கார்ப்பரேட் உடையிலிருந்து வெள்ளைக்கு மாறிய தொழிலதிபர் ! காரணம் இதுதானா ?
பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதும்; மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்துவதும் சகஜமான ஒன்றுதான். கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால், ”அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” ரகம்தான். ஆனால், என்ன? திருச்சியில் அந்த ஆளுமை யாரை சந்தித்து சால்வை போர்த்தினாலும் அது அரசியலாகவே பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, தீபாவளி சமயத்தில் அமைச்சர் கே.என்.நேருவை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை போர்த்தியது பரபரப்பானது. தற்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்தநாளையொட்டி, கட்சி அலுவலகத்தில் வைத்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்திருப்பதுதான் பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
ரோட்டரி இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவரும் திருச்சியை சேர்ந்த தொழிலதிபருமான MMM முருகானந்தம், தனது வழக்கமான கார்ப்பரேட் ஸ்டைல் உடையில் அல்லாமல், தேர்ந்த அரசியல்வாதியைப் போலவே இருவரும் வெண் உடை சகிதம் கை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதுதான் அரசியல் பீட்டை எகிற வைத்திருக்கிறது.
ஏற்கெனவே, துணைமுதல்வர் உதயநிதியை வைத்து சென்னை டிரேட் சென்டரில், ரோட்டரி இன்டர்நேஷனல் நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தார். அடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்தித்திருந்தார். தற்போது, அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான நெருக்கத்தை காட்டியிருக்கிறார்.
”கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்” என்பதாக, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்ததையடுத்து, தான் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான் என்பதை எல்லா வகையிலும் உறுதிபடுத்தும் வகையில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது என்றே பேசத் தொடங்கிவிட்டார்கள் அரசியல் வட்டாரத்தில்.
MMM முருகானந்தம் போட்டியிட விரும்புவது தனது சொந்த தொகுதியான திருவெறும்பூர். ஒருவேளை அது கைகூடாத பட்சத்தில் மாற்றாக எதிர்பார்ப்பது திருச்சி கிழக்கு தொகுதி. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் கட்சி ரீதியிலான நேரடி பொறுப்பாளர். திருச்சி கிழக்கு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜூம், இருபெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் அரசியல் பண்ண முடியவில்லை என்று வெளிப்படையான புலம்பலோடு வேறு தொகுதிக்கு மாறும் மனநிலையில் இருக்கிறார்.
திருச்சியின் முதன்மையிடமும் முதல் மரியாதை செய்தாயிற்று. சொந்த தொகுதியை சேர்ந்தவர், ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடையாளத்தோடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சில முன்னெடுப்புகளோடு பயணித்த அனுபவத்தையும் கொண்டவர் என்ற வகையில் அன்பிலாருடனும் நெருக்கமாக வலம் வருவதன் வழியே, திருச்சியிலிருந்து சட்டப்பேரவைக்கு செல்லவிருக்கும் எம்.எல்.ஏ.க்களுள் ஒருவராக சீட்டை உறுதிபடுத்திவிட்டார் MMM முருகானந்தம் என்றே சொல்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
— மித்ரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.