பாண்டிச்சேரி டூ கும்பகோணம் 74 சிலைகள் அபேஸ் ஆன மர்ம சம்பவம்…
பாண்டிச்சேரி டூ கும்பகோணம் 74 சிலைகள் அபேஸ் ஆன மர்ம சம்பவம்…
புதுச்சேரி தனி நபரிடமிருந்து 74 தொன்மையான சிலைகளைத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நகர்ப் பகுதியில் உள்ள ரோமன் ரொலான் வீதியில், தனி நபருக்குச் சொந்தமான வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புதுச்சேரியில் உள்ள வீட்டில் இன்று (செப்டம்பர் 24) சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன், உலோகம் மற்றும் கற் சிலைகள் உட்பட 74 சிலைகளைத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜீன் பால் ராஜரத்தினம் என்பவர், கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரியில் பழமையான 11 சிலைகள் பதுக்கிய வழக்கில் தொடர்புடைய மேரி தெரேசா என்ற பெண்ணின் சகோதரர் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுக்கு தொல்லியல் துறை சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தமிழக சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பேசியபோது…
“தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தகவல் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜீன்பால் ராஜரத்தினம் என்பவரது முகவரியில் தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் இருக்கும் தொன்மையான சிலைகளை இங்கே மறைத்து வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலின் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ள இவரது வீட்டில் ஆய்வு செய்வதற்காகக் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றோம். பிறகு கட்டட உரிமையாளர் மற்றும் இந்து அறநிலையத்துறை முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) சோதனை செய்யப்பட்டது,” என்கிறார் அவர்.
“அதன் அடிப்படையில், 74 சுவாமி சிலைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஐம்பொன் மற்றும் உலோகத்திலான 60 சிலைகளும், 14 கற்களாலான சிலைகளும் கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாக ஆவணங்களும் பறிமுதல் செய்திருக்கிறோம். இதுகுறித்து தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம். புலன் விசாரணையில் கிடைக்கக் கூடிய தகவலின் அடிப்படையில் விசாரணையைக் கொண்டு செல்வோம்,” என்று கூறுகிறார்.
“குறிப்பாக, இன்று பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்து எந்தெந்த கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்டது என்ற விசாரணை செய்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கோயில்களில் சிலைகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்து கோயில் வழிபாட்டிற்கு வைக்கப்படும் உற்சவ சிலைகள் என்பதால், இவை அனைத்தும் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகள் இல்லை. ஆகவே, இவை அனைத்து கடத்தப்பட்ட சிலைகளாக இருக்கலாம்,” எனத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கூறினார்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தையும் நாளை 25 9 2020 அன்று காலை 10 மணி அளவில் கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க படுவதாகவும் அதற்கு முன் கும்பகோணம் சிலை கடத்தல் பிரிவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றார்.
-ஜித்தன்