தலைமையாசிரியர்கள் தலையில் ‘சுமையை’ ஏற்றிய கல்வித்துறை அதிகாரிகள் !
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 101 பள்ளிகள் உள்ளன. இதில் பச்சை மலையில் 18 பள்ளிகளில் ஒரு பள்ளி மற்றும் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மூடப்பட்டுள்ளது.
தற்சமயம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் மொத்தம் 100 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கோடை விடுமுறை முடிந்து தற்போது ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு புத்தகம் மற்றும் இலவச சீருடைகள் விநியோகிக்க உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவின்படி பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவிகளின் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப புத்தகங்கள், சீருடைகள், விலையுள்ள பைகள், விலையில்லா காலணிகள், வண்ண பென்சில்கள் என அனைத்து அரசின் விலையில்லா பொருள்களையும் பள்ளிகளில் நேரடியாக சென்று வழங்க வேண்டும் என்பதே அரசின் உத்தரவு .
ஆனால் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இயங்கி வரும் 100 பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கு தேவையான இலவச பாடநூல் சீருடை உள்பட நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் நேரடியாக வந்து பெற்று செல்லுமாறு இலவச சீருடைகள் மற்றும் இலவச பாடநூல் வழங்கும் வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பினார்.
அதன்படியே துறையூர் நகராட்சி பள்ளியில் இலவச பாட புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகளை பெறுவதற்காக அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான குறிப்பேடுகளை தனித்தனியாக பிரித்து பச்சைமலைப் பள்ளிகள் தனியாகவும் , அரசுஉதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு தனியாகவும் இரண்டு அல்லது மூன்று தலைமை ஆசிரியர்களை மட்டுமே தனித்தனியாக வரவழைத்து எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாக்கு பைகளோடு துறையூர் நகராட்சி பள்ளிக்கு சென்றார்கள் அங்கு தற்போது கட்டிடப்பணிகள் நடைபெற்று வருவதால் பெண் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டையை தாண்டி தாண்டி சென்றும் தலையில் புத்தகப் பைகளை தூக்கிச் சென்றும் அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு சென்றார்கள்.
இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இது பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று புத்தகங்கள் வழங்கினால் இது போன்ற சிரமங்கள் ஏற்படாது எனவும் அனைத்து புத்தகங்களும் நேரடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு முறையாக சென்றடையும் எனவும் கருத்து தெரிவித்தார்கள்.
— ஜோஷ்.
மாணவர்களை வேலை செய்ய சொன்னால் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பும் கல்வித்துறை இப்போ ஆசிரியர்களை கூலி வேலை செய்ய சொல்லும் அதிகாரிகளை யார் வீட்டுக்கு அனுப்புவது
அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று புத்தகங்களை வழங்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு ஆனால் அதிகாரிகள் அந்த செயலை செய்யாமல் ஆசிரியர்களுக்கு வேலை வைக்கிறார்கள் அரசை இதை தட்டி கேட்காது ஏனென்று தெரியவில்லை