ஆட்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் குறைவு! பச்சைமலை அரசு மருத்துவமனையின் பரிதாப நிலை!
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த பச்சைமலை தென்புறநாடு ஊராட்சிக்குட்பட்ட டாப் செங்காட்டுப்பட்டியில் அமைந்துள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.இதில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர், மருந்தாளுநர், கிராமப்புற செவிலியர் சுகாதார ஆய்வாளர் பகுதி சுகாதார செவிலியர் ஆய்வக நுட்புணர் என 9 பேர் பணி செய்து வருகின்றனர்.
தினந்தோறும் இந்த சுகாதார நிலையத்திற்கு 60 வெளிப்புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்புறநாடு ஊராட்சி பகுதியில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி சித்தூர் பெரும் பரப்பு தண்ணீர் பள்ளம் உள்ளிட்ட 16 மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களும் அருகில் உள்ள சேலம் மாவட்டமான பெரிய பக்களம் ,சின்ன பக்களம் மாயம்பாடி ,கொடுங்கள் நெய்வாசல் ஓடைக்காட்டு புதூர் சின்னமங்களம் பலாமரத்தூர் ,சேந்தகம் உள்ளிட்ட 32 மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் குழந்தைப்பேறு உள்ளிட்டவற்றிற்காக தினந்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்வதுண்டு.

இந்த நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தற்போது உள்ள மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்களால் தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் செயல்படக் கூடியதாக அமைந்துள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்களை கூடுதலாக பணியமர்த்திட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் தங்கி பணிபுரிய உரிய குடியிருப்பு வளாகம் உடனடி தேவை எனவும், இதே போல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்து எடுத்துச் செல்லவும், ஓட்டுநர் செவிலியருக்கு உண்டான தனி அறை வசதியும் ஏற்படுத்திட வேண்டும்.
வெளிப்புற நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்திட கூடுதல் கட்டிடம் தேவை எனவும் தற்போது மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் சோலார் அல்லது ஜெனரேட்டர் வசதியும், மருத்துவமனை முன்பு உள்ள வளாகத்தில் மண் தரையாக உள்ளதை மாற்றி சிமெண்ட் தளம் அமைத்து தந்திட வேண்டும் என்ற கோரிக்கையும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மருத்துவமனை அருகிலேயே கர்ப்பிணிகள் தங்கி குழந்தை பேறு பெற்றுச் செல்வதற்காக ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் அருகில் உள்ள மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக இடிந்து விழுந்து விட்டதால் மழை நீர் உள்ளே புகுந்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.
2017-18 ஆண்டு பொது நிதியின் மூலம் சுமார் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விட்டது. மழைக்காலம் தவிர மற்ற நேரங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மருத்துவமனைக்குள் புகுந்து விடுவதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் மருத்துவமனை அமைந்துள்ள டாப் செங்காட்டுப்பட்டி பகுதி முதல்அனைத்து மலைவாழ் கிராம பகுதிகளிலும் செல்போன் சிக்னல் கிடைப்பதில் பெரிய அளவில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாகவும் அவசர கால சிகிச்சைகளான பாம்பு கடி நாய்க்கடி மற்றும் வனப்பகுதிகளில் உள்ள விஷ ஜந்துக்களால் ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளுக்கும் உடனடி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்களை தொடர்பு கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக செல்போன் டவர் அமைத்து மலைவாழ் பழங்குடியின மக்களின் நலன் காக்க உதவிட வேண்டும் என்ற கோரிக்கையும் மருத்துவமனையின் ஆட்கள் பற்றாக்குறை அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றிற்கு உடனடி தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என மலைவாழ் பழங்குடியின மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
— அங்குசம் செய்திப்பிரிவு.