அங்குசம் பார்வையில் ‘ராஜா கிளி’ திரைப்படம்
தயாரிப்பு : ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்; சுரேஷ் காமாட்சி. கதை-வசனம்-பாடல்கள், இசை : தம்பி ராமையா. டைரக்ஷன் : உமாபதி ராமையா. நடிகர்-நடிகைகள் : தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, தீபா சங்கர், பழ.கருப்பையா, பாடகர் கிரிஷ் [ நடிகை சங்கீதாவின் கணவர் ] முபாஸிர், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன், ஐஸ்வர்யா [ சீனியர் நடிகை லட்சுமியின் மகள் ] ரேஷ்மா பசுபுலேட்டி, சாட்டை துரைமுருகன், வெற்றிக்குமரன், அருள்தாஸ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஒளிப்பதிவு : கேதார் நாத், கோபிநாத், பின்னணி இசை : சாய் தினேஷ், எடிட்டிங் : ஆர்.சுதர்சன். பி.ஆர்.ஓ. ஏ.ஜான்.
காரைக்குடியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த முருகப்பா சென்றாயன் [ தம்பி ராமையா ] சென்னைக்கு வந்து, தனது கடின உழைப்பால் பல தொழில்களுக்கு அதிபராகி, பெரும் கோடீஸ்வராகிறார். இவரது மனைவி தெய்வானை [ தீபா சங்கர்], இவர்களுக்கு ஒரு மகன். தீவிர முருகபக்தரான முருகப்பாவின் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கஷ்ட நிலையில் இருக்கும் வள்ளிமலர் [ சுபா] முருகப்பா மீது மையல் கொள்கிறார். வள்ளியின் கணவனே, முருகப்பாவிற்கு வள்ளியை ‘செட்’ பண்ணிவிடுகிறார்.
”முருகனுக்கும் ரெண்டு, உனக்கும் ரெண்டு” என தனது ஆசானும் சுவாமிகளுமான அதி தீவிர முருகபக்தர் பழ.கருப்பையாவின் அருள்வாக்கால் வள்ளிமலரை இரண்டாவது திருமணமும் செய்து கொள்கிறார். அவருக்கு தனிபங்களா, கார் என ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்து சீறினாலும், சொந்தங்களின் ஆலோசனைப்படி, முருகப்பாவின் சொத்துக்காக தெய்வானையும் அவரது மகனும் சகித்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் காலை ‘வாக்கிங்’ போகும் போது, காலை சாணியில் வைத்து, அதனால் விசாகா [ ஷ்வேதா ஷிரிம்டன் ]வின் அம்மா ரேஷ்மா பசுபுலேட்டியின் ’கும்’ கவர்ச்சியில் கவிழ்ந்து, அதன் பின் விசாகாவின் விருப்ப வலையிலும் சிக்குகிறார் முருகப்பா. அவர்களுக்கும் பங்களா, கார் என அள்ளி இரைக்கிறார். ஒரு கட்டத்தில் விசாகாவுக்கு டான்ஸ் மாஸ்டர் கிரிஷ் மீது க்ரஷ்ஷாகி கல்யாணமும் பண்ணிக் கொள்கிறார். இதனால் காண்டான முருகப்பா, தனது அடியாட்களைக் கூப்பிட்டுச் சொல்ல, கிரிஷ்ஷை தூக்கிட்டுப் போய் கொடைக்கானல் மலையில், போட்டுத்தள்ளி உருட்டிவிடுகிறார்கள்.
அந்த கொலை வழக்கில் முருகப்பாவும் அவரது அடியாட்களும் ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போகிறார்கள். கடையில் முருகப்பாவின் கதியென்ன என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ராஜாகிளி’.
கிட்டத்தட்ட சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபாலின் கடைசிக்கால வாழ்க்கை தான் இந்த ‘ராஜாகிளி’. அவரின் வாழ்க்கையில் வந்த, அவர் வழுக்கி விழுந்த பெண்களின் நிஜப் பெயர்களையொட்டியே இப்படத்தின் பெண் கேரக்டர்களுக்கும் பெயர் வைத்துள்ளார் தம்பி ராமையா. அதே போல் கிருபானந்த வாரியார் போல பழ.கருப்பையா. அப்போதைய ‘பவர்ஃபுல் மேலிடம்’ சசிகலாவாக ஐஸ்வர்யா, சென்னை கமிஷனர் முத்துக்கருப்பனாக அருள்தாஸ், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாராக கிரிஷ், நிஜத்தில் அண்ணாச்சி. இதில் அப்புச்சி முருகப்பா என எல்லா கேரக்டர்களையும் நிஜத்தின் அருகே கொண்டு போய், ராஜகோபால் அண்ணாச்சி வழக்கில் சிக்கி சீரழிந்த பின் நடந்தவற்றை மட்டும் வேறு ரூட்டில் கொண்டு போய் க்ளைமாக்ஸை கண்ணீர்மல்க முடித்துள்ளார் தம்பி ராமையா.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இடைவேளை வரை ‘லேடீஸ் கேம்’மிலும் அதன் பின் நடிப்பிலும் செமத்தியாக ஸ்கோர் பண்ணிவிட்டார் தம்பி ராமையா. என்ன ஒண்ணு ‘லேடீஸ் கேம்’-ல் பாதம்பருப்பு, பிஸ்தா, முந்திரியெல்லாம் சாப்பிட்டு தம்பி ராமையாவை விசாகா டெம்பர் ஏற்றுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். விசாகாவின் அம்மாவாக வரும் ரேஷ்மா பசுபுலேட்டி சும்மா குளுகுளுன்னு கும்முன்னு இருக்கார். இவரின் ‘மிக்ஸர்’ சாப்பிடும் கணவராக ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி ரொம்ப பொருத்தம்.
கணவனின் பெண் சபலத்தால் ஆவேசமாகும் காட்சிகளிலும் க்ளைமாக்ஸில் அவனைக் கட்டியழும் காட்சிகளிலும் ஸ்கோர் பண்ணிவிட்டார் தீபா சங்கர்.
சமுத்திரக்கனி தான் கதையின் முக்கிய கதாபாத்திரம். ஆதரவற்றோர் இல்லம் நடத்தும் அவர் தான் முருகப்பாவை வீதியில் இருந்து இல்லத்திற்கு கூட்டி வந்து, முருகப்பாவின் டைரியைப் படித்து உண்மையத் தெரிந்து, க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்கு பெரிதும் சப்போர்ட்டாக இருப்பது சமுத்திரக்கனி தான்.
‘சின்னமுள்ளு ஜிங்ஜிங் பெரிய முள்ளு ஜங்ஜங்”, “ஆண்டவனே… நீ ஆள்பவன் இல்லையா” பாடல்களில் தம்பி ராமையாவின் அக்கறை தெரிகிறது. சாய் தினேஷின் பின்னணி இசையும் சப்போர்ட்டாக இருக்கிறது.
’கண்ணே அவன்’ என கணவனை நினைக்கும் மாதர்குல மாணிக்கங்களுக்கு இப்படம் சமர்ப்பணம்’ என்பதுடன் படத்தை முடித்திருக்கிறார் தம்பி ராமையா.
— மதுரை மாறன்.