ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா : மடக்கிப் பிடித்த தனிப்படை போலீஸார்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து டாரஸ் லாரியில் அரிசி மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 285 கிலோ எடையுள்ள, ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை தஞ்சாவூரில் தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
தற்போது பிடிபட்டுள்ள இருவரில் ஒருவர் திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மேற்பார்வையில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் தஞ்சை சரகத்தில் கஞ்சா குட்கா, பான்மசாலா போன்ற தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பொருள்களை விற்பனை செய்து வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து TN76 AV 5563 என்ற பதிவெண் கொண்ட டாரஸ் லாரியில் கஞ்சா கடத்திவரப்படுவதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை போலீஸார் மேற்படி லாரியை தஞ்சாவூர் கோடியம்மன் கோவில் அருகே மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.
தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்த அந்த லாரியின் பின்புறம் ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு அரிசி மூட்டைகள் ஏற்றிச் செல்லும் போர்வையில், அவற்றினூடே மீன் தீவனம் தயாரிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த NG Feeds என்ற பிரபல தனியார் நிறுவனத்தின் உறைகள் கொண்ட 7 பெரிய மூட்டைகள் இருந்தன.
அம்மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது, அவற்றில் பெரியதும் சிறியதுமாக 140 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மொத்த எடை 280 கிலோ ஆகும். அதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
இதைத் தொடர்ந்து, அந்த லாரியில் இருந்த மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராமசாமியின் மகன் கார்த்தி (எ) ஹல்க் கார்த்தி (33), தென்காசி மாவட்டம் சிவலிங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முத்தையாவின் மகன் ரகுநாதன் (27) ஆகிய இருவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது போலீஸாரிடம் பிடிபட்டுள்ள ஹல்க் கார்த்தி மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். மேலும், ஹல்க் கார்த்தி மீது ஆந்திர மாநிலத்தில் கஞ்சா வழக்கு மற்றும் திருநெல்வேலியில் வழிப்பறி வழக்கு உள்ளது என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இக் கடத்தலில் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து உள்ளிட்ட மேலும் மூன்று நபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இக் கடத்தலில் மேலும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.