மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடியைக் கண்டித்து தெருவியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
மாநகராட்சி அதிகாரிகளின்
அடாவடியைக் கண்டித்து
தெருவியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பும், எதிரபுறமும் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தி பேசியும், பொருள்களை அள்ளி வீசியும், கடைபோட விடாமல் விரட்டி அடித்து அடவாடியாக செயல்பட்டுவரும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தெருவியாபார தொழிலாளர்கள் தஞ்சையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் துவக்கி வைத்தார்.
தெரு வியாபாரிகள் சட்டம் 2015-ன்;படி அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், தற்போது வியாபாரம் செய்துவரும் இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், வணிகக் குழு தேர்தல் நடத்த வேண்டும், வணிகக் குழு தேர்தல் நடத்தப்படும்வரை தெரு வியாபாரிகளை இடையூறு செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியூசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மாவட்டச் செயலாளர் துரை.மதிவாணன், மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஓய்வுபெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தெருவியாபார சங்க மாவட்டத் தலைவர் பி.சிவக்குமார், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் இரா.செந்தில்நாதன், கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.செல்வம், உடலுழைப்பு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பி.சுதா, கே.கல்யாணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
ஏஐடியூசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். முடிவில், மாநகரத் தலைவர் ஆர்.பிரபாகர் நன்றி கூறினார்.