கூட இருந்தவனை கொன்னுட்டாங்க …. அடுத்து நான்தான் ! வீடியோ காலில் கதறிய கைதி !
கூட இருந்தவனை கொன்னுட்டாங்க … அடுத்து நான்தான் ! வீடியோ காலில் கதறிய கைதி !
”என் கூட இருந்தவனை கொன்னுட்டாங்க. அடுத்து நான் தான். என்னை எப்ப கொல்லுவாங்க. என்ன செய்வாங்கனு தெரியல. எனக்கு என்ன நடந்தாலும் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன் ராம் தான் காரணம்.” என்று கோவை மத்திய சிறையில் இருந்தபடியே, ஆயுள் தண்டனை கைதி விக்ரம் வீடியோ காலில் பேசி பதிவான வீடியோ வெளியாகி பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த 29 வயதேயான விக்ரம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதே கோவை மத்திய சிறையில் கடந்த ஜன-27 ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம் சுந்தராபுரம் பால் பண்ணை வீதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் என்ற ஆயுள் தண்டனை கைதி மர்மமான முறையில் இறந்த நிலையில் வெளியாகியிருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2012 இல் திருப்பூரில் நடைபெற்ற கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜன-27 அன்று மதியம் 8-வது பிளாக் கழிவறையில் கழுத்து எலும்பு முறிந்த நிலையில் சடலமாக கிடந்தார். வழுக்கி விழுந்ததில் கழுத்து எலும்பு முறிந்து மூச்சுத்திணறி இறந்ததாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் தசை சிதைந்ததற்கான தடயம் கண்டறியப்பட்டது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
சிறைக்குள் நிகழ்ந்த மர்ம மரணம் தொடர்பாக, கோவை – ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். கோவை குற்றவியல் நீதிமன்ற – 3 நடுவர் மாஜிஸ்திரேட் கிருத்திகாவும் சிறைக்குள் விசாரணையை நடத்தியிருந்தார். விசாரணையின் முடிவில், சிறைக்குள் கைதிகளுக்குள் நிகழ்ந்த மோதலில்தான் ஏசுதாஸ் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இந்த கொலை விவகாரம் தொடர்பாக சிறைக்கைதிகள் 10 பேரிடம் விசாரணை தொடர்ந்து வந்த நிலையில்தான், விக்ரமின் கதறல் வீடியோ வெளியாகியிருக்கிறது.

சிறைக்கைதி ஏசுதாஸ் கொலை செய்யப்பட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் பணியாற்றிய துணை ஜெயிலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அலுவலர் விஜயராஜ், சிறை தலைமைக் காவலர் பாபுராஜ், சிறைக்காவலர் தினேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சக கைதிகளால் ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் கொல்லப்பட்ட விவகாரமும்; அதனை தொடர்ந்து தற்போது வீடியோ காலில் விக்ரம் பேசியிருக்கும் விவகாரமும்; அதிலும் குறிப்பாக, சிறைக்குள் இருந்தபடியே ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் வீடியோ காலில் பேசுவதற்கு செல்போன் எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் கோவை மத்திய சிறைச்சாலையில் கைதிகளின் பாதுகாப்பு குறித்த என்ற அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.