மேகதாது அணையை கட்ட விடக்கூடாது – டெல்லியில் போராட்டம் கலெக்டரிடம் கோரிக்கை !
மேகதாது அணையை கட்ட விடக்கூடாது – டெல்லியில் போராட்டம் கலெக்டரிடம் கோரிக்கை !
விவசாய விளை பொருட்களுக்கு இரட்டிப்பு இலாபம் ; பிரதமந்திரி விவாசியகள் ஓய்வூதிய திட்டத்தில் குளறுபடிகள்; கோதாவரி காவிரி இணைப்புத்திட்டம் உள்ளிட்டு மோடி அரசு விவசாயிகளுக்கு வாக்களித்த திட்டங்களை நிறைவேற்றித்தரும் வரையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரம் விவசாயிகளுடன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார், தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு.
பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். விவசாயிகள் அனைவரும் மேல்சட்டையின்றி, கூட்ட அரங்கிற்கு நுழைய முயன்றபோது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். “காந்தியே வெறும் கோவணத்தோடுதான் சுற்றித்திரிந்தார். காந்தியே வந்தாலும் உள்ளே விடமாட்டீர்களா?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட, பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
“2014-இல் பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தீர்களே என்ன ஆச்சு? கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிய 10 இலட்சம் கோடிகளை தள்ளுபடி செய்தீர்கள். ஆனால், 95 கோடி விவசாயிகள் வாங்கிய 1 இலட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறீர்களே இது நியாயமா? குத்தகை விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் ஓய்வூதியம் இல்லை என்கிறீர்களே?” என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
“கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு அணை கட்டிவிட்டால், 90,000 ஏக்கர் கூட தமிழக விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். 2019 இல் அமித்ஷா எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கோதாவரி ஆற்றிலிருந்து வருடந்தோறும் கடலில் வீணாக கலக்கும் 1330 டி.எம்.சி. தண்ணீரிலிருந்து 250 டி.எம்.சி. தண்ணீரை காவிரி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றித் தரவேண்டும்.” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
மேலும், விவசாயிகளின் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், 10.07.23 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரம் விவசாயிகளுடன் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார். டெல்லியில் நடத்தவிருக்கும் காத்திருப்பு போராட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.