை முழுமையாகக் கொடுக்காமல், இடத்தின் மதிப்பில் ஐந்து சதவிகிதத்தை மட்டும் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கால அவகாசத்தில் மீதிப் பணத்தை இடத்தின் உரிமையாளர் கேட்டால், ‘உங்கள் இடத்தில் சட்டச் சிக்கல் உள்ளது’ என்று சொல்லியே கதறவிடுகிறார்கள்.
ரியல் எஸ்டேட் தொழிலில் அப்ரூவல் மிகவும் முக்கியம். குறிப்பாக, டி.டி.சி.பி அனு மதி பெற்றால் மட்டுமே கட்டடம் கட்டி விற்க முடியும். இந்த அப்ரூவல் விவகாரத்தில் பிற நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து, ஆதிக்கம் செலுத்துகிறது பாலாவின் நிறுவனம். இவரது நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அனைத்து அனுமதிகளையும் உடனடியாக வழங்கும் அதிகாரிகள், பிற நிறுவனங்களைப் பல மாதங்கள் அலைய விடுகிறார்கள். அனுமதிக் காகக் காத்திருக்கும் நிறுவனங்களிடம், ‘எங்களோடு இணைந்து பணிகளைச் செய்யுங்கள்’ என்று பேரம் பேசுவது பாலாவின் ஸ்டைல். பேரத்துக்குப் பணியாதவர்களுக்கு அப்ரூவல் மேலும் தாமதமாகும். இதற்கெல்லாம் பாலா, சபரீசன் பெயரைப் பயன்படுத்துவதுதான் சர்ச்சையாகியிருக்கிறது’’ என்றார்கள்.
இந்த கட்டுரையில் சபரீசனுக்கு சம்பந்தம் இருப்பது போன்றும், இல்லாதது போன்றுமான ஒரு தொனியையும் ஜீ.வி வெளிப்படுத்தி இருந்தது. ஜீ ஸ்கொயர் நிறுவனம் சபரீசன் சம்பந்தப்பட்ட நிறுவனம் என்பதை அறுதியிட்டு சொல்லாமல் இரண்டுங்கெட்டான் ஜர்னலிசத்தை செய்திருப்பார்கள்! ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்தவுடனே எடுத்த எடுப்பில் ஆயிரம் கோடி இலக்கை அடைந்தோம் என ஒரு நிறுவனம் சொல்ல முடிந்தது எப்படி?
- அரக்கோணத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா!
- ஈசிஆர் சாலை நீலாங்கரையில் அதி சொகுசான பீச்வாக் வீட்டுமனை திட்டம்!
- கோவையில் 120.7 ஏக்கர் நிலப்பரப்பில், உலக தரம் வாய்ந்த வசதிகளுடன், ‘ஸ்மார்ட் சிட்டி’ இது 120.7 ஏக்கரில் 1,663 வில்லா மனைகளையும், 26 வர்த்தக மேம்பாட்டு மனைகளையும் உள்ளடக்கியது! இதில் ஸ்மார்ட் சிட்டி. ஹெலிபேட், 50,000 சதுர அடியில் சொகுசு கிளப் ஹவுஸ் இடம்பெறுகின்றன. கல்விக்கூடம், மருத்துவமனை, வங்கி, மால், உள்ளிட்ட பல வசதிகள் !
- மேலும் கோவையில், ஜெம் மருத்துவமனை அருகே, ‘ஜி ஸ்கொயர் – புளூ கிரஸ்ட்’ என்ற பெயரிலும், சிங்காநல்லூரில், ‘ஜி ஸ்கொயர் – மான்செஸ்டர்’ என்ற பெயரிலும் அழகிய தனி வில்லாக்கள் !
- சூலூர் கண்ணம்பாளையம் ரோட்டில் ‘ஜிஸ்கொயர் -ஸ்பிரிங் பீல்ட்ஸ்’ குடியிருப்பு வில்லாக்கள்!
இவையெல்லாம் சில உதாரணங்கள்! பல ஆண்டுகளாக பழுத்த அனுபவமுள்ள நிறுவனங்களால் கூட சாதிக்க முடியாத வெற்றியை இந்த நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே சாத்தியப்படுத்தி வருவதற்கு ஆட்சியில் உள்ள குடும்பத்தின் அதிகார துஷ்பிரயோகம் தான் காரணம் என்பது பொய்யல்ல! ஆகவே, இவர்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், இதைக் கொண்டு பிளாக்மெயில் ஜர்னலிசம் நடந்திருக்கும் எனில், அதை ஒரு போதும் ஏற்க முடியாது.
