அவதூறுகளுக்கான சிறந்த பதில் இதுதான் !
சமூக ஊடகங்களில் அவதூறாகப் பேசுபவர்கள், பொய்யான மற்றும் அருவருக்கத்தக்க பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் மீது நாம் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சிலர் என்னிடம் தொடர்ந்து கேட்கிறார்கள்.
பொதுமக்களுக்கு இருக்கும் அளவிலான கருத்துச் சுதந்திரம் அரசுப் பணியில் இருப்பவர்களுக்குக் கிடையாது. நம்மீது வீசப்படும் ஒவ்வொரு அவதூறுக்கும் பதிலளிக்கவோ, ஒவ்வொரு பொய்யையும் எதிர்த்து வாதிடவோ நமது பதவியும் பொறுப்பும் எப்போதும் இடமளிப்பதில்லை.
இத்தகைய நாகரிகமற்றவர்களை அவதூறு வழக்குகள் மூலம் எதிர்கொள்வதற்கு அதிக செலவும் நேரமும் தேவைப்படுவதோடு, பெரும்பாலும் அது பயனற்ற முயற்சியாகவும் முடிந்துவிடுகிறது.
நமது மனசாட்சிக்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டு நாம் செயல்படும் வரை, யாருடைய தூண்டுதலுக்காகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட பழிவாங்குதலுக்காக செயல்படும் இத்தகைய கூலிப்படையினரை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், கடந்து செல்வது தான் மதி. “பன்றியோடு சேற்றில் இறங்கிச் சண்டையிட்டால், நாம்தான் அழுக்காவோம்; பன்றியோ அதை ரசித்து மகிழும்.”
ஒருவரது நற்பெயரையும் மரியாதையையும் களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிலர் செய்யும் செயல்களையும் பேசும் பேச்சுகளையும் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து தொடர்ந்து பயணிக்கக் கற்றுக்கொள்வது கடினம்தான். ஆனால், பொதுவாழ்விலும் பொதுப்பணியிலும் இருப்பவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய மனப்பக்குவமும் அதுதான்.
நமது மனசாட்சியையும் உண்மையையும் நம்பி, நமது கடமையைத் தொடர்ந்து செய்வதே இத்தகைய அவதூறுகளுக்கான சிறந்த பதில். காலம் உண்மையை வெளிப்படுத்தும். பொய்களையும் அவதூறுகளையும் பரப்புவதையே வாழ்க்கையாகக் கொண்ட இத்தகைய மனநிலை கொண்டவர்களை இறுதியில் கடவுளின் தீர்ப்பிற்கே விட்டுவிடுவது மேல்.
டேவிட்சன் ஆசீர்வாதம் ஐ.பி.எஸ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.