2 நாள் விசாரணைக்கு பின் திடீர் திருப்பமாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிஎச்.டி மாணவர்!
பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறாக மெயில் அனுப்பியதாக தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிஎச்.டி மாணவர் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, அவர் 10 வயது சிறுமியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவரது பெற்றோர் ஜெயபால்-மணி.
எம்.காம் பட்டதாரியான இவர் தற்போது தஞ்சை அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சுற்றுச்சூழல் குறித்து பிஎச்.டி ஆய்வு மாணவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த டிஎஸ்பி சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 அதிகாரிகள் மார்ச் 15-ம் தேதி காலை 6 மணிக்கு பூண்டி தோப்பு பகுதிக்கு சென்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் அவரை தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தில் வைத்து கடந்த இரண்டு நாட்களாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, விக்டர் ஜேம்ஸ் ராஜா பிரதமர் அலுவலத்துக்கு அவதூறாக மெயில் அனுப்பியதாகவும், அது தொடர்பாக அவரை சிபிஐ அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருவதாகவும் ஒரு ஊர்ஜிதமாகாத தகவல் பரவியது. இத் தகவலை விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் பெற்றோரும் கூறினர்.
இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யததாகவும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களைப் பகிர்ந்து வந்ததாகவும் விக்டர் ஜேம்ஸ் ராஜா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தஞ்iயில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் அவரை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தபடுத்தினர்.
அவரை 2 நாட்கள் தஞ்சை கிளைச் சிறையில் அடைக்குமாறும், வரும் 20-ம் தேதி (திங்கள்கிழமை) அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது கைதாகியுள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுக்கு சிறார்களின் ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதாக உள்ளுர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை ‘இண்டர்போல்’ அறிவுறுத்தியது. அதன்பேரில், மத்திய அரசு இவ்விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது. இதில் இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் விக்டர் ஜேம்ஸ் ராஜா போன்றவர்கள் ஒரு குழுவாக இணைந்து சிறார் ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி.
இச்சம்பவம் தொடர்பாக, விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு அவரை கைது செய்துள்ளனர்.