எஸ்கேவைப் பத்திய சீக்ரெட்டைச் சொன்ன ராதிகா!
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தமிழ்நாடெங்கும் ரிலீசாகி, மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி, 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது ‘தாய்கிழவி’. இதனால் மிகவும் மகிழ்ச்சியான தயாரிப்பாளர்கள் ‘பேஸன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம், “எஸ்கே புரொடக்ஷன்ஸ்’ சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து ‘தாய்கிழவி’யின் வெற்றிக் கொண்டாட்டத்தை சென்னையில் மார்ச்.11-ஆம் தேதி மதியம் நடத்தினார்கள்.
விழாவில் தாய்கிழவியின் நாயகி ராதிகா, இணைத் தயாரிப்பாளர் கலையரசு, டைரக்டர் சிவக்குமார் முருகேசன், நடிகர்கள் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், இவரின் மகன் ராஜீவ்காந்தியாக நடித்த சிறுவன், படத்தில் பவுனுத்தாயி மருமகள்களாக நடித்த நடிகைகள், சீஃப் டாக்டராக நடித்தவர், கேமராமேன் விவேக் விஜயகுமார், எடிட்டர் ஷான்லோகேஷ், மியூசிக் டைரக்டர் நிவாஸ் கே.பிரசன்னா, ஆர்ட் டைரக்டர் ராமு தங்கராஜ், பாடலாசிரியர்கள் ஜெகன் கவிராஜ், கருமாத்தூர் மணிமாறன், என படத்தில் பங்கு பெற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

பேசிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவருமே வழக்கம் போல் இந்தமாபெரும் வெற்றிப்படத்தில் நடித்ததையும் பணியாற்றியதையும் பெருமை பொங்க பேசினர்.
இணைத் தயாரிப்பாளர் கலையரசு பேசும் போது, “250 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணத்தான் திட்டமிட்டோம். ஆனால் படத்தின் புரமோஷனுக்குப் பிறகு தியேட்டர்காரர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால் 340 தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணினோம். ரிலீசான மறுநாள் கிடைத்த வரவேற்பு, மக்கள் கொடுத்த ஆதரவால் 480 தியேட்டர்களானது. 50 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கும் மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி” என்றார்.
டைரக்டர் சிவக்குமார் முருகேசன்,
“பொதுவாக ஒரு சினிமா எடுக்கும் போது புரொடக்சன் டீமுக்கும் டைரக்ஷன் டீமுக்கும் கோல்டுவார் என்பது நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த தாய்கிழவியில் அதுபோன்ற பிரச்சனை எதுவும் எங்களுக்கு இல்லை. அதற்குக் காரணம் சுதன் சுந்தரம் சாரும் அண்ணன் சிவகார்த்திகேயனும் தான். இன்னும் சொல்லப் போனால் எங்களைவிட கடுமையாக உழைத்தவர் சிவகார்த்திகேயன் தான்” என்றார்.
‘கலையரசி’ ராதிகா,
“பெரிய ஹீரோக்களின் படம் ரிலீசாகும் போது 1,500, 2,000 ரூபாய்க்கு டிக்கெட் வித்து 300 கோடி, 400 கோடி கலெக்ஷன் பண்றது பெரிய விசயமல்ல. 150 ரூபாய்க்கு டிக்கெட் வித்து 50 கோடி கலெக்ஷன் பண்ணிருக்கும் தாய்கிழவி தான் உண்மையான வெற்றி. கதை தான் இங்கு கிங். படத்துக்குப் பேசிய சம்பளத்தை முன்னதாகவே கொடுத்துட்டார் தம்பி சிவகார்த்திகேயன். படம் ஹிட்டான பிறகு லாபத்திலும் பங்கு கொடுத்து பல தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதராணமாகவிட்டார் சிவகார்த்திகேயேன். எப்போதுமே தன்னை அப்டேட்டாக வைத்துக் கொள்வதில் சிவகார்த்திகேயன் கில்லாடி. அதுதான் எஸ்கேவின் சக்சஸ் சீக்ரெட்.
பெண்களின் ஆதரவு இப்படத்திற்கு அமோகமாக இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி அவர்களும் ஆவண செய்ய வேண்டும்” என்றார்.
“எனது அப்பா திடீரென இறந்த பிறகு எனது அம்மாதான் என்னைப் படிக்க வைத்தார், எனது அக்கா என்னை வளர்த்தார், இப்போது எனது மனைவி ஆர்த்தி தான் கணக்கு வழக்கு முழுவதையும் பார்த்துக் கொள்கிறார். அதனால் தான் தயாரிப்பாளராக என்னால் இயங்க முடிகிறது. இப்படி எனது வாழ்க்கையில் ஏகப்பட்ட பவுனுத்தாய்கள் இருக்கிறார்கள்.
ஆரம்பித்திலிருந்தே நான் ஒரு சினிமா ரசிகன். அதன் பிறகு தான் நடிகன். அந்த ரசிகன் தான் படங்களைத் தயாரிக்க உற்சாகம் தருகிறான். இந்தப் படத்தை எனது குழந்தை போல பார்த்துக் கொண்டேன். பவுனுத்தாயி கேரக்டருக்கு ராதிகா மேடம் உயிர் கொடுத்திருக்கிறார். படத்தின் பிரிமீயர் ஷோ முடிஞ்சதும் டைரக்டர் சிவக்குமார் முருகேசனின் அப்பா என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார். அப்போது எனது அப்பாவை உணர்ந்தேன்.
தொடர்ந்து நல்ல சினிமாக்களைத் தயாரிப்பேன். எஸ்கே புரொடக்சன்ஸின் பத்தாவது தயாரிப்பை அம்மாமுத்து சூர்யா என்ற புதுமுகம் தான் டைரக்ட் பண்ணுகிறார். எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் எனது ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
— ஆண்டவர்









Comments are closed, but trackbacks and pingbacks are open.