மாற்று அரசியலா ? ஏமாற்று அரசியலா ?
தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன. திராவிட அரசியலுக்கு மாற்று அரசியல் தேவை என்ற கூப்பாடுகளையெல்லாம் காலம் காலமாக கேட்டு காதே புளித்துவிட்டது. ஆனாலும், சந்தைக்கு ஏற்ற புது சரக்காக அரசியல் பற்றிய அடிச்சுவடியைக்கூட படித்திராத அல்லது அதுபற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத ஜென்சி தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து களமிறங்கியவர்தான் ஆதவ் அர்ஜூனா. வி.சி.க. வழியே அரசியலில் காலெடுத்து வைத்தவர், வந்த வேகத்திலேயே சொந்தக் கட்சிக்கு சூன்யம் வைத்துவிட்டு த.வெ.க.வில் தஞ்சம் புகுந்தார்.
நடிகர் விஜயை வைத்து, விசிலடித்தான் குஞ்சுகளை உசுப்பேத்தியதன் விளைவு கரூர் கொடுந்துயரை தமிழகம் எதிர்கொண்டது. ஆனாலும், இன்னமும் சளைக்காமல், மாற்று அரசியல் என மேடையில் பேசும் வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை.
ஆனால், இதுவரை ஆதவ் அர்ஜூனா பேசி வந்த மாற்று அரசியல் இதுதானா? என்றே கேள்வி எழுப்பும் விதமாக அமைந்துவிட்டது அவர் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரம். அவர் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் ரூ.180 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை வைத்திருப்பதாக குறிப்பிட்டிருப்பதை காட்டிலும்; அருணாச்சல பிரதேசம், கோவா, நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம் ஐந்து மாநிலங்களில் லாட்டரி விநியோகிக்கும் உரிமம் பெற்றிருப்பதாக தெரிவித்திருப்பதுதான் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இந்தியாவின் லாட்டரி கிங் என்றழைக்கப்படும் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தின் மருமகன்தான் ஆதவ் அர்ஜூனா என்று ஏற்கெனவே தமிழகம் அறிந்திருந்தாலும், ”அது மாமனார் தொழில் என்னோடது அது இல்லையாக்கும்” என்று பேச்சுக்குக்கூட சொல்ல முடியாத அளவுக்கு அப்பட்டமாகியிருக்கிறது.
அதுமட்டுமா, தமிழகத்திலேயே பணக்கார வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் யார் தெரியுமா? ஆதவ் அர்ஜூனாவின் மாமியாரும் லாட்டரி மார்டினின் மனைவியும் திருச்சி இலால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான லீமா ரோஸ் மார்ட்டின்தான்.
அவரிடம் ரூ.139 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.909 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும், கணவர் மார்ட்டின் பெயரில் ரூ.3,262 கோடி அசையும் சொத்துக்களும், ரூ. 887 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாம். அதுமட்டுமா, மகன் ஜோஷ் டைசன் பெயரில் ரூ.225 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.439 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். கூட்டிக்கழித்துப் பார்த்தால், மொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பு எப்படியும் 6000 கோடியை தாண்டுகிறது.

தமிழகத்தில் பணக்கார வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் தலைமை த.வெ.க. தலைவர் விஜய்தான். சுமார் 624 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.
நடிகர் விஜய்க்கு எதிராக வரிஏய்ப்பு குற்றச்சாட்டுகளும், அதற்கு எதிரான அபராதங்களும், நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கோடிக்கணக்கான வருமானத்தை மறைத்து விட்டதாக குற்றச்சாட்டுகளுடன் மார்ட்டின் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இத்தகைய உத்தமர்களை கொண்ட குடும்பத்தின் மருமகனாக இருந்துகொண்டுதான், உத்தமரை தலைவராக கொண்டிருக்கும் த.வெ.க. என்ற கட்சியின் வழியாகத்தான், தமிழகத்துக்கான மாற்று அரசியலை, ஊழல் – இலஞ்சம் இல்லாத தூய அரசியலை பெற்றுத் தரப்போகிறாராம் ஆதவ் அர்ஜூனா. எப்படி இருக்கிறது, கதை?
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.