அதிகார மையங்களாக மாறிய பி.ஆர்.ஓ.க்கள் !
80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, துறையூரை அடுத்த பச்சமலையில் மாவட்ட ஆட்சியர் பிரதிக்தாயள் பங்கேற்ற கிராமசபைக் கூட்டம் குறித்து துறையூர் தாலுகா செய்தியாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன்னர், இதே துறையூரில் தானியங்கள் சேமிப்புக் கிடங்கு திறப்பு விழாவில் அமைச்சர் வெங்கடரமணன் பங்கேற்ற நிகழ்ச்சி குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குநர் நல்லத்தம்பியிடம் பேசியபோது, “சமீபத்தில்தான் பணியிட மாறுதலில் இங்கு வந்தேன். வாட்சப் குரூப்பில் இன்னும் பல செய்தியாளர்கள் சேர்க்கப்படாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் கிராமசபை கூட்டம் குறித்த செய்தியை மாவட்ட குரூப்பில் பகிர்ந்தேன். நள்ளிரவு ஆனாலும், செய்தியை பகிர்ந்துவிட்டுதான் தூங்க செல்கிறேன்.” என்கிறார், அவர்.
”மாவட்ட செய்தியாளர் சொந்தக் காசை செலவு செய்து பச்சைமலை சென்று செய்தி சேகரிக்க முடியுமா? 5 வருஷத்துக்கு முன்னெல்லாம், இதுபோல சிறப்பு நிகழ்வுகளுக்கு வாகன ஏற்பாட்டுடன் மாவட்ட நிருபர்களை அழைத்து செல்வார்கள். அதற்கென்று தனி நிதி ஒதுக்கீடே இருக்கிறது. தற்போது, அந்த நடைமுறையை ஏனோ கைகழுவி விட்டார்கள். அடுத்து, இப்போதெல்லாம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளில், யார் என்ன பேசினார்கள் என்ற விவரங்கள் கூட இருப்பதில்லை. வெறும் புள்ளி விவரங்களும் பங்கேற்ற நபர்களின் பெயர்களும் மட்டும்தான் இடம்பெறுகின்றன.
இதே திருச்சி மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்ற விழாவில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. எல்.இ.டி. திரையை காட்டி செய்தி சேகரிக்க சொன்னார்கள். அரசியல்வாதிகள்தான் அப்படி அணுகுகிறார்கள் என்றால், அதிகாரிகளுமா?” என்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR), என்பது அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாகச் செயல்படும் துறை என்பதை அறவே மறந்துவிட்டார்கள். விளம்பர வருவாயில் செலுத்தும் அக்கறை உயிரோட்டமான செய்திகளுக்கு வழங்குவதில்லை. செய்திக்காக எந்த நேரத்திலும், எந்த தருணத்திலும் எளிதில் அணுகக்கூடியவராகவும்; செய்தியாளர்களுடன் நல்ல நட்புறவை பேணுபவராகவும் இருக்க வேண்டிய பி.ஆர்.ஓ.க்கள் புதிய அதிகார மையங்களாக அவதரித்து வரும் போக்கு நிச்சயம் கவலைக்குரிய ஒன்று என்றே சுட்டிக்காட்டுகிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.