இந்த பிளாக்மெயில் விவகாரத்தில் கைதாகியுள்ள கெவின் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக விகடனின் விளம்பரப் பண வசூலில் அதிகாரபூர்வமாகவே ஈடுபடுத் தப்பட்டார் என்பது அறிந்த உண்மையே! பல நிறுவனங்களும் இதை உறுதி படுத்துகிறார்கள்!காலப்போக்கில் இவர் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களுடன் மிக நெருக்கமாகி அவர்களுக்கான பண வசூலிலும் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது.
”பாசிடிவான செய்திக்கும் பணம், நெகட்டி வான செய்திக்கும் பணம், செய்தி வருவதற்கும் பணம், வராமல் தடுப்பதற்கும் பணம்.. ”என சமீப சில ஆண்டுகளாக ஜீனியர் விகடனில் சிலர் செயல்பட்டு வருவதாக அதில் இருந்து வெளிவந்த நேர்மையான பத்திரிகையாளர்கள் பலரும் வருத்ததுடன் குறிப்பிடுகின்றனர்!
ஜூனியர் விகடன் அவதூறு வழக்கில் முதற்கட்டப் பதிலில் “ஜூனியர் விகடன் நிறுவனத்தில் கெவின் என்ற பெயரில் யாரும் ஆசிரியர் குழுவில் இல்லை அல்லது பத்திரிகை நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன் தொடர்புடையவர்கள் யாரும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். இதுவே ஒரு நேர்மையற்ற அணுகுமுறையாகும். தங்களுடைய கூட்டாளி பிடிபட்டவுடன் அப்பட்டமாகவும், அவசரமாகவும் உதறும் போக்கே இது! காவல்துறை விசாரணையில் இந்த கெவினுக்கும், விகடன் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்புகளும், அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளதாக சொல்லி உள்ளனர். விகடன் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் பலரும் கெவினுக்கும், நிர்வாகத்திற்கும் , ஆசிரியர் குழுவிற்கும் உள்ள தொடர்புகளை விலாவாரியாக சொல்கிறார்கள்! அத்துடன் இவர் மூலமாக ஆசிரியர் குழுவில் உள்ளவர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்ததையும் காவல்துறை உறுதிபடுத்தியுள்ளதாம்! தொலைபேசி பதிவுகளும் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் விகடனின் மறுப்பானது பொய்யும், பித்தலாட்டமுமாகத் தான் பார்க்கப்படும்!
அரசாங்கம் தரப்பில் அவசரப்பட்டு பத்திரிகையின் உரிமையாளர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும், சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் பெயரிலும் போடப்பட்ட எப்.ஐ.ஆர் விலக்கி கொள்ளப்பட்டது! இது உண்மையிலேயே பெருந்தன்மையான மற்றும் நியாயமான நடவடிக்கையே! விகடன் நிறுவனத்தில் கல்கி தொடங்கி கணக்கற்ற ஜாம்பவான்கள் பணியாற்றி உள்ளனர். ஆனால், தற்போது தகுதியே இல்லாதவர்கள் ஆசிரியர் பொறுப்பிலும், குழுவிலும் இடம் பெற்று உள்ளதானது சில செய்தி கட்டுரைகளின் தொனியிலேயே தெளிவாக தெரிகிறது. விகடனின் தரம் வீழ்ந்து போனது பொதுத்தளத்தில் சமூக ஊடகங்களில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. கடந்த காலங்களில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வெளியேற்றப்பட்டுள்ளதை போல விகடன் நிறுவனம் தரப்பில் தவறு செய்தவர்களை குறைந்தபட்சம் ”வேலையை விட்டு நீக்கினோம்” என்ற அளவிலாவது முதல்கட்ட நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நல்ல நேர்மையான பத்திரிகையாளர்கள் பலரும் செயல்பட்டுள்ள விகடன் நிறுவனத்தில் மிகத் தவறானவர்கள் தொடர்ச்சியான புகார்களுக்கு பிறகும் பணியில் தொடர்வது அந்த நிர்வாகத்தின் மீதான சந்தேகத்தை தான்…
சாவித்திரி கண்ணன